இந்த உலகம் குழந்தைகளுக்கும் சொந்தம் | பெண் கோணம்

இந்த உலகம் குழந்தைகளுக்கும் சொந்தம் | பெண் கோணம்
Updated on: 
3 min read

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது, ஒரு குழந்தையைப் பாலியல் திருப்திக்காக வயது முதிர்ந்த நபர் அல்லது அதிகாரச் செல்வாக்கைக் கொண்ட ஒருவர் பாலியல்ரீதியாகச் சுரண்டுவது.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளச் சட்டம், மருத்துவம், கல்வி, ஊடகம், சமூக நலன் உள்ளிட்ட பல துறைகளில் நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது.

குழந்தைத் திருமணம், இளவயதுக் கர்ப்பம் போன்ற நிகழ்வுகளை அதிகார பூர்வத் தரவுகளின் மூலம் கண்டறிய முடிந்தாலும், குழந்தை மீதான பெரும்பாலான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகாமல் மறைந்துவிடுகின்றன.

சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் சுமார் 90% குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்களாலேயே நடைபெறுகின்றன. இருப்பினும், ‘இது எப்போதும் நடக்கக்கூடிய விஷயம்தான்; நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்கிற சமூக மனப்போக்கு இந்த வன்முறையை இயல்பாக்குகிறது.

இதனால், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தனிநபரின் செயலாக மட்டும் பார்க்காமல், சமூகத்தின் கூட்டுப் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இந்தக் கூட்டுப் பொறுப்புணர்வு என்பது சட்ட அமைப்புகள் மட்டுமல்லாமல், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிகள், சமூக அமைப்புகள், குழந்தைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பெரியவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் குறிக்கிறது. ஆனால், நடைமுறையில் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும் அனுபவம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

பாலியல் வன்முறையைத் தடுப்பதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட ஆடைகளை அணியாதே, வெளியே தனியாகச் செல்லாதே, இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளே குழந்தைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகின்றன.

இதனால், வன்முறையை நிகழ்த்திய நபரின் பொறுப்பு பேசப்படாமல், குழந்தையின் நடத்தையோ உடையோ கவனத்தின் மையமாகின்றன. இந்த முரண்பாட்டால் குழந்தைகள் குழப்பமடைகிறார்கள். தவறு தன்னிடமா அல்லது தன்னைத் துன்புறுத்திய நபரிடமா என்கிற கேள்வி அவர்களுக்குள் உருவாகிறது.

குழந்தைகளின் நம்பிக்கையின்மை: உண்மையில், பல பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், இத்தகைய அனுபவங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் போதுமான வழிகாட்டுதலும் திறனும் இல்லை.

அதன் விளைவாக, குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக அவர்களின் சுதந்திரத்தையே கட்டுப்படுத்தும் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த அனுபவங்கள் தொடர்ந்து நிகழும்போது, ‘எந்தப் பெரியவரும் என்னைப் பாதுகாக்கப் போவதில்லை’ என்கிற நம்பிக்கையின்மை குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிகிறது.

அதே நேரத்தில், குழந்தைகள் அறியாமையில் இருப்பவர்கள் அல்ல; தங்களுக்குத் தீங்கு செய்தவர் யார் என்பதையும் அந்த நபருக்குப் பெரும்பாலும் எந்தக் கடுமையான விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பதையும் அவர்கள் நன்கு புரிந்துகொள்கிறார்கள்.

எனது ஆய்வின்போது பல குழந்தைகள், பாலியல் வன்முறையை நிகழ்த்தியவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும், அது நடைபெறும் என்கிற நம்பிக்கை இல்லை என்பதையும் வெளிப்படுத்தினர்.

இந்த நம்பிக்கையின்மை குழந்தைகளின் தற்போதைய பாதுகாப்பு உணர்வை மட்டுமல்ல, எதிர்காலத்தில் மனிதர்களையும் சமூக அமைப்புகளையும் நம்பும் திறனையும் பின்னர் அவர்கள் பெற்றோராகவோ அல்லது பாதுகாவலராகவோ உருவாகும் விதத்தையும் ஆழமாகப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

குற்றங்களுக்குக் காரணம்: எனது ஆய்வின்போது குழந்தைகள் பகிர்ந்த அனுபவங்களின்படி, குழந்தைகளின் குடும்பப் பின்னணி, சமூக நிலை, பாதுகாப்பு வலையமைப்பை நன்கு கணித்து பாலியல் வன்முறையை நிகழ்த்துபவர்கள் செயல்படுவதை வெளிப்படுத்தின.

பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையை எளிதாக இலக்காக்கலாம்; ஏனெனில், அந்தக் குடும்பத்தால் எதிர்த்து நடவடிக்கை எடுக்க முடியாது என்கிற நம்பிக்கை குற்றமிழைப்பவர்களுக்கு உள்ளது. ஆனால், சமூகச் செல்வாக்கோ அதிகாரமோ கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையை அணுகத் தயங்குகின்றனர்.

இதன்மூலம், குழந்தைகள் அறியாமையால் அல்ல; சமூக ஏற்றத்தாழ்வுகள், அதிகாரச் செல்வாக்கு, பாதுகாப்பின்மையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் நலக் குழு (Child Welfare Committee), மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (District child Protection officer), மாவட்ட நிர்வாகம், சட்டப் பாதுகாப்பு போன்ற பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அமைப்புகளுக்கிடையே போதுமான ஒருங்கிணைப்பும் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றமும் இல்லாததே மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஒரு குழந்தை பாலியல் வன்முறையை வீட்டில் தெரிவித்தால் ஆசிரியரிடம் கூறுமாறு பெற்றோர் அறிவுறுத்தலாம்; ஆசிரியர்களும் பல நேரம் குழந்தைகள் நல அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதில்லை.

பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் நல அமைப்புகள் ஒன்றிணைந்து குழந்தைக்கான பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கும் நடைமுறை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

சட்டம் மட்டும் போதாது: இதற்குக் காரணம் குடும்ப மரியாதை, சமூக அவமானம், குழந்தையின் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவையே. இதனால் பல குடும்பங்கள் வீடு மாற்றுவது, சம்பவத்தை மறைப்பது அல்லது சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாகப் பேசுவது போன்ற வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றன.

இவை உடனடிச் சமாளிப்பு முயற்சிகளாக இருக்கலாம்; குழந்தைக்கு நீதி கிடைத்ததா, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதா, மீண்டும் இதுபோன்ற வன்முறை நடைபெறாமல் தடுக்கப்பட்டதா என்கிற அடிப்படைக் கேள்விகளுக்கு இவை பதிலாக அமையாது.

பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், அதன் அடுத்த கட்டமாகக் குழந்தைக்கு உளவியல் ஆதரவு, சட்ட வழிகாட்டுதல், துறைசார் ஒருங்கிணைப்பை உறுதிசெய்யும் நடைமுறைகள் பல இடங்களில் இல்லை.

2012ஆம் ஆண்டு போக்சோ சட்டம் (POCSO Act) அமலுக்கு வந்தது குழந்தைகள் பாதுகாப்பில் முக்கியமான முன்னேற்றமாக இருந்தாலும் சட்டம் மட்டும் போதுமானதல்ல.

குழந்தைகள் தங்கள் பெரும்பாலான நேரத்தைப் பள்ளிகளில் செலவிடுவதால், பள்ளிகள் விழிப்புணர்வு வழங்கும் இடங்களாக மட்டுமல்லாமல், குழந்தைகளின் குரலைக் கேட்டுப் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்கும் மையங்களாக மாற வேண்டும்.

அதோடு, குழந்தையின் பாதுகாப்பைத் தடுக்கும் பண்பாட்டுத் தடைகளையும் மௌனத்தையும் தாண்டிச் சிந்திக்கும் சமூக மனப்போக்கு உருவாக வேண்டும். பாலின வேறுபாடின்றி ஒவ்வொரு குழந்தையின் குரலையும் நம்பி அவர்களின் உரிமை, பாதுகாப்பு, நீதியை உறுதிப்படுத்தும் சமத்துவக் கண்ணோட்டமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

குழந்தைகளுக்குமான உலகம்: குழந்தைகள் மீது ஆழமான அன்பும் அக்கறையும் இருக்கும்போதுதான் குழந்தைகளின் அனுபவங்களை உண்மையாகக் கேட்கவும், அவர்களின் வலியை உணரவும் அவர்களின் பாதுகாப்பு - நீதியை நமது தனிப்பட்ட வசதிகளைவிட மேலாக முன்னுரிமைப்படுத்தவும் முடியும். அதேநேரம், பெரியவர்களாகிய நாம் அடிக்கடி மறந்துவிடும் ஓர் உண்மை என்னவென்றால், இந்த உலகம் குழந்தைகளுக்கும் சமமாகச் சொந்தமானது என்பதே.

இந்த உலகத்தை ஆராயவும் அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளவும் பாதுகாப்பாக வாழவும் அவர்களுக்கும் முழு உரிமை உள்ளது. அந்த உரிமையைப் பறிப்பது அல்ல, மாறாக அதைப் பாதுகாப்பாக அனுபவிக்க அவர்களுடன் துணையாக நின்று வழிகாட்டி, தேவையான ஆதரவை வழங்குவதே நமது பொறுப்பு. பல நேரம் பாதுகாப்பு என்கிற பெயரில் குழந்தைகளின் சுதந்திரத்தையும் அனுபவங்களையும் தேவையற்ற அளவில் கட்டுப்படுத்துகிறோம்.

ஆனால், உண்மையான பாதுகாப்பு என்பது அவர்களை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அடைத்து வைப்பதல்ல; உலகத்தை நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே. இந்த அணுகுமுறைகள் கூட்டுப் பொறுப்புணர்வுடன் இணைந்தால்தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கான நீடித்த சமூக மாற்றத்தை உருவாக்க முடியும்.

சில்வியா சிவஞானம்,

உளவியலாளர் - ஆய்வாளர்.

silviaise2021@gmail.com

இந்த உலகம் குழந்தைகளுக்கும் சொந்தம் | பெண் கோணம்
அஸ்மிதா: ஜூடோவின் புதிய முகம் | ஆடும் களம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in