முதல் மொழி அமைப்பு மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்தும் 12 மணி நேர தொடர் கதையாடல் நிகழ்வு, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் – பிரபஞ்சன் அரங்கில் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. 5 வயது முதல் 85 வயது வரையிலான அனைவரும் பங்கேற்கலாம்.
கதைகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட வகையும் வரையறுக்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு கதையும் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்கும் அதிகபட்சம் 20 நிமிடங்களுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், தனிநபர் / சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலான எதிர்மறை உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும், இதில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 72000 19299 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சூர்ய, அக் ஷர விருதுகள்: எழுத்தாளர் சிவசங்கரி, தனது சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை மூலம் சூர்ய, அக் ஷர என இரண்டு இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறார். ரூ.3 லட்சம் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு, பாராட்டுப் பத்திரம் கொண்ட சூர்ய விருது, தமிழ் இலக்கியத்துக்குத் தனது படைப்புகள் மூலம் பங்களித்த ஓர் எழுத்தாளருக்கும், ரூ.2 லட்சம் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு, பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்டஅக் ஷர விருது, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த புத்தகங்களில் ஒன்றுக்காக அதன் ஆசிரியருக்கும் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு சூர்ய படைப்பாற்றல் விருது எழுத்தாளர் நரசய்யாவுக்கும், சிறந்த புத்தகத்துக்கான அக் ஷர விருது மஞ்சுநாத் எழுதிய ‘அப்பன் திருவடி’ நூலுக்கும் வழங்கப்படவுள்ளன. அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் கே.சுமதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.