ஓசூர் ராமநாயக்கன் ஏரியின் நுழைவாயில் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுக் கல்தூண்.
ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரி நுழைவாயிலில் உள்ள கல் நினைவுச் சின்னம் குறித்த வரலாற்றுப் பின்னணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
விஜயநகரப் பேரரசின் மீது முஸ்லிம்கள் படையெடுத்து வந்தபோது, ஓசூர்-பாகலூர் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் ராமநாயக்கர் தனது படையுடன் விஜயநகரம் சென்று போரிட்டார். அந்தப் போரில் விஜயநகரப் பேரரசு வெற்றி பெற்றது. போரில் பங்கேற்ற ராமநாயக்கர் வெகுமதியுடன் பாகலூர் திரும்பினார்.
இந்த வெற்றியின் நினைவாக, ராமநாயக்கரின் மகன் சந்திரசேகர நாயக்கர் 16-ம் நூற்றாண்டில் ராமநாயக்கன் ஏரியை வெட்டி, அதன் ஒரு பகுதியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மதகு திறப்பான் கல்தூணை நிறுவினர். இந்தக் கல்தூண் பல நூற்றாண்டுகளாக ஓசூரின் வரலாற்றுச் சின்னமாக விளங்கி வருகிறது. இந்தக் கல்தூண் வெறும் நினைவுச் சின்னமாக மட்டுமின்றி, ஏரி நிர்வாகக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாயக்கன் ஏரிக் கரையில் இருவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றபோது, ஏரிக்கரையில் இருந்த கல்தூண் மதகு திறப்பான் அகற்றப்பட்டது. இதையடுத்து, வரலாற்று ஆர்வலர்களின் முயற்சியால் ராமநாயக்கன் ஏரியின் நுழைவாயில் பகுதியில் கல்தூண் மதகு திறப்பான் மீண்டும் நிறுவப்பட்டது. அதைச் சுற்றிலும் சிறிய பூங்கா அமைக்கப்பட்டு, அலங்கார மின் விளக்குகளும் பொருத்தப்பட்டன.
பின்னர் போதிய பராமரிப்பின்றி இருந்த நிலையில், தற்போது கல்தூணைச் சுற்றிலும் மீண்டும் அழகுபடுத்தும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுடன், கல்தூணின் வரலாறு மற்றும் மன்னர் ஆட்சிக் காலத்தில் நீர் நிர்வாகத்தில் அதற்கு இருந்த முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கும் தகவல் பலகையையும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது: தென்னிந்தியாவில் பழங்கால ஏரிகளில் பயன்படுத்தப்பட்ட மதகு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளில், கல்தூண்கள், கல் தகடுகள், நீர் வெளியேற்ற வாயில்கள் ஆகியவற்றைக் கொண்டு நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருந்தது பதிவாகியுள்ளது. அந்த வகையில், ராமநாயக்கன் ஏரியில் அமைந்துள்ள நான்கு கல்தூண்களும் வெறும் அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டவை அல்ல என்பது தெரியவருகிறது. நீர்ப்பாசனக் கட்டமைப்பின் பயன்பாடும் கலைநயமும் ஒன்றிணைந்திருந்ததை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தக் கல்தூண் மதகு அமைப்பு, மழைநீரை ஏரியில் சேமித்து வைத்து, விவசாயத்துக்குத் தேவையான காலங்களில் மதகுகள் வழியாக நீரை வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளது. மேலும், ஏரி நீர் ஓசூர் கோட்டையில் உள்ள அகழிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் நீர்ப் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டச் சரிவு, ஏரி ஆக்கிரமிப்பு, மழைநீர் வீணாகுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், பழமையான இந்த நினைவுக் கல்தூணை நீர் மேலாண்மை மரபின் சின்னமாகப் பாதுகாப்பதுடன், அதன் வரலாறு மற்றும் நீர் மேலாண்மையில் அதன் பங்கு குறித்த தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வரலாற்று ஆய்வாளர் களின் ஆலோசனை களைப் பெற்று மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர்கள் கூறினர்.ஓசூர் ராமநாயக்கன் ஏரியின் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுக் கல்தூண்.