வாழ்வியல்

​பாக்கெட் உணவு​களில் ‘எச்சரிக்கை லேபிள்’ - உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் தருவது ஏன்?

பாரதி ஆனந்த்

கிராமப்புற பெட்டிக் கடைகள், நெடுஞ்சாலையோர பங்க் கடைகள், குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள் வரை வண்ண வண்ண பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள் கொட்டிக் கிடக்கின்றன. இத்தகைய கண்கவர் நொறுக்கத் தீனிகள் குழந்தைகளைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன என்றாலும் கூட இதன் தீவிர ரசிகர்களுக்கு வயது வரம்பு இல்லை. சில நேரங்களில் வீட்டின் செல்லப் பிராணிகளுக்குக் கூட சில குறிப்பிட்ட வகை பாக்கெட் உணவுகளை பிரியமுடன் ஊட்டுவிப்பதை ரீல்ஸ்களில் கண்டிருப்போம். ஆக, பாக்கெட் உணவுகளின் கன்ஸ்யூமர் வட்டம் கடலினும் பெரிதாகவே இருக்கிறது.

பாக்கெட் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், அதிலிருக்கும் எம்எஸ்ஜி (Monosodium Glutamate), ட்ரான்ஸ் ஃபேட் (Trans Fat) போன்றவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என்று பொதுநலச் சிந்தனை கொண்ட மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) இதில் கூடுதல் தார்மிக பொறுப்பு இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

இந்நிலையில்தான், பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள் ஆகியனவற்றின் ஊட்டச்சத்து விவரத்தை பார்த்தவுடன் புரியும்படியான எளிமையான எச்சரிக்கைக் குறிப்புபோல் பொட்டலத்தில் தெளிவாக அச்சிடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு, குறிப்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கெடுபிடிகளை காட்டியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொதுநல வழக்கின் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடுமை காட்டியிருக்கிறது.

பாக்கெட் உணவுகளில் லேபிளிங் ஏன் முக்கியம், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கெடுபிடிக்குக் காரணம் என்ன ஆகியன குறித்து சற்று விவரமாகப் பார்ப்போம்.

FOPL என்றால் என்ன?

இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் பின்னணியும் FOPL - front of pack warning labels எனப்படும் பாக்கெட்டின் முன்புறத்தில் இடம்பெறும் எச்சரிக்கை லேபிள் பற்றியதுதான். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் பெரும்பாலும் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்டவையாகவே இருக்கின்றன. அவை (HFSS Foods - high in fat, sugar and salt) என்ற வகையில் வருகின்றன.

இத்தகைய உணவுப் பொருட்களில் பாக்கெட்டுகளின் முன்பக்கத்திலேயே அதன் உள்ளடக்கம் பற்றி தெளிவான எச்சரிக்கைக் குறியீடு இடம்பெற்றிருக்க வேண்டும். அது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஓர் எச்சரிக்கைக் குறிப்புபோல் இருக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தல்.

இந்த விவகாரத்தில் சுணக்கம் காட்டப்படும் நிலையில் தான் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு தொழில்துறை அழுத்தங்களுக்குப் பணிந்து நாட்டு மக்களின் ஆரோக்கியம், குறிப்பாக வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டாமல் FOPL-ஐ அறிமுகப்படுத்தாமல் இருப்பதாகக் கூறியிருக்கிறது.

முன்னதாக, ஆகஸ்ட் 3, 2026 அன்று உச்ச நீதிமன்றத்தில் FSSAI பதிவு செய்த பிரமாணப் பத்திரத்தில், ஒரு மாற்று யோசனையை முன்வைத்தது. அதாவது FOPL லேபிள் முறைக்கு (தெளிவான எச்சரிக்கைக் குறியீட்டுக்கு) பதிலாக பாக்கெட் உணவுப் பொருட்களில் 100 கிராமில் எத்தனை கிராம் சர்க்கரை, நிறைக் கொழுப்பு, உப்பு இருக்கும் என்பதற்கான பிரேக் அப்பை அளிப்பதாகத் தெரிவித்தது.

எச்சரிக்கைக் குறிப்பு போல் அல்லாது அந்த விளக்கத்தைப் படித்து மக்கள் புரிந்துகொள்ளும் அளவில் இருக்கும் என்று குறிப்பிட்டது. அவை ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) உணவுப் பழக்க வழிகாட்டுதல்கள் படி அமையும் எனக் குறிப்பிட்டது.

இந்த விவகாரம்தான் உச்ச நீதிமன்றத்தை ஆவேசமடையச் செய்துள்ளது. லேபிளிங் முறை தொடர்பாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “இது மாதிரியான லேபிள் முறையை அனுமதித்தால் உப்பு, முட்டை போன்ற பெரும்பாலான இந்திய உணவுகளும் கூட இத்தகைய லேபிளிங் கீழ் வந்துவிடக் கூடும். சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சில லேபிளிங் முறையை இந்திய சமூகத்துக்கு அமல்படுத்த முடியாது. ஏனெனில் வெளிநாடுகளில் உண்ணப்படும் உணவுகள் பரவலாக சர்க்கரை, கொழுப்பு, மசாலா குறைவானதாகவே இருக்கின்றன. அதனால், HFSS வகை உணவுப் பொருட்களில் இத்தகைய லேபிளிங் பின்பற்றப்படுகிறது” என்று வாதிட்டார்.

அதற்கு நீதிமன்றம், “நாங்கள் பரிந்துரைக்கும் தெளிவான லேபிளிங் முறையானது பாக்கெட் உணவுப் பொருட்கள் உற்​பத்​தி​யாளர்​களுக்கு இது பிடிக்​காமல் போகலாம். ஆனால், தாங்​கள் எதை உட்​கொள்​கிறோம் என்​பதை நுகர்வோர் கட்​டா​யம் தெரிந்​து​கொள்ள வேண்​டும். பொது​மக்​களிடையே விழிப்​புணர்வை ஏற்படுத்​து​வதே இதன் நோக்​கம். நீதி​மன்​றத்​தின் பரிந்​துரைகளை மத்​திய அரசு தானாக முன்​வந்து செயல்​படுத்​தத் தவறி​னால், நீதிமன்றமே உரிய உத்தரவைப் பிறப்​பிக்க நேரிடும்” என்று கடுமைகாட்டியது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படும்:

அரசுத் தரப்பில், இந்தியாவில் மூன்றில் ஒரு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனமானது பாரம்பரிய உணவு சார்ந்ததாக உள்ளது. அப்படியிருக்க, இதுபோன்ற லேபிளிங் முறையானது இந்தத் தொழில் துறையை வெகுவாகப் பாதிக்கும் என்று வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “கடந்த 2021 ஜூன் மாதத்தில் FSSAI நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களை புரிந்துகொள்ள உதவும் விவர விளக்க லேபிளிங் (Interpretive Label System) முறைக்கு எதிராக முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தொழில் துறையின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மத்திய அரசிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்குமாறு அவரை கேட்டுக்கொண்டது.

அதேபோல், சர்வதேச நடைமுறையை பின்பற்றுவது சாத்தியப்படாது என்ற மத்திய அரசின் பார்வையையும் நிராகரித்தது.

விவர விளக்க லேபிளிங் முறைக்கு மாற்றாக பாக்கெட் உணவுகளின் முகப்பிலேயே தெளிவான எச்சரிக்கைக் குறியீட்டை உணர்த்துவது அவசியம். இந்தியா ஒரு வளர்ச்சியடையாத நாடாகவே இருக்க வேண்டுமா? இந்தியா தனது குடிமக்களின், குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் FSSAI ஸ்டார் ரேட்டிங் முறையை முன்மொழிந்தது. அதாவது பாக்கெட் உணவில் 5 ஸ்டார் குறியீட்டில் எத்தனை ஸ்டார் அந்த உணவுக்கு வழங்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் நுகர்வோர் அதனை தங்களுக்கு உகந்தவையாக தரம் பிரித்துக் கொள்ளலாம் என்பதுபோன்றது அந்த முறை. ஆனால், அப்படியான ஸ்டார் ரேட்டிங் முறையால் நுகர்வோர் தன்மை மாறுபட்டிருப்பதாக எந்தவொரு நிரூபிக்கப்பட்ட தரவும் இல்லை. அதை இந்திய அரசு பின்பற்றக் கூடாது என்று கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது இங்கே நினைவுகூரத்தக்கது.

சமூக ஆர்வலர்களின் நிலைப்பாடு:

“உப்பு, சர்க்கரை, தீங்கிழைக்கும் கொழுப்பு, அதேநேரத்தில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள நொறுக்கு தீனி உட்கொள்ளும் கலாச்சாரம் ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறையுடன் கூடிய அதிகப்படியான நொறுக்குத் தீனி நுகர்வு சமீப காலங்களில் தொற்றா நோய்கள் அதிகரிப்புக்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது” என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் ஊட்டச்சத்து சார்ந்த நிபுணர் ஒருவர், “நமது மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் குழந்தைகளே. நமது குழந்தைகள் ஆரோக்கியமற்றவர்களாக வளர்வது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும்.

மேற்கத்திய நாடுகளில் சிறப்பான பொருள்களை விற்பனை செய்யும் ஒரு பிராண்ட், இந்தியாவில் அதே பெயரில் மிகவும் மலிவான பொருள்களை விற்பனை செய்கின்றன. நமது பொருட்களுக்கான ஒழுங்குமுறையில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியர்களின் ஆரோக்கியத்தை விட லாபத்தையே முன்னிலைப்படுத்துகின்றன. அதனால் ஒழுங்குமுறைகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.

நொறுக்குத் தீனிகளை விரும்பி உட்கொள்ளும் பள்ளிக் குழந்தையின் தாய் ஒருவர், “இது சைவம், அசைவம் என்பதை ஒற்றைக் குறியீட்டை வைத்தே படித்த படிக்காத அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா அதுபோலவே ஒரு சிறு குறியீட்டின் மூலமே உப்பு, சர்க்கரை, தீங்கிழைக்கும் கொழுப்பு ஆகியன இருப்பதை குறியீடுகள் மூலம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அதைவிடுத்து 100 கிராம் உணவுப் பொருள் / நொறுக்குத் தீனியில் 25 கிராம் சர்க்கரை, 10 கிராம் கொழுப்பு, 5 கிராம் உப்பு இருக்கிறது என்ற வகையிலான பிரேக்க அப்பைப் பார்த்து, அதன் கீழ் உள்ள ஐசிஎம்ஆர் உணவுப் பழக்க வழிகாட்டுதல்களை ஒப்பிட்டு நாங்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க முடியாது” என்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம், புகைப்படம் தொடர்பாக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால், இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளின் மீது 85% பரப்பளவில் அபாய எச்சரிக்கையும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு படங்களும் அச்சிடப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, பாக்கெட் உணவுகளின் மீதான தெளிவான குறியீடு அவசியம்" என்கின்றனர்.

SCROLL FOR NEXT