பிரதிநிதித்துவப் படம்: மெட்டா ஏஐ
“அவனைப் பார்த்தியா? ஒரே அடியில அடக்கிட்டான்!”
“அவளுக்கு இப்பவே பாய் ஃப்ரெண்ட் இருக்கான் தெரியுமா?”
“அவன் யாருக்கும் பயப்பட மாட்டான். அவன்தான் நம்ம கேங்ல மாஸ்!”
இப்படியான உரையாடல்கள் இன்றைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே நாம் கேட்கக்கூடியவை. ஒரு குழந்தைக்கு மற்றவர்களை அடக்கிப் பேசுவதில் கெத்து இருக்கலாம். இன்னொரு குழந்தைக்கு சண்டையிடுவதில் இருக்கலாம். சிலருக்கு காதலன் அல்லது காதலி இருப்பது தங்களுடைய அந்தஸ்தை உயர்த்துவதாகத் தோன்றலாம். வேறு சிலருக்கு விலையுயர்ந்த பொருட்கள், உடை, தோற்றம் அல்லது சமூக வலைதளங்களில் கிடைக்கும் பாராட்டுகள் பெருமைக்குரியதாக இருக்கலாம்.
ஆனால், இந்தப் பெருமையின் அடையாளங்கள் குழந்தைகளிடம் எப்படித் தோன்றுகின்றன? எது அவர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்களைக் கற்றுக்கொடுக்கிறது? ஒரு குறிப்பிட்ட மாதிரியில் நடந்துகொண்டால்தான் மற்றவர்கள் தங்களை மதிப்பார்கள் என்று அவர்கள் ஏன் நினைக்கிறார்கள்? இவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்தப் புரிதலை உருவாக்குவது யார்?
குழந்தைகள் தங்களைப் பற்றிய புரிதலைத் தனியாக உருவாக்குவதில்லை. வீட்டில் பெரியவர்கள் பேசும் விதம், பள்ளியில் நண்பர்கள் நடந்துகொள்ளும் முறை, திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் எனப் பலவற்றிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
உதாரணமாக, பள்ளியில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அடிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அதைச் சுற்றியிருக்கும் நண்பர்கள், “சூப்பர்டா! யாருக்கும் பயப்படாதே!” என்று பாராட்டுகிறார்கள்.
அந்தப் பாராட்டு அவனுக்கு மகிழ்ச்சியையும் ஒரு விதமான அங்கீகாரத்தையும் தருகிறது. அடுத்த முறை பிரச்சினை ஏற்படும்போதும், தன்னை நிரூபிக்க அதேபோன்ற நடத்தையைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தச் செயல் சரியானதா, தவறானதா என்பதைவிட, அதன் மூலம் நண்பர்களிடம் கிடைத்த அங்கீகாரம் அவனுக்கு முக்கியமாகத் தோன்றலாம்.
மற்றவர்கள் செய்வதைப் பார்த்தும், ஒரு செயலுக்குக் கிடைக்கும் பாராட்டுகள் மற்றும் எதிர்வினைகளைக் கவனித்தும் குழந்தைகள் நடத்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
சமூக வலைதளங்களிலும் இதேபோன்ற தாக்கம் இருக்கலாம். ஆவேசமாகப் பேசுவது, மற்றவர்களை அவமானப்படுத்துவது, சண்டையிடுவது போன்ற காட்சிகளுக்கு அதிகமான பார்வைகளும் பாராட்டுகளும் கிடைப்பதைப் பார்க்கும்போது, இத்தகைய நடத்தைகளே ஒருவரைத் தனித்துக் காட்டுகின்றன என்று குழந்தைகள் நினைக்கலாம்.
திரைப்படங்களில் கதாநாயகன் கோபமாகப் பேசுவது, எதிரிகளை அடிப்பது போன்ற காட்சிகள் சில நேரங்களில் துணிச்சலின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகின்றன. குழந்தைகள் அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, துணிச்சலுக்கும் வன்முறைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் போகலாம்.
ஆண் குழந்தை இப்படித்தான் இருக்க வேண்டும்; பெண் குழந்தை இப்படித்தான் இருக்க வேண்டும்!
குழந்தைகளின் ‘கெத்து’ குறித்த புரிதலைப் பேசும்போது, பாலினம் சார்ந்த சமூக எதிர்பார்ப்புகளையும் கவனிக்க வேண்டும்.
ஒரு பையன் அழுதால், “என்னடா பொம்பளை மாதிரி அழற?” என்று கேட்பது; பயத்தை வெளிப்படுத்தினால், “பையனா இருந்துக்கிட்டு இவ்வளவு பயமா?” என்று சொல்வது இன்னமும் பல இடங்களில் நடக்கிறது. இதன் மூலம் ஆண் குழந்தைகள் தங்களுடைய பயம், சோகம், வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது என்றும், எப்போதும் தைரியமாகவும் ஆதிக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கற்றுக்கொள்ளலாம்.
மறுபுறம், ஒரு பெண் குழந்தை தன்னுடைய கருத்தைத் துணிச்சலாகச் சொன்னால், நண்பர்களுடன் சுதந்திரமாகப் பழகினால் அல்லது தனக்குப் பிடித்த உடையை அணிய விரும்பினால், அவளைப் பற்றிய விமர்சனங்கள் எழலாம். “பெண் குழந்தை என்றால் கொஞ்சம் அடக்கமாக இருக்க வேண்டும்”, “இவ்வளவு தைரியமாகப் பேசக்கூடாது” போன்ற அறிவுரைகள் அவளுடைய இயல்பான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு வளரும்போது, ஆண் குழந்தை தன்னுடைய உணர்வுகளை மறைப்பதையும், பெண் குழந்தை தன்னுடைய விருப்பங்களை ஒதுக்கிவைப்பதையும் கற்றுக்கொள்ளலாம். சமூகத்தில் மதிக்கப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட மாதிரியில் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகலாம்.
ஆனால் ஒரு பையன் உணர்ச்சிவசப்படுவது பலவீனம் அல்ல. ஒரு பெண் தன்னுடைய கருத்தை உறுதியாகச் சொல்வது தவறும் அல்ல. தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும், தனக்கான முடிவுகளை எடுக்கவும், மற்றவர்களை மதிக்கவும் இருபாலருக்கும் சமமான உரிமை இருக்கிறது.
எல்லோருக்கும் பிடித்த குழந்தையாக இருக்க வேண்டுமா?
ஒரு குழந்தை எப்போதும் எல்லோருக்கும் பிடித்த குழந்தையாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், நண்பர்களுடன் ஒத்துப்போக வேண்டும், பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், தோற்றத்திலும் நடத்தையிலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யலாம். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது.
தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்தால், தான் தோல்வியடைந்துவிட்டதாக நினைக்கலாம். நண்பர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தன்னிடம் ஏதோ குறை இருக்கிறது என்று நம்பலாம்.
மற்றவர்களைப் போல அழகாகவோ, திறமையாகவோ, பிரபலமாகவோ இல்லை என்று தன்னைத் தாழ்வாக நினைக்கலாம். பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாதபோது, அவர்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றவுணர்வு கொள்ளலாம்.
இங்கு கவனிக்க வேண்டியது, ஒரு குழந்தை தன்னுடைய மதிப்பைத் தன்னுடைய இயல்புகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் பார்க்கிறதா அல்லது மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் பார்க்கிறதா என்பதுதான்.
தொடர்ந்து மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்கும் குழந்தை, தன்னுடைய விருப்பங்களையும் உணர்வுகளையும் மறைக்கத் தொடங்கலாம்.
சில குழந்தைகள் சிறிய சம்பவங்களைக்கூட மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள். நண்பர் ஒருவர் பேசாமல் சென்றுவிட்டால், “யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை” என்று நினைக்கலாம். ஒரு சிறிய விமர்சனம் வந்தால்கூட, தன்னைப் பற்றிய முழுமையான எதிர்மறையான முடிவுக்கு வந்துவிடலாம். ஒவ்வொரு குழந்தையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் வேறுபடும். எனவே, பெரியவர்களுக்கு சிறியதாகத் தோன்றும் ஒரு சம்பவம் குழந்தைக்கு உண்மையிலேயே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.
இந்த மன உளைச்சல் தொடர்ந்து அதிகரித்து, தனிமை, நம்பிக்கையின்மை, தன்னைப் பற்றிய வெறுப்பு போன்ற உணர்வுகளுடன் இணைந்தால், குழந்தையின் மனநலத்தைப் பாதிக்கலாம். சில தீவிரமான சூழல்களில் தற்கொலை எண்ணங்களும் உருவாகக்கூடும்.
தற்கொலை எண்ணங்களை ஒரு சம்பவத்துக்கோ, ஒரு காரணத்துக்கோ மட்டும் தொடர்புபடுத்த முடியாது. பல்வேறு உளவியல், குடும்ப மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கலாம்.
எனவே, குழந்தை தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினாலோ, தற்கொலை பற்றிப் பேசினாலோ அதை வெறும் கோபத்தின் வெளிப்பாடாகவோ கவனத்தை ஈர்க்கும் முயற்சியாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாகப் பாதுகாப்பையும் உரிய மனநல உதவியையும் உறுதிப்படுத்த வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் உருவாகும் புரிதல் பெரியவர்களாகும்போது என்னவாகிறது?
குழந்தைப் பருவத்தில் உருவாகும் எல்லா எண்ணங்களும் அப்படியே பெரியவர்களாகும்போதும் தொடரும் என்று சொல்ல முடியாது. இருப்பினும், தொடர்ந்து கிடைக்கும் பாராட்டுகள், விமர்சனங்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் ஒருவருடைய சுயமதிப்பு, உறவுகள் மற்றும் நடத்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
உதாரணமாக, கோபத்தை வெளிப்படுத்துவது ஆண்மையின் அடையாளம் என்று தொடர்ந்து சொல்லிக் கேட்கும் ஒரு பையன், வளர்ந்த பிறகு தன்னுடைய துணையிடம் கோபமாகப் பேசுவதையோ, கட்டுப்படுத்த முயல்வதையோ இயல்பானதாக நினைக்கலாம்.
அதேபோல், சிறுவயதிலிருந்தே பெண் குழந்தை எப்போதும் விட்டுக்கொடுக்க வேண்டும், குடும்பத்தின் அமைதிக்காகத் தன்னுடைய விருப்பங்களை ஒதுக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்டால், வயது வந்த பிறகும் உறவுகளில் தன்னுடைய தேவைகளை வெளிப்படுத்தத் தயங்கலாம்.
மற்றவர்களின் அங்கீகாரம் கிடைத்தால்தான் தனக்கு மதிப்பு இருக்கிறது என்று நினைக்கும் ஒருவர், வளர்ந்த பிறகும் தன்னுடைய முடிவுகளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே எடுக்கலாம். தன்னுடைய உண்மையான விருப்பம் என்ன என்பதைவிட, சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடந்துகொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கலாம்.
கெத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது!
தனக்காகப் பேசுவது, தவறான விஷயங்களை எதிர்ப்பது, தன்னுடைய எல்லைகளைப் பாதுகாப்பது, தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சி செய்வது ஆகியவை தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள். ஆனால் மற்றவர்களைப் பயமுறுத்துவது, அடிப்பது, அவமானப்படுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது தன்னம்பிக்கை அல்ல.
ஒரு குழந்தை தனது நண்பர்களிடம், “எனக்குப் பிடிக்கவில்லை; இதைச் செய்ய மாட்டேன்” என்று சொல்வது துணிச்சல். நண்பர்கள் அனைவரும் ஒரு செயலைச் செய்யும்போது, அது தவறு என்று புரிந்தால் அதில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் துணிச்சல்தான். அதேபோல், தவறு செய்துவிட்டால் அதை ஒப்புக்கொள்வதும், மன்னிப்புக் கேட்பதும் பலவீனம் அல்ல.
ஒருவருக்குக் காதலன் அல்லது காதலி இருப்பது அவருடைய மதிப்பைத் தீர்மானிப்பதில்லை. விலையுயர்ந்த பொருட்களை வைத்திருப்பதும், குறிப்பிட்ட தோற்றத்தில் இருப்பதும் ஒருவரின் தனித்துவத்தை நிர்ணயிப்பதில்லை. இவற்றை விட, ஒருவர் தன்னையும் மற்றவர்களையும் எப்படி மதிக்கிறார் என்பதே முக்கியம்.
நாம் எதைப் பாராட்டுகிறோம் என்பதையும் கவனிப்போம்!
குழந்தைகளிடம் “இப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது” என்று சொல்வதோடு நின்றுவிடாமல், எந்த நடத்தைகள் உண்மையில் பாராட்டுக்குரியவை என்பதையும் அவர்களுடன் பேச வேண்டும்.
ஒரு குழந்தை கோபம் வந்தபோதும் மற்றவரை அடிக்காமல் தன்னுடைய உணர்வைச் சொல்லும்போது பாராட்டலாம். நண்பர்கள் தவறான செயலில் ஈடுபடும்போது அதில் கலந்துகொள்ளாமல் விலகும்போது பாராட்டலாம்.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது, தவறை ஒப்புக்கொள்வது, உதவி கேட்பது, தோல்வியை ஏற்றுக்கொள்வது போன்ற செயல்களையும் அங்கீகரிக்க வேண்டும்.
குழந்தைகள் எதைப் பார்த்துப் பெருமைப்படுகிறார்கள் என்பதை அறிய, அவர்களுடன் உரையாடுவது அவசியம். “உனக்கு யாரைப் பிடிக்கும்?”, “ஏன் அவரைப் பிடிக்கும்?”, “உன் நண்பர்கள் எதைச் செய்தால் பாராட்டுவார்கள்?” என்பன போன்ற எளிய கேள்விகள் அவர்களுடைய உலகத்தைப் புரிந்துகொள்ள உதவும். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது உடனடியாகத் தீர்ப்பளிக்காமல் இருப்பதும் முக்கியம்.
குழந்தைகளின் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய பார்வையில் கெத்து என்பதற்கான அடையாளங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த அடையாளங்கள் அவர்களுடைய சுயமதிப்பு, எதிர்கால ஆளுமை மற்றும் உறவுகளை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
மற்றவர்களைப் பயமுறுத்துவதுதான் கெத்தா? எல்லோருக்கும் பிடித்த குழந்தையாக இருப்பதுதான் வெற்றியா? அல்லது யாருடைய அங்கீகாரத்துக்காகவும் தன்னுடைய அடையாளத்தை இழக்காமல், மற்றவர்களையும் மதித்து வாழ்வதுதான் உண்மையான கெத்தா?
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com
Edited by ஷாலினி