படம்: மெட்டா ஏஐ
ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது நல்ல கல்வி, பாதுகாப்பு, உணவு ஆகியவற்றை வழங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. குழந்தையின் தனித்தன்மை, ஆர்வங்கள், ஆளுமை, தனித்த அடையாளம் மற்றும் சொந்தத் தெரிவுகளை பெற்றோர் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதும் முக்கியம்.
“பிள்ளைகள் விரும்பியதைச் செய்யட்டும்” என்பதும் தீர்வல்ல;. “பெற்றோர் சொல்வதைத்தான் பிள்ளைகள் செய்ய வேண்டும்” என்பதும் சரியான அணுகுமுறை அல்ல. இந்த இரண்டுக்கும் இடையில்தான் பெற்றோரின் உண்மையான சவால் இருக்கிறது.
குழந்தை பிறந்தப் பிறகு பல பெற்றோரின் மனதில், “என் குழந்தை எப்படி இருக்க வேண்டும்?” என்ற ஒரு கற்பனை உருவாகிவிடுகிறது. நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும், நல்ல தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இயல்பானவை.
பெற்றோரின் கல்வி தொடர்பான எதிர்பார்ப்புகள் பிள்ளைகளின் கல்விச் சாதனையுடன் தொடர்புடையவை என்பதை 169 ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டாய்வும் காட்டுகிறது. ஆனால் எதிர்பார்ப்பு, குழந்தையின் தனித்தன்மையை மறைக்கத் தொடங்கும்போதுதான் பிரச்சினை உருவாகிறது.
ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு குழந்தைகளை எடுத்துக்கொள்வோம். ஒருவர் கல்வியில் மிகச் சிறப்பாகச் செயல்படலாம். மற்றொருவர் சராசரி அளவிலான கல்வித் திறனைக் கொண்டிருக்கலாம். முதல் குழந்தைக்கு கல்வி சார்ந்த இலக்குகளைச் சற்று உயரமாக அமைத்து, அந்தக் குழந்தையின் திறனை மேலும் வளர்க்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டியிருக்கலாம்.
இரண்டாவது குழந்தைக்கு அதே அளவுகோலைத் திணிப்பதற்குப் பதிலாக, அந்தக் குழந்தையின் தற்போதைய திறனைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லத் தேவையான உதவியை வழங்க வேண்டும்.
ஒரே அளவுகோல் எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தாது. ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற வேண்டும்.
இந்த அணுகுமுறை கல்வியில் மட்டுமல்ல; குழந்தையின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் முக்கியமானது.
உதாரணமாக, ஒரு சராசரி கல்வித் திறன் கொண்ட குழந்தை, “எனக்கு வழக்கமான தொழில் வேண்டாம்; காணொளிச் சேனல் தொடங்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து காணொளிகள் உருவாக்க வேண்டும்” என்று கூறலாம். பெற்றோருக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுவது இயல்பானது.
“இதிலிருந்து எப்படி வாழ்க்கையை உருவாக்க முடியும்?” என்று அவர்கள் கேட்கலாம். ஆனால், “இது தொழிலே இல்லை” என்று உடனடியாக நிராகரிப்பதும் சரியல்ல. அதேநேரத்தில், குழந்தையின் விருப்பம் என்பதற்காக செல்போன், இருசக்கர வாகனம் போன்ற அனைத்தையும் உடனடியாக வாங்கிக் கொடுப்பதும் வழிகாட்டுதல் அல்ல.
மாறாக, “இதற்கு என்ன திறன்கள் தேவை?”, “அதை எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?”, “படிப்பையும் இதையும் எப்படி பேலன்ஸ் செய்வது?”, “எதற்காக இதைத் தொழிலாக எடுக்க நினைக்கிறாய்?”, “இதில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன, என்ன ஆபத்துகள் இருக்கின்றன?” முதலான கேள்விகளை எழுப்பி, நீங்களும், உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து சிந்திக்கலாம்.
காணொளி உருவாக்க விரும்பும் குழந்தைக்கு கதை சொல்லுதல், படப்பிடிப்பு, படத்தொகுப்பு, தொடர்புத்திறன் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கலாம். அந்தக் குழந்தையின் தற்போதைய திறனை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தடுத்த வாய்ப்புகளுக்குத் தயார்படுத்தலாம்.
இதன் நோக்கம் குழந்தையை உலகத்தில் இருந்து பாதுகாத்து வைப்பது அல்ல. உலகத்தை எதிர்கொள்ளவும், அதை ஆராயவும், வளர்ந்து வரும் தன்னுடைய திறன்களைப் பயன்படுத்தி கிடைக்கும் வாய்ப்புகளை அடையாளம் காணவும் குழந்தையைத் தயார்படுத்துவதே ஆரோக்கியமான வளர்ப்பாகும்.
குழந்தையின் சுய முடிவெடுக்கும் திறனும் அதே அளவு முக்கியம். அதன் கருத்தைக் கேட்பது, அதன் பார்வையைப் புரிந்துகொள்வது, வயதுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற தேர்வுகளை வழங்குவது ஆகியவை அவசியம். ஆனால், சுய முடிவு என்பது எல்லைகளே இல்லாத சுதந்திரம் அல்ல.
பிள்ளையின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும்போது பெற்றோர் தெளிவான எல்லைகளை அமைக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற ஆபத்தான நடத்தைகள் போன்ற சூழல்களில், “அது பிள்ளையின் சாய்ஸ்” என்று பெற்றோர் விலகி நிற்க முடியாது.
பூமியின் வட துருவத்தை நோக்கி நாம் நெருங்கிச் செல்லச் செல்ல, தென் துருவத்தில் இருந்து விலகிச் செல்கிறோம். மனித ஆளுமையிலும் இதுபோன்ற ஒரு தன்மை இருப்பதாகக் கூறலாம். குறிப்பாக, வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளிடம், அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உறவுகளின் தாக்கத்தால் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படலாம்.
பிள்ளைகள் சில நேரங்களில் பெற்றோரிம் இருந்து விலகுவது போலத் தோன்றினாலும், கோபமாகப் பேசினாலும், “எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை” என்று கூறினாலும், அதன் உள்ளார்ந்த தேவைகளில் ஒன்று பெற்றோருடனான உறவும், சேர்ந்து இருப்பதற்கான உணர்வும்தான். பிள்ளைகளின் வெளிப்புற நடத்தையை மட்டும் பார்த்து, “இனி உனக்கு நாங்கள் தேவையில்லை” என்று பெற்றோர் முடிவு செய்துவிடக் கூடாது.
இங்கேதான் Scaffolding என்று ஆங்கிலத்தில் அறியப்படும் ‘படிப்படியான உறுதுணை’ என்ற உளவியல் கருத்து முக்கியமாகிறது. ஒரு குழந்தையால் தனியாகச் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும்போது, பெரியவர் தேவையான அளவு உதவியை வழங்கி, குழந்தையின் திறன் வளர வளர அந்த உதவியை மெதுவாகக் குறைப்பதே‘படிப்படியான உறுதுணை’.
குழந்தை நடக்கக் கற்றுக் கொள்ளும்போது முதலில் கையைப் பிடிப்பதுபோல. எப்போதும் கையைப் பிடித்துக்கொண்டிருப்பதும் இல்லை; ஆரம்பத்திலேயே “நீயே நட” என்று விட்டு விடுவதும் இல்லை.
எனவே, பெற்றோர் என்போர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையைத் தங்கள் கனவுகளுக்கேற்ப வடிவமைப்பவர் அல்ல. அதேபோல், பிள்ளைகளை எந்த வழிகாட்டுதலும் இல்லாமல், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விட்டு விடுபவர்களும் அல்ல.
குழந்தை இருக்கும் இடத்தைப் புரிந்துகொண்டு, அக்குழந்தை செல்லக்கூடிய அடுத்த இடத்துக்கான படியை அமைத்துக் கொடுப்பதே சிறந்த குழந்தை வளர்ப்பு ஆகும்.
சில நேரங்களில் கையைப் பிடிக்க வேண்டும். சில நேரங்களில் அருகில் நடக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தையின் முயற்சியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை தடுமாறி மீண்டும் எழுந்து நிற்கவும் அனுமதிக்க வேண்டும்.
ஆக, பிள்ளைகளை நம்மைச் சார்ந்தே வைத்திருப்பது பெற்றோரின் இலக்கு அல்ல. உலகத்தைப் புரிந்துகொள்ளவும், வாய்ப்புகளை ஆராயவும், தன்னுடைய திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவும், சிந்தித்து முடிவெடுக்கவும், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், தேவையானபோது உதவி கேட்கவும் கூடிய மனிதர்களாக பிள்ளைகளை உருவாக்குவதே பெற்றோரின் இலக்காகும்.
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com
| Edited by ஷாலினி |