சென்னை: ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழா, ஜனவரி 17, 18 தேதிகளில் சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. பன்மைத்துவம் மிக்க தலைப்புகளும் எழுத்தாளுமைகளும் நிறைந்ததாக இந்த இலக்கியத் திருவிழா அமையவிருக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவம், உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகள், தற்போதைய சூழலில் இதழியல் உள்பட பல அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. சிறப்பான படைப்புகளைத் தந்த படைப்பாளிகளைக் கவுரவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரான டாக்டர் நிர்மலா லக்ஷ்மண், இந்தத் திருவிழாவின் இயக்குநராகச் செயல்படுகிறார்.
நிகழ்வின் தொடக்க அமர்வில் ‘அரசமைப்பு முக்கியத்துவம்’ குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துரையாடுகிறார். 2025-ம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசைப் பெற்ற ‘ஹார்ட் லேம்ப்’ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் பானு முஷ்டாக், அந்த பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘தி லோன்லினெஸ் ஆஃப் சோனியா அண்ட் சன்னி’ நாவலின் ஆசிரியர் கிரண் தேசாய் ஆகியோர் தங்களது படைப்புகள் குறித்துப் பேசுகின்றனர்.
இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், பிரிட்டிஷ் தத்துவவியலாளர் ஏ.சி.கிரேலிங், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனப் பேராசிரியர் தேவேஷ் கபூர், இந்திய அரசின் முன்னாள் தூதரும், எழுத்தாளருமான கோபாலகிருஷ்ண காந்தி, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உட்பட பலர் இதில் உரையாற்ற இருக்கின்றனர்.
‘டேஸ் அட் தி மொரிசகி புக்ஷாப்' நூலாசிரியர் சடோஷி யாகிசாவா, சாகித்ய யுவ புரஸ்கார் விருதை ‘பர்னிங்’ எனும் தனது முதல் நாவலுக்காகப் பெற்ற மேகா மஜும்தார், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலைப் பேசுகிற ‘சேட் டைகர்’ நூலாசிரியர் நேய்ஸ் சீனோ உள்ளிட்ட சர்வதேச எழுத்தாளுமைகள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
வட்டார இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் குறித்த விவாதங்களும் விழாவில் நடைபெறுகின்றன. எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அப்புப்பன், இமையம், மனோரஞ்சன் வியாபாரி, பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் உடனான உரையாடல்கள் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாகத் திகழவிருக்கின்றன. விருதுகளை வெல்கிற புத்தகங்களைப் பதிப்பிப்பது பற்றிய தங்களது கருத்துகளை எலிசபெத் குருவில்லா, மானசி சுப்பிரமணியம், கனிஷ்காகுப்தா ஆகியோர் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
கலைகளின் மூலமாகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மதிப்புமிக்க தருணங்களைப் பரிசளிக்கும் விதமாகவும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ அமையவிருக்கிறது. இயக்குவர் மாரி செல்வராஜ், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் ஆகியோர் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். நிர்மலா லக்ஷ்மணின் ‘தமிழர்கள்’ ஆங்கில நூல் தொடர்பான நாடக வாசிப்பு அமர்வை பிரசன்னா ராமஸ்வாமி இயக்குகிறார்.