வாழ்வியல்

இதயமும் மூளையும் காக்கும் உடல் இயக்கத்தை மக்கள் இயக்கமாக்க வேண்டும்!

செப்.8 - இன்று உலக இயன்முறை மருத்துவ தினம்

செய்திப்பிரிவு

மதுரை: இன்று (செப்.8) கடைப்பிடிக்கப்படும் உலக இயன்முறை மருத்துவ தினத்தின் 2026-ம் ஆண்டுக்கான கருப்பொருள், இதய மற்றும் ரத்தநாள நோய்கள் மற்றும் பக்கவாதத்தின் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வில் இயன்முறை மருத்துவம் மற்றும் உடல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகிறது. அதனால், இந்த ஆண்டை வெறும் விழிப்புணர்வு நாளாகக் கடந்து செல்லாமல், தமிழ்நாட்டில் உடல் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வலுப்படுத்தும் ஆண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்ஸ் (IAP) தமிழ்நாடு கிளை மாநிலத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: இன்று இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, உடல்பருமன் உள்ளிட்ட தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சையுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பான உடல் இயக்கத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தேவைக்கேற்ப இயன்முறை மருத்துவர்களை நியமித்து, உடல் இயக்க ஆலோசனை, இயக்கத் திறன் மதிப்பீடு, விழுதல் தடுப்பு மற்றும் நீண்டகால நோயாளிகளுக்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்குப் பிறகு சிகிச்சை முடிந்து நோயாளி வீடு திரும்பியவுடன் மறுவாழ்வு முடிவடையக் கூடாது. மாவட்ட மருத்துவமனைகள் முதல் சமூக சுகாதார அமைப்புகள் வரை பக்கவாதம் மற்றும் இதய நோயாளிகளுக்கு தொடர்ச்சியான இயன்முறை மருத்துவ மறுவாழ்வு சேவை கிடைக்கச் செய்ய வேண்டும்.

பள்ளிகளின் சுகாதாரத் திட்டங்களில் இயன்முறை மருத்துவர்களின் பங்களிப்பை இணைக்க வேண்டும். அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான பணியிட இயக்கத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

முதியோரின் நடைத்திறன், சமநிலை, தசை வலிமை மற்றும் விழும் அபாயத்தை மதிப்பிட்டு, அவர்களை நீண்ட காலம் சுயசார்புடன் வாழச்செய்யும் சமூக அடிப்படையிலான இயன்முறை மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்.

நடக்க முடியாத அல்லது மருத்துவமனைக்குத் தொடர்ந்து வர இயலாத பக்கவாத நோயாளிகளுக்கு, தேவைக்கேற்ப வீட்டிலேயே மறுவாழ்வு சேவை கிடைக்கும் வகையில் மாவட்ட அளவில் சேவையை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை மற்றும் நோய்களின் சுமையை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார அமைப்புகளில் இயன்முறை மருத்துவர்களின் பணியிடங்களை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும். மருத்துவமனையில் நோயாளியை காப்பாற்றும் அவசர சிகிச்சையும், வீட்டுக்கு  திரும்பிய பிறகு அவரை மீண்டும் இயங்கச் செய்யும் மறுவாழ்வும் ஒரே சுகாதாரத் தொடரின் இரண்டு பகுதிகளாக பார்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு, உடல் இயக்கம், நோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வை ஒருங்கிணைக்கும் மாநில அளவிலான “உடல் இயக்க நலக் கொள்கை” ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT