மாணவிகள் ஹிவன்ஷிகா, சஞ்சிதா

 
வாழ்வியல்

ஆகாய தாமரையில் இருந்து சானிட்டரி நாப்கின் - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கரூர் பள்ளி மாணவிகள்

செய்திப்பிரிவு

கரூர்: ஆகாய தாமரையிலிருந்து சானிட்டரி நாப்கின் தயாரித்த கரூர் தனியார் பள்ளி மாணவிகள், அதை ஆய்வுக் கட்டுரையாக மண்டல அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம், புதுடெல்லி அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய மண்டல அளவிலான 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தேர்வாகும் ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகும்.

இதில் கரூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிகளான ஹிவன்ஷிகா, சஞ்சிதா ஆகிய இருவரும் தங்களின் ஆசிரியர் ஜெ.ராஜசேகரன் வழிகாட்டுதலுடன், ஆகாயத் தாமரையிலிருந்து பயனுள்ள பொருட்கள் என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை மாவட்ட அளவில் வெற்றி பெற்று மண்டல அளவில் தேர்வாகி அங்கும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டுரையில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரையில் இருந்து பெண்களுக்கான சானிட்டரி நாப்கின், மட்கக்கூடிய காகிதங்கள், அட்டை பெட்டிகள் தயாரிக்கலாம் என நிரூபித்துள்ளனர்.

ஆய்வுக் குறித்து மாணவிகள் ஹிவன்ஷிகா, சஞ்சிதா கூறியது: ஆகாயத்தாமரை சுற்றுச்சூழலில் பல எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இதை ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் அதற்கான தீர்வுகளுக்கு முயற்சி செய்தோம்.

ஆகாய தாமரையிலிருந்து தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின்

இந்த தாவரத்தை பயன்படுத்தி பயனுள்ள பொருட்களை உருவாக்கலாம் என யோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினோம். இந்த ஆகாயத்தாமரை தாவரத்தின் தண்டு, மொட்டு போன்ற பகுதியை ஆய்வு செய்தோம்.

இந்த தாவரம் அதிகளவு நீரை உறிஞ்சக்கூடிய தன்மையுடன் உள்ளது. மேலும், இதை அரைத்து அதை உலர செய்து சானிட்டரி நாப்கின்கள், காகித அட்டை பெட்டி போன்ற மட்கக்கூடிய பொருட்களை உருவாக்கினோம்.

இதன் உறிஞ்சும் திறன், அமிலத்தன்மையை ஆய்கவத்தில் பரிசோதனை செய்தோம். மேலும், இதில் 30 சதவீத செல்லு லோஸ் என்ற பொருள் இருப்பதால் இதை பேப்பர் போன்ற பொருளாக மாற்றுவது எளிது.

பொதுவாகன சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை மூலதனமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதனால், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உருவாகின. இதுபோன்ற இயற்கை சார்ந்த பொருட்களால் சானிட்டரி நாப்கின் உருவாக்கும்போது, அதுஉடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது.

இயற்கை கழிவான ஆகாயத்தாமரையை பயன்படுத்தி இது மாதிரியான பொருட்களை நாம் தயாரிக்கும்போது, உற்பத்தி செலவு மிகவும் குறையும். மேலும், சுற்றுச்சூழல், மட்கக்கூடிய பொருட்கள் ஆகிய இருதீர்வுகள் கிடைக்கின்றன என்றனர்.

SCROLL FOR NEXT