எத்தனையோ பாரதிகள் இருக்கலாம். ஆனாலும் ‘பாரதி’ என்று தமிழ் மக்கள் கொண்டாடும் ஒரே கவிஞன் எட்டயபுரத்தில் உதித்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மட்டும்தான். அவனது வாழ்க்கையே வறுமையுடன் போராடுவதாக இருந்தது.
1919-ல் அவனது வறுமையை ஓரளவாவது போக்க நிதியுதவி கேட்டு, எட்டயபுரம் மன்னருக்குக் கடிதம் எழுதச் சொல்லி நெருங்கிய நண்பர்கள் தூண்டியபோது முதலில் மறுத்த பாரதி, முடிவில், “சரி, கடிதம் எதற்கு? கவிதையே எழுதுகிறேன்” என்று சொல்லி, அறுசீர் விருத்தப் பாக்கள் ஐந்து கொண்ட சீட்டுக்கவி ஒன்றை எழுதினான்.
அந்தச் சீட்டுக்கவியில், மன்னனின் சிறப்பியல்பை முதலில் சொல்லிவிட்டு, “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல் புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று தன் கவிதையின் சிறப்பையும் விவரிக்கிறான்.
தொடர்ந்து வரும் ஒரு விருத்தத்தில் தனக்காக அவன் என்ன கேட்டான் தெரியுமா? இதோ: வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் கவிதையினை, வேந்தனே, நின் நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி, ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள், பொற்பைகள், ஜதிபல்லக்கு வயப்பரிவாரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி வாழ்க நீயே!
“மன்னனே, உன் சந்நிதியாகிய அரண்மனைக்கு நான் வந்து, என் கவிதைகளைப் பாடக் கேட்டு, அவற்றை நீ நன்கு போற்றி, சால்வை, பொற்பை போன்ற பரிசுகள் தந்து, ரசிகர்களாகிய பரிவாரங்கள் புடை சூழ, வெற்றிப் பறைகள் முழங்க, ஜதி பல்லக்கில் என்னை அனுப்பி வைக்க வேண்டும்” என்பதுதான் அந்த கம்பீரமான கோரிக்கை.
அந்தக் கவிதைக் கடிதம் அனுப்பப்பட்டு, அது எட்டயபுர அரசர் பார்வைக்குச் சென்றதா என்று தெரியவில்லை. ஆனால், அவனுடைய அந்தக் கோரிக்கை, நிறைவேறாத கனவாகவே அமைந்துவிட அதிலிருந்து இரண்டே ஆண்டுகளில், 1921-ல் அவன் உயிர் பிரிந்தது.
வயப் பரிவாரங்களோடு ஜதி பல்லக்கு ஊர்வலம் கேட்ட மகாகவியின் பூத உடல், வெறும் மூங்கில் கட்டிலில் 14 நபர்கள் உடன்வர சென்னை கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டை அடைந்து, எரி மூட்டப்பட்டது.
ஒவ்வொரு பாட்டிலும், தன் பேச்சிலும் மூச்சிலும், இந்த நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்குமான கோரிக்கைகள் வைத்துப் போராடியவன் பாரதி. அவன் தனக்கென்று கேட்ட ஒரே கோரிக்கை கைகூடவில்லை; அதுவும், தனக்காக அன்றித் தன் கவிதைகளுக்காக அவன் கண்ட ஒரே கனவு நிறைவேறவில்லை.
“புவியனைத்தும் போற்றிடவான் புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசையென்னால் கழிந்த தன்றே!” என்று மிகுந்த தன்னம்பிக்கையோடு, சரியாகச் சொன்ன கவிஞனின் அந்த மகத்தான கனவு நிறைவேறவில்லையே என்ற வசை நம்மால் கழியட்டுமே என்றுதான் 32 ஆண்டுகளாக அவனுடைய பிறந்த நாளை, பாரதி திருவிழாவாகச் சிறப்பாகக் கொண்டாடி வரும் வானவில் பண்பாட்டு மையம் அந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக “ஜதி பல்லக்கு” ஊர்வலத்தை நடத்தி வருகிறது.
எட்டயபுரத்திலும் ஜதி பல்லக்கு.. இதுவரை சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஜதி பல்லக்கு ஊர்வலம் மூலம் அந்தக் கனவு ஓரளவு நிறைவேறிய நிலையில், இந்த ஆண்டு அந்தக் கனவை முழுமையாக நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்! எந்த எட்டயபுரம் அரண்மனையில் தனக்கு ஜதி பல்லக்கு முதலான சிறப்புகள் செய்யப்பட வேண்டும் என்று பாரதி விரும்பினானோ, அதே எட்டயபுரம் அரண்மனையில் வரும் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ஜதி பல்லக்கு ஊர்வலத்தோடு பாரதி திருவிழா தொடங்குகிறது.
தொடர்ந்து, அந்த அரண்மனை வளாகத்தில், 3,000 பேர் அமரக் கூடிய வசதிகளுடன் சீர் செய்யப்பட்டு வரும் அரண்மனை மைதானத்தில், பாரதியின் சிலை திறக்கப்படுகிறது. காணக் கண் கோடி வேண்டுமே!
- கட்டுரையாளர்: கே.ரவி