படம்: ஐஏ மெட்டா

வாழ்வியல்

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி ‘எங்கே’ இருக்கிறது? | டீனதிகாரம் 12

பதின்ம வயதினரின் உலகமும் உளவியலும்

சில்வியா சிவஞானம்

ஒரு சிறிய குழந்தைக்கு அதன் பிறந்தநாளில் பிடித்த பொம்மையை வாங்கிக் கொடுத்தால், அது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கலாம். அந்தப் பொம்மையை வைத்து பல நாட்கள் விளையாடலாம்; அதை மற்றவர்களிடம் காட்டலாம்; அந்தப் பரிசு கிடைத்த தருணத்தை நினைவில் வைத்திருக்கலாம்.

குழந்தையின் மகிழ்ச்சியை உருவாக்குவதற்கு நாம் ஒரு பொருளை வாங்கிக் கொடுப்பது, ஒரு சிறிய அவுட்டிங் செல்வது, அதன் விருப்பமான உணவைத் தயாரிப்பது எனப் பல வழிகள் இருக்கலாம்.

ஆனால், குழந்தைகள் வளர்ந்து பதின்பருவத்தை அடையும்போது, அவர்களுடைய மகிழ்ச்சியின் தன்மையும் மாறத் தொடங்குகிறது. அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், தேவையான வசதிகளை ஏற்படுத்துவதும் முக்கியம்தான். அதே நேரத்தில், அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படுவதும், அவர்களுடைய பார்வைகள் புரிந்துகொள்ளப்படுவதும், அவர்களுடன் சமமான மரியாதையுடன் உரையாடுவதும் முக்கியத்துவம் பெறலாம்.

இந்த மாற்றத்தைப் பெற்றோர்கள் கவனிக்கிறோமா? மகிழ்ச்சி என்பது அவர்கள் விரும்புவதை வாங்கிக் கொடுப்பது மட்டுமா?

குழந்தைகளின் ஆரம்பகால வாழ்க்கையில் பெற்றோர் பல தேவைகளை அவர்களுக்காகத் தீர்மானிக்கிறார்கள். எதை வாங்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும், எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், எப்போது தூங்க வேண்டும் எனப் பல விஷயங்களில் பெற்றோரின் முடிவுகள் முக்கியமானவை. குழந்தைகளின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இந்த வழிகாட்டுதல் அவசியமாக இருக்கலாம்.

ஆனால், பதின்பருவத்தில் குழந்தைகள் தங்களுடைய கருத்துகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள நடைமுறைகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். எது நியாயமானது, எது நியாயமற்றது என்று சிந்திக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களுடைய கேள்விகள் பெற்றோருக்கு எதிரானதாகத் தோன்றலாம். ஆனால் அவை அவர்களின் சிந்தனை வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

அந்தக் கேள்விகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய நடத்தையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய சிந்தனையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாகப் பார்க்க முடியுமா?

“அவர்களுக்கு மட்டும் ஏன் சொல்லவில்லை?” - ஒரு குடும்பத்தில் நடக்கும் சிறிய உரையாடல்

ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் பேசும்போது குழந்தைகள் அமைதியாக இருக்க வேண்டும், பெரியவர்களுடைய முடிவுகளை எதிர்க்கக்கூடாது, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கலாம். இந்த விதிமுறைகள் பல குடும்பங்களில் மரியாதை மற்றும் ஒழுக்கம் என்ற பெயரில் பின்பற்றப்படுகின்றன.

ஒருநாள் குடும்பத்தில் ஒருவர் மற்றொருவரிடம் கோபமாகக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அந்தக் குழந்தை அதைக் கவனித்து, “நாம் இப்படிப் பேசக்கூடாது என்று எனக்குச் சொல்கிறீர்கள். ஆனால் பெரியவர்கள் இப்படிப் பேசும்போது ஏன் யாரும் அவர்களிடம் சொல்லவில்லை?" என்று கேட்கிறது.

அந்தக் கேள்வி பெற்றோருக்கு சவாலாக இருக்கலாம். “அவர் பெரியவர்; நீ கேள்வி கேட்கக்கூடாது” என்று சொல்லி உரையாடலை முடித்துவிடுவது எளிதாக இருக்கலாம். ஆனால், குழந்தை சுட்டிக்காட்டிய கருத்தில் நியாயம் இருக்கிறதா என்பதைப் பற்றி பேசுவதற்கு இடமளித்தால் என்ன நிகழும்?

“நீ சொல்வது உண்மைதான். பெரியவர்கள் என்பதற்காக மற்றவர்களிடம் மரியாதையற்ற முறையில் பேசுவது சரியாகிவிடாது. கோபம் வந்தாலும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் பெரியவர்களும் தவறு செய்கிறார்கள். அதை நாமும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று உரையாடலைத் தொடரலாம்.

இத்தகைய உரையாடலில் குழந்தையின் கருத்தை ஏற்றுக்கொள்வது என்பது குடும்பத்தின் ஒழுங்கை கைவிடுவது அல்ல. மாறாக, மரியாதை என்பது வயதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல; ஒருவர் மற்றவரை எப்படி நடத்துகிறார் என்பதிலும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவலாம்.

அந்தக் குழந்தைக்கு அன்றைய உரையாடல் ஒரு சிறிய அனுபவமாக இருக்கலாம். ஆனால், தன்னுடைய கருத்தைச் சொன்னதற்காகத் தண்டிக்கப்படாமல், அதைப் பற்றி விவாதிக்கவும், பெற்றோர்களும் தங்களுடைய கருத்தை மாற்றிக்கொள்ளவும் முடியும் என்பதை உணர்வது, குடும்பத்தில் தனக்கான இடம் இருப்பதாக உணர உதவலாம்.

கருத்துகளுக்கு இடமளிப்பதும் மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம். பதின்பருவக் குழந்தைகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும், முடிவுகளில் பங்கேற்பதற்கும், தங்களுடைய உணர்வுகளைப் பகிர்வதற்கும் விரும்பலாம். எல்லா முடிவுகளையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். ஆனால், அவர்களுடைய கருத்துகள் முக்கியமானவை என்பதை குடும்ப உறவுகளில் உணர்த்துவது அவர்களுடைய belongingness-ஐ வலுப்படுத்தலாம்.

குடும்பத்தில் ஒரு விதிமுறை இருக்கும்போது, அது ஏன் இருக்கிறது என்பதை விளக்குவது, குழந்தைகள் கேள்வி எழுப்பும்போது அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, கருத்து வேறுபாடுகளிலும் மரியாதையுடன் பேசுவது ஆகியவை குழந்தைகளுக்கு குடும்பத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கலாம்.

ஒரு குழந்தை “எனக்கு இது நியாயமாகத் தெரியவில்லை” என்று சொன்னால், அந்தக் கருத்தை உடனடியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அது ஏன் அப்படித் தோன்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

சில நேரங்களில் பெற்றோர்களும் தங்களுடைய நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யலாம். சில நேரங்களில் குழந்தைகளுக்கு அந்த விதிமுறையின் பின்னால் இருக்கும் காரணத்தை விளக்கலாம். இரண்டுமே உரையாடலின் பகுதிகள்தான்.

குழந்தைகளின் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்வது என்பது அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் செய்வதற்கான அனுமதி வழங்குவது அல்ல. அவர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும், விவாதிப்பதற்கும், பெற்றோர்களுடன் இணைந்து முடிவுகளைப் புரிந்துகொள்வதற்கும் இடமளிப்பதாகும்.

மகிழ்ச்சியை உருவாக்குவது பெரிய செயல்களால் மட்டுமல்ல குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது, சமைப்பது, திரைப்படம் பார்ப்பது, நடைப்பயிற்சி செல்வது போன்ற செயல்பாடுகள் மகிழ்ச்சியான அனுபவங்களை உருவாக்கலாம். ஆனால், அந்தச் செயல்பாடுகளைத் தாண்டியும் குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி உருவாகலாம்.

குழந்தைகள் பேசும்போது கவனமாகக் கேட்பது, அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயத்தை உணர்வது, கருத்து வேறுபாடுகளிலும் அவர்களை மரியாதையுடன் நடத்துவது, அவர்களுடைய ஆர்வங்களைப் புரிந்துகொள்வது போன்றவை உறவின் தரத்தை மாற்றலாம்.

பெற்றோர்களும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்; தங்களுக்குத் தெரியாத விஷயங்களை குழந்தைகளிடம் கேட்கலாம்; சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால் அதை ஒப்புக்கொள்ளலாம். இத்தகைய உரையாடல்கள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்குகின்றன.

குழந்தைகளின் மகிழ்ச்சியை நாம் பெரும்பாலும் அவர்கள் சிரிக்கும் தருணங்களில், அவர்கள் விரும்பியதைப் பெறும்போது, அவர்கள் சாதிக்கும்போது கவனிக்கிறோம். ஆனால், அவர்கள் தங்களுடைய கருத்துகளைச் சொல்லும்போது, அந்தக் கருத்துகள் மதிக்கப்படும்போது, குடும்பத்தில் ஓர் உரையாடலின் பகுதியாக இருக்கும்போது உருவாகும் மகிழ்ச்சியையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நல்லவற்றையும் கவனிக்கக் கற்றுக்கொள்வது நம்முடைய அன்றாட வாழ்க்கையில், ஏதாவது ஒரு விஷயத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே அதிகமாக இருக்கிறது.

குழந்தைகள் படிப்பில் இன்னும் முன்னேற வேண்டும், இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டும், அவர்களுடைய நடத்தையில் சில மாற்றங்கள் வர வேண்டும் என்று நாம் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். ஒரு விஷயம் சரியாக இல்லாவிட்டால் அதைச் சுட்டிக்காட்டி, எப்படித் திருத்துவது என்று யோசிக்கிறோம். ஆனால், ஏற்கெனவே நன்றாக நடந்த ஒரு விஷயத்தை நின்று கவனித்து, அதைப் பாராட்டி, அதில் மகிழ்வதற்கு நாம் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்?

ஒரு குழந்தை வீட்டில் தனது கருத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம், ஒரு பொறுப்பைச் சிறப்பாகச் செய்திருக்கலாம், குடும்பத்தினருடன் ஒரு நல்ல உரையாடலில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது ஒரு சிறிய விஷயத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், நாம் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், எதை மேம்படுத்த வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தும்போது, அந்த அனுபவத்தின் மகிழ்ச்சியை உணரவும் பகிரவும் தவறிவிடுகிறோம்.

குழந்தைகளுக்கு நன்றியுணர்வு (Gratitude), நல்ல அனுபவங்களை ரசித்தல் (Savoring) போன்ற உணர்வுகளை அறிமுகப்படுத்துவது என்பது, எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துவது அல்ல. மாறாக, வாழ்க்கையில் சவால்களும் குறைகளும் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், நமக்கு மகிழ்ச்சி அளித்த அனுபவங்கள், உறவுகள், தருணங்கள் ஆகியவற்றையும் கவனிக்கக் கற்றுக்கொள்வதாகும்.

உதாரணமாக, குடும்பத்துடன் ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வந்தபோது, அந்த நாளில் எது மிகவும் பிடித்திருந்தது என்று குழந்தையிடம் பேசலாம். அன்றைய நாளில் சாப்பிட்ட உணவு, பார்த்த இடம் மட்டுமல்ல; குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தது, ஒரு விஷயத்தில் அனைவரும் சிரித்தது, தனது கருத்தை மற்றவர்கள் கவனித்தது போன்ற அனுபவங்களையும் குழந்தை மகிழ்ச்சியாக நினைவுகூரலாம்.

இதுபோன்ற உரையாடல்கள் குழந்தைக்கு தனது மகிழ்ச்சியின் காரணங்களை அடையாளம் காண உதவுகின்றன. மேலும், பெற்றோர்களும் குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

உளவியல் ஆராய்ச்சிகளில் மனஅழுத்தம், மனச்சோர்வு, கவலை, பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், மகிழ்ச்சி, நன்றியுணர்வு, நேர்மறை உணர்வுகள், மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நல்ல அனுபவங்களை எவ்வாறு உணர்கிறார்கள், அவற்றை எவ்வாறு தக்கவைத்துக்கொள்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வது உளவியல் நலனில் முக்கியமான பகுதியாக கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.

குழந்தைகளின் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்வதும், அவர்களுடன் மகிழ்ச்சியான அனுபவங்களை உருவாக்குவதும், ஏற்கனவே நிகழ்ந்த நல்ல தருணங்களை உணர்ந்து ரசிப்பதும் குடும்ப உறவுகளை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றலாம்.

குழந்தைகளின் வாழ்க்கையில் எல்லா சவால்களையும் நீக்கிவிட நம்மால் முடியாது. ஆனால், அவர்கள் தங்களுடைய கருத்துகளுடன், உணர்வுகளுடன், ஆர்வங்களுடன் குடும்பத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என்பதை உணரச் செய்ய முடியும்.

சில நேரங்களில், நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான பரிசு, அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்பதற்கான நமது நேரமும், அவர்களுடைய கருத்துகளுக்கு நாம் அளிக்கும் மரியாதையும், நம்முடன் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியான தருணங்களை நாமும் உணர்ந்து ரசிப்பதும்தான்.

சிந்தியுங்கள்: குழந்தைகளின் வாழ்க்கையில் உள்ள எல்லா சவால்களையும் நீக்கிவிட நம்மால் முடியாது. ஆனால், அவர்கள் தங்களுடைய கருத்துகளுடன், உணர்வுகளுடன், ஆர்வங்களுடன் குடும்பத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என்பதை உணரச் செய்ய முடியும்.

சில நேரங்களில், நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான பரிசு, அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்பதற்கான நமது நேரமும், அவர்களுடைய கருத்துகளுக்கு நாம் அளிக்கும் மரியாதையும்தான்.

இன்னும் பேசுவோம்...

தொடர்புக்கு: silviaise2021@gmail.com

Edited by ஷாலினி

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT