‘தமிழ்த் தேசியக் கட்சி’ தொடங்கிய ஈவிகே சம்பத் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 96

‘தமிழ்த் தேசியக் கட்சி’ தொடங்கிய ஈவிகே சம்பத் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 96
Updated on
5 min read

திமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள், கலையுலகத்தவரின் வருகைகள், முன்னணி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், மோதல்கள், தன்னுடைய கருத்துகள் அங்கீகரிக்கப்படாதது போன்றவற்றால் ஈவிகே சம்பத்துக்கு திமுக என்ற கட்சியின் மீதான பிடிப்பு மெல்ல மெல்ல நழுவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தான் அவமதிக்கப்படுகிறோம் என்பதை உணரத் தொடங்கினார். மேலும் வேலூர் பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள், சம்பத்தின் மனதை ஆறாத ரணமாக்கியது. இதனால் திமுகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தைத் தொடங்குவது என முடிவெடுத்தார்.

அதன்படி தனது ஆதரவாளர்களுடன் 19.4.1961 அன்று ‘தமிழ்த் தேசியக் கட்சி’ என்ற கட்சியைத் தொடங்கினார். சென்னை ஒற்றைவாடை கலையரங்கில் கட்சியைத் தொடங்கி வைத்து ஈவிகே சம்பத் பேசியதாவது:

தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை பாதிக்கக் கூடிய வகையில் ஒரு புது வழி வகுக்கக் கூடியுள்ளோம். இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய நிகழ்ச்சியாகும். நமது முயற்சி வெற்றி பெற்று, மக்களின் நிலையை உயர்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விலகியவர்கள் மட்டுமல்லாமல் இதுவரை விலகாதவர்களும் தி.மு.க.வின் வளையத்திற்கு அப்பால் உள்ளவர்களும் நல்ல அரசியல் கட்சி அமைந்தது என்று அதில் சேருவதற்காக இங்கே கூடியுள்ளனர்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிவதற்குப் பொருந்தாத திருமணமே காரணம் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் திருமண வேலையைத் தேடிக் கொண்டோம். குமுறிக் கொண்டிருந்தவர்கள் ஏதோ ஒரு சம்பவத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.

1946 முதலே பல சம்பவங்கள் நடந்துள்ளன. திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சியாகவோ ஜனநாயக முறைப்படியோ நடக்கவில்லை என்று அண்ணாவும் நாங்களும் வருத்தப்பட மாட்டோம். இதற்குத் தொடர்ச்சியாக தூத்துக்குடி, ஈரோடு மாநாடுகள் நடந்தன. அண்ணாவும் பெரியாரும் ஒன்று என்று மக்களிடையே பிரமை ஏற்பட்டது. ஆனால் குமுறல் தீரவில்லை. 3 ஆண்டுகள் நீடித்தது. அப்போது ஒத்துழையாமைக் கொள்கையை அணணா கடைப்பிடித்தார். பின்னர் 1949-ல் விலகினோம். ‘வெட்கப்படுகிறோம்... வேதனைப்படுகிறோம்... விரட்டப்பட்டோம்... இதோ கண்ணீர்த் துளிகள்’ என்று விலகியவர்களின் பட்டியலை அண்ணா வெளியிட்டார்.

தலைவர் நடத்தும் தி.க. தான் தி.மு.க. என்று பிரச்சாரம் செய்தோம். 1951-ல் நான் ஒரு சுற்றறிக்கையைப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பினேன். கழகத்திலுள்ள பல அமைப்புகள் செயல்படாமல் இருந்தன. பொதுச் செயலாளர் மீது கண்டனம், தடையை மீறாமல் திரும்பியவர் மீது நடவடிக்கை போன்ற விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது சொல்லுவது போலவே அப்போதும் அண்ணா சொன்னார். ‘கூடிப் பேசலாமே எழுதிவிட்டாயே’ என்றார். ஆரம்ப காலத்தில் அநாவசியமானது என்று சொன்னார்கள். ‘இப்போது சம்பத் டில்லிக்குப் போனான். தலைமைப் பதவிக்கு ஆசைப்படுகிறான்’ என்று கூறுகிறார்கள்.

கழக மாநாட்டில் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதில்லை. தீர்மானங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ‘நடிகர் பேசுவதற்கு முன்பு இவன் யாரடா தீர்மானத்தைப் படித்துக் கொண்டு’ என்று கூச்சல் எழும். சித்ரபுத்திரன் மாதிரி என்.வி.நடராசன் யார் செத்துவிட்டார் என்று அனுதாபத் தீர்மானப் பட்டியலைத் தயார் செய்வார். வைதீகர் மந்திரம் போல ஆகிவிட்டது. தீர்மானம் போடுவது கேலிக் கூத்தாகவும் விளையாட்டாகவும் ஆகிவிட்டது. மாநாட்டில் பிரதிநிதிகளை விட பார்வையாளர்கள் கூட்டம்தான் அதிகம். பிரதிநிதிக் கூட்டம் நடத்துவதில்லை.

எவன் ஒரு மணி நேரம் மூச்சு பிடித்துப் பேசுகிறானோ அவன்தான் அரசியல் தெரிந்தவனாகி விட்டான்; சிந்தித்து விவாதிக்கிறவனுக்கு இடமில்லை. சத்தம் போடுகிறவனுக்கு அரசியல் பேசத் தெரியும் என்றாகி விட்டது.

திமுக என்பது கூட்டம், விழா, தோரணம், ஊர்வலம் என்றாகி விட்டது. எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வழியில்லை. காலட்சேபம் செய்கிறவர் மாதிரி தொழில் ரீதியில் பேச்சாளர் என்ற கூட்டம் வளர்ந்து வருகிறது. குடும்பப் பாசம் என்பது செய்யாத காரியத்தை மூடி மறைக்கவே பயன்படுகிறது.

1957 தேர்தலுக்குப் பிறகு ஒரு உற்சாகம் ஏற்பட்டது. சட்டசபையில் நல்ல முறையில் நாம் பணியாற்றுவோம் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாம் ஏமாற்றம் காட்டினோம். காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்குப் போவார்கள். சைனா பஜாரில் ரிப்பன் வாங்குவார்கள் என்று வெளியூரில் கிண்டல் செய்து வந்தோம்.

ஆனால் நாம் பொறுப்போடு நடந்தோமா? கருத்தோவியன் இதை ஒரு மாநாட்டில் குறிப்பிட்டார். உடனே அண்ணா ஆத்திரமாக எழுந்து என்ன எண்ணிப் பேசுகிறாய் என்று கேட்டார். அதற்குப் பிறகு திமுகவினர் சட்டசபை வேலைகள் குறித்துப் பேச யாருக்கும் துணிவில்லை. இரண்டு மூன்று பேர் தவிர யாரும் அக்கறையாகச் சட்டசபை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது இல்லை என்றாகி விட்டது.

திமுக என்பது கூட்டம், விழா, தோரணம், ஊர்வலம் என்றாகி விட்டது. எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வழியில்லை. காலட்சேபம் செய்கிறவர் மாதிரி தொழில் ரீதியில் பேச்சாளர் என்ற கூட்டம் வளர்ந்து வருகிறது. குடும்பப் பாசம் என்பது செய்யாத காரியத்தை மூடி மறைக்கவே பயன்படுகிறது.

1957 தேர்தலுக்குப் பிறகு ஒரு உற்சாகம் ஏற்பட்டது. சட்டசபையில் நல்ல முறையில் நாம் பணியாற்றுவோம் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாம் ஏமாற்றம் காட்டினோம். காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்குப் போவார்கள். சைனா பஜாரில் ரிப்பன் வாங்குவார்கள் என்று வெளியூரில் கிண்டல் செய்து வந்தோம்.

ஆனால் நாம் பொறுப்போடு நடந்தோமா? கருத்தோவியன் இதை ஒரு மாநாட்டில் குறிப்பிட்டார். உடனே அண்ணா ஆத்திரமாக எழுந்து என்ன எண்ணிப் பேசுகிறாய் என்று கேட்டார். அதற்குப் பிறகு திமுகவினர் சட்டசபை வேலைகள் குறித்துப் பேச யாருக்கும் துணிவில்லை. இரண்டு மூன்று பேர் தவிர யாரும் அக்கறையாகச் சட்டசபை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது இல்லை என்றாகி விட்டது.

ஐந்தாண்டுத் திட்டம் நமது இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒரு அம்சம். அதன் அடிப்படையில் தென்னாடு எவ்வாறு ஓரவஞ்சனையுடன் நடத்தப்படுகிறது என்பதை நாம் சுட்டிக் காட்டி வருகிறோம். ஐந்தாண்டுத் திட்ட ஆலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. தலைவருக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார். இதைக் கிண்டலாக அமைச்சர் சுப்பிரமணியம் சுட்டிக் காட்டிப் பேசினார். இதனால் நீங்காப் பழி ஏற்பட்டு விட்டதே என்று சொன்னோம். நான் திட்டம் கொடுத்தால் ஏற்று நடத்துவார்களா என்று அண்ணா சொன்னார். அப்படியானால் நாம் சொன்னால் கேட்பார்களா என்று 15 பேரும் சட்டசபைக்குப் போகாமல் இருக்கலாமே?

பிறகு ஒருநாள் திடீரென ரூ.1000 கோடிக்கு ஒரு திட்டத்தை அண்ணா யாரையும் கேட்காமல் தயாரித்து அமைச்சரிடம் கொடுத்தார். தமிழர் வாழ்வில் நல்லெண்ணம் உள்ள எந்தப் பொருளாதார நிபுணரையும் கேட்காமல் 10 பக்கங்களில் திட்டம் தயாரித்தார். அது நகைப்புக்குரிய திட்டமாகத்தான் மாறிவிட்டது. அள்ளித் தெளித்த அவசரக் கோலமாகி விட்டது.

பட்ஜெட்டைப் படித்துவிட்டுப் பேசுங்கள் என்று மந்திரி இடித்துப் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது. அலங்கார உவமைகள் நமது குட்டுகளை உடைத்துவிட்டன. அமெரிக்காவில் அரிசி வாங்குங்கள்; அங்கே இல்லாவிட்டால் அர்ஜென்டைனாவில் வாங்குங்கள் என்று அடுக்குச் சொல்லுக்குப் பேசுவதாக மாறிவிட்டது நமது பேச்சு!

கழகத்தில் கலைஞர்கள் புகுந்தார்கள். அவர்களுக்கு அரசியல் கல்வி கொடுக்க நமக்குச் சாதனமில்லை. அதற்கு எண்ணமும் இல்லை. கலைக்கும், அரசியலுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் கலை வென்று விட்டது. கலையால் கட்சியா? கட்சியால் கலையா? எதனால் பணம் கிடைக்கும் என்ற நிலை வந்தது.

கட்சியின் தலைவர் அதில் பாதி, இதில் பாதி என்று இருப்பதால் இரண்டும் கெடும்.

அண்ணாவின் 50-வது பிறந்த நாள் விழாவில் நான் பேசும்போது அண்ணா, கழகத்துக்கு முழுக்க முழுக்க தம்மை ஒப்படைக்க வேண்டுமென்று சொன்னேன். என்ன, அப்படிச் சொல்லிவிட்டானே என்று அவருக்கு ஆத்திரம். ஆனால் இது நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது படத்துக்கு அவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இனி விட்டு விடுகிறேன் என்று வேலூர் செயற்குழுவில் அண்ணா சொன்னார்.

இவனுக்கு எம்.ஜி.ஆர். நெருக்கமில்லை. சிவாஜியிடம் புதிய பழக்கம் ஏற்பட்டு விட்டது. அதனால் கலைஞர்களைத் தாக்குகிறான் என்கிறார்கள். கென்னடி சிவாஜி கட்சியென்றால் குருச்சேவ் எம்.ஜி.ஆர். கட்சி என்று உலகத்தையே இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்.

மதுரையில் உள்ள ஒரு கழகப் பிரமுகர் இப்போது கலைத்துறைக்கு ஏஜெண்டாகி விட்டார். வெள்ளி வாள், தங்க வாள், இனி வைர வாள் என்று தன் வேலையில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் அரசியல் நியாயம் பேச முடியாது. அங்குள்ள கழகத் தலைவர் சினிமாக் கலையில் ஈடுபட்டதால் நகரசபைத் தேர்தலில் பெருமளவு தோற்றோம். அந்தப் பிரமுகரைத் திருத்த முடியும்.

அங்குள்ள கழகப் பிரமுகர் சினிமா படக் கம்பெனியில் பங்கு போட சிறப்பு நாடகம் நடத்திக் கொடுக்கும்படி கேட்கிறார். சினிமா வண்டி தள்ளுவதில் இருந்து படம் எடுப்பது வரை பல வகையில் லட்சியமாகக் கொண்டுள்ளார். கழகத்தில் உள்ளவர் ஒருவருக்குக் கோடம்பாக்கத்தில் சினிமாப் படம் எடுப்பது என்பது உயர்ந்த லட்சியம் என்றாகி விட்டது. மாவட்டத்துக்கு மாவட்டம் இந்த நோய் பரவுகிறது.

நிலச் சட்டம் பற்றி இரண்டு இரவுகள் கண் விழித்து ஒரு ஆராய்ச்சி செய்து தீர்மானம் எழுதலாம். ஆனால் அதில் உடனடியாக பலன் இல்லை. ஒரே இரவில் காதல் சீன் எழுதினால் 500 ரூபாய் கிடைக்கும் என்று கருத்து ஏற்படுகிறது. பேனாவை அப்படி ஓட வைக்கிறார்கள்.

ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராகக் கருப்புக் கொடி பிடிப்பது பற்றி கூடிப் பேசினோம். கருப்புக் கொடி பிடிப்பது தனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் ஆகஸ்ட் 15-இல் பிடிப்பது தனது மனசாட்சிக்கு மாறாக உள்ளது என்று அண்ணா சொன்னார். நடிகர்களுக்கு விதிவிலக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக் கொடி என்பது முக்கிய நிகழ்ச்சி பயங்கரமானது. அடக்கு முறை ஏற்பட்டு ராணுவம் வரும். அந்தச் சூழ்நிலையில் கலை உலகில் பயங்கரப் போட்டி வரும். ஆகவே கலைஞர்களுக்கு விதி விலக்கு வேண்டும் என அண்ணா சொன்னார். விடுதலைக்கு அழைத்துச் செல்பவரின் பேச்சா இது!

ஒரு சமயம் அடுத்த தேர்தலில் தி.மு.கழகம் தோற்றுப் போனால் எவ்வளவு கிளைக் கழகங்கள் கலைக்கப்படும்? ஆகவே கொள்கைப் பிடிப்பு இல்லாமல் கட்சியை நடத்த முடியாது. தோல்வியைக் கழகத்தால் தாங்க முடியாது.

1958-ல் வி.பி.ராமன் வீட்டில் ஒரு கருத்தரங்கு நடந்தது. திராவிட நாடு கர்த்தாவான பெரியாரே, ‘திராவிட நாடாவது வெங்காய நாடாவது’ என்று பேசிவிட்டார். இதைக் காங்கிரஸ் கட்சியினர் பெரிதாகப் பேசினார்கள். ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்த நான் இதுகுறித்து நண்பர்களுடன் ராமன் வீட்டில் பேசினேன். அப்போது கருணாநிதி இந்தச் சந்தேகம் (திராவிட நாடு) ஒரு ஆண்டுக் காலமாக தனக்கு இருந்து வருகிறது என்று கூறினார். “ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்” புத்தகம் எழுதிய மாறன், “அத்தான்! எத்தனை நாட்கள் ஊரை ஏமாற்றி வருவது” என்று கேட்பதாக கருணாநிதி கூறினார்.

‘குழப்பமாயிருக்கிறது’ என்றார் மதியழகன். ‘சொல்லி வருவதை மாற்றக் கூடாது’ என்றார்கள் ஆசைத்தம்பியும், ராஜாராமும். ‘சிந்திக்க வேண்டும்’ என்று இரா. நெடுஞ்செழியன் சொன்னார்.

பின்னர் அண்ணா வந்தார். ஆதித்தனை நம்பி எத்தனை நாள் இருக்க முடியும் என்று என்னைக் கேட்டார். ஆதித்தன் கட்சியில் சேர சம்பத் சதி என்றார்கள். அண்ணா ஆத்திரமாக மற்றவர்களை ஏசினார். கடும் சொற்களால் கருணாநிதியைக் கண்டித்தார். அதைக் கேட்டு கருணாநிதி கண் கலங்கினார்.

‘மதி! உனக்கு ஜால்ரா அடிக்கிற பழக்கம் போகவில்லையா’ என்று மதியழகனைக் கேட்டார். நான் இது முக்கிய விஷயம் என்றேன். மாநில மாநாட்டில் இதுகுறித்துப் பேசலாம். தானே தீர்மானம் கொண்டு வருவதாக அண்ணா சொன்னார்.

‘பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என்ற ஆசையிருந்தால் இம்மாதிரி எல்லாம் பேசாதே என்று கருணாநிதியிடம் சொன்னார். ‘சம்பத் சொன்னார் அதனால் நானும் சொன்னேன்’ என்று கருணாநிதி பதில் கூறிச் சமாளித்தார்.

நான் டில்லிக்குப் போய்த் திரும்பினேன். குடும்பப் பாசம் குறி பறிக்கவே பயன்பட்டது.

1960-ல் நான் சுற்றறிக்கை அனுப்பினேன். ‘பெரியார் இவன் வீட்டில் 5 நாட்கள் டில்லியில் தங்கியதால் இப்படி நடக்கிறான்’ என்று கூறினார்கள். 1958 முதல் கோஷ்டி மனப்பான்மை வளர ஆரம்பித்தது. நடிகர்களின் சிபாரிசு பேரிலேயே தமிழ்நாட்டில் தலைசிறந்த பேச்சாளர் பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

உள்ளே இருந்து சொன்னால் வீண் கலவரமே ஏற்படும். ஆகவே வெளியேறுகிறோம். புதுக் கட்சியும் அப்படியே இருக்குமா என்று கேட்கலாம். ஆனால் உள்ளத் தூய்மையோடு ஆரம்பிக்கிறோம்.

தமிழ்நாட்டில் 13-வது கட்சியாக இருக்கலாம். ஒரு சமயம் மொத்தக் கட்சிகளின் எண்ணிக்கை குறையலாம். 10 தோல்விகளை அடைந்து 12-வது கட்டத்துக்கு வந்துள்ளோம். 13-வது கட்டத்தில் வெற்றி பெறுவோம். தூய்மையை நாடு மதிக்கும். அதை (திமுக) பற்றிப் பேச இதுவே நமக்குக் கடைசி வாய்ப்பு. இனி நாம் தமிழகத்துக்குப் புதிய செய்தி தரும் முடிவை எடுக்கலாம்.”

இவ்வாறு ஈவிகே சம்பத் பேசினார்.

சம்பத் விலகல் பற்றி அண்ணா

ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது சம்பத் விலகல் குறித்து அண்ணா குறிப்பிட்டார்: “சம்பத், கழகத்தில் என்ன புண் இருக்கிறது என்று கருதினாலும் அவை விரைவில் நீக்கப்படும் என்பதை சம்பத்துக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். புண் ஆறியதும் சம்பத் சேருவார் என்று நம்புகிறேன்.”

ஆனால் அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறாமலேயே போய்விட்டது...!

(தொடர்வோம்)

‘தமிழ்த் தேசியக் கட்சி’ தொடங்கிய ஈவிகே சம்பத் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 96
அண்ணா - ஈ.வி.கே.சம்பத்தை இணைத்த அன்புச் சங்கிலி - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்: அத்தியாயம் 95

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in