வாழ்வியல்

ஈரோட்டில் புத்துயிர் பெற்ற பழைய சோறு - பச்சை மிளகாய் விற்பனை

ஜி.வேல்முருகன்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சாலையோரக் கடைகள் மற்றும் ஒரு சில உணவகங்களில் பழைய சோறு, பச்சைமிளகாய் விற்பனை புத்துயிர் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 103 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. உடல் உஷ்ணத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பழச்சாறு, பழங்கள், மோர் ஆகியவற்றை உட்கொண்டு உடல் உஷ்ணத்தை தணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிப்பதால், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெயிலால் ஏற்படும் உடல் உபாதைகள், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் புதிதாக வெப்ப தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பாரம்பரிய உணவான பழைய சோறு, பச்சை மிளகாய் விற்பனை ஈரோட்டில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஈரோடு வில்லரசம்பட்டியில் தள்ளு வண்டிக்கடை வைத்தி ருப்பவர்கள் கூறியதாவது: பழைய சோறு என்பது முந்தைய நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, 8 முதல் 12 மணி நேரம் நொதிக்க வைக்கப்படும் தமிழர்களின் பாரம்பரியமான உணவாகும்.

இதில், உடலுக்குத் தேவையான லாக்டிக் அமில பாக்டீரியா, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இது உடலைக் குளிர்ச்சியாக வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.

இன்றைய காலத்தில் பழைய சோறு என்பதை ஒவ்வாமை உணவாக பல இளைஞர்கள் கருதுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால், உடலை குளிர்விக்கும் வகையில் மண்பானையில் பழைய சோறு, பச்சை மிளகாய்க்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு பானை பழைய சோறு ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. பழைய சோற்றுடன், பச்சை மிளகாய், கருவாடு, சின்ன வெங்காயம் உட்பட பல்வேறு இணை உணவுகளும் தினசரி சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. முதல் நாள் மாலையிலேயே சாதம் வடித்து, தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சோறு விற்பனைக்கு கொண்டு வருகிறோம், என்றனர்.

SCROLL FOR NEXT