சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பான ‘உலக சரித்திரம்” நூல் வெளியிடப்பட்டது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பான ஆங்கில நூலை, முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அழகேசன் தமிழில் மொழிபெயர்த்த ‘உலக சரித்திரம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுடன், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா தொகுத்து எழுதி, வரும் நவம்பர் 19-ம் தேதி வெளியிடப்படவுள்ள ‘இந்திரா காந்தியின் அரிய புகைப்பட வரலாறு’ என்ற நூலின் முன்பதிவு திட்ட தொடக்க விழாவும் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேருவின் ‘உலக சரித்திரம்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, ‘இந்திரா காந்தியின் அரிய புகைப்பட வரலாறு’ நூலின் முன்பதிவு திட்டத்தையும் மாணிக்கம் தாகூர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசும்போது, “உலக சரித்திரம் நுாலை, மாணவர்கள், அரசியல்வாதிகள் படிக்க வேண்டும்” என்றார்.
கோபண்ணா பேசும்போது, “ராஜீவ்காந்தி குறித்தும், தமிழக காங்கிரஸ் வரலாறு குறித்தும் நுால்கள் எழுத இருக்கிறேன்” என்றார். கோபண்ணா டெல்லியில் தங்கியிருந்து இந்திராவின் அரிய புகைப்படங்களை சேகரித்த பணி பாராட்டுக்குரியது” என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. கே.சுப்பராயன், விசிக எம்.பி. ரவிக்குமார், காங்கிரஸ் எம்.பி.க்கள் சசிகாந்த் செந்தில், விஜய்வசந்த், தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.