வாழ்வியல்

‘ஆதர்ச நாயகர்’ அப்துல் கலாம்!

ஜூலை 27 - அப்துல் கலாம் நினைவு நாள்

ராகா

‘கனவு காணுங்கள். அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்திடுங்கள்’ என்று சொல்லி கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராகவும் புகழ்பெற்ற அறிவியலாளராகவும் விளங்கிய அவர் தான் வகித்த பதவிகளால் அல்ல, மாணவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கத்தால் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறார்.

அறிவியல் சிந்தனை, புதுமை, கடின உழைப்பு, ஒழுக்கம், நாட்டுப்பற்று ஆகியவற்றை மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் அடிப்படைப் பண்புகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றின் அடையாளமாக வாழ்ந்த அவர், இளைஞர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் தந்த ஆசிரியராகவும் நினைவுகூரப் படுகிறார்.

ராமேஸ்வரத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, நாட்டுக்கே குடியரசுத் தலைவராக உயர்ந்தது அவரின் திறமைக்குச் சிறந்த சான்று. விண்வெளித் துறையிலும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையிலும் அவர் செய்த பங்களிப்புகள் இந்தி யாவை உலக அரங்கில் தலைநிமிர வைத்தன.

இவ்வளவு பெரிய உயரங்களைத் தொட்ட பிறகும், அவர் கடைசிவரை எளிய மனிதராகவே வாழ்ந்தார். அனைவரிடமும் அன்போடும் பணிவோடும் பழகினார். தன் இறுதி மூச்சுவரை மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியராகவே வாழ விரும்பினார்.

மேகாலயத்தின் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்தது, அவர் தன் லட்சியத்திற்காகவே வாழ்ந்தார் என்பதைக் காட்டுகிறது.

வெறும் வார்த்தைகளால் மட்டும் பாடம் சொன்ன தலைவராக இல்லாமல், தன் வாழ்க்கையின் மூலமாகவே மாணவர்களுக்கு வழிகாட்டியவர் கலாம். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றும் மனப்பக்குவத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

தாம் அடைந்த வெற்றிகளுக்குத் தன் குழுவினருக்குப் பெருமை சேர்த்தும், தோல்விகளுக்குத் தாமே பொறுப்பேற்றும் பேசிய அவரது தலைமைப் பண்பு, அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டியது.

தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காகவும் அர்ப்பணித்ததால்தான், அனைவராலும் நேசிக்கப்படும் ஆதர்ச நாயகராக காலம் கடந்தும் அவர் நிலைத்து நிற்கிறார்!

SCROLL FOR NEXT