

காவேரிப்பட்டணம் அருகே மோரனஅள்ளி பூமலை உச்சியில் உள்ள குகை சுனையில் கண்டறியப்பட்டுள்ள பழமையான பாறை ஓவியங்கள்.
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மலைக் குகை சுனையில் 2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தொன்மையியல் ஆய்வு நிறுவன செயலாளர் தெரிவித்துள்ளார்.
காவேரிப்பட்டணம் அருகே மோரன அள்ளி பூமலை உச்சியில் நாமசுனை பகுதியில் மோரன அள்ளியைச் சேர்ந்த கண்ணன் அளித்த தகவலின் பேரில், பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு செய்து அங்கிருந்த பழமையான பாறை ஓவியத்தை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொன்மையியல் ஆய்வு நிறுவன செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சில மனித, விலங்கு உருவங்களைக் கொண்ட பாறை ஓவியங்கள் அதிக அளவில் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட குறியீடுகளைக் கொண்ட பாறை ஓவியங்கள் பெரியகோட்டப்பள்ளி, மலையாண்டஅள்ளி அருகே ஆண்டிமலையில் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது, பூமலையில் நாமசுனையில் 10 அடி நீளம் 8 அடி அகலம் உள்ள குகையில் விதானத்தில் பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 350-க்கும் மேற்பட்ட குறியீடுகள், மனித, விலங்கு ஓவியங்கள் வெண்சாந்தினால் வரையப்பட்டுள்ளன. ஓவியத்தின் கீழே வற்றாத சுனை உள்ளது.
இந்த ஓவிய தொகுப்பின் மையத்தில் திரிசூல வடிவிலான பெண் தெய்வமும், இரு பக்கமும் வீரர்கள் உள்ளனர். இந்த காட்சி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பாதீடு என்ற காட்சியாகும்.
பாதீடு என்பது வேட்டையின் போது கிடைத்த விலங்குகளை ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த பெண் குழுவினருக்கு வீரர்கள் பங்கிட்டுக் கொடுக்கும் நிகழ்வாகும். தெய்வத் தன்மை வாய்ந்த இப்பெண்ணை கொடிச்சி என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், ஓவியத்தில் இறந்தவர்களின் ஆன்மாவை குறிக்கும் பாண்டில் விளக்குகள் பல உள்ளன. சதுரத்துக்குள் மனிதன், வட்டத்துக்குள் மனிதன் ஆகியவை இறந்தோர் அடக்கம் செய்யப்பட்ட கல் திட்டைகள் மற்றும் கல் வட்டங்களை குறிக்கின்றன.
இவை தவிர பிற ஓவியங்கள், கோலங்களும் குறியீடுகளும் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தமிழி எழுத்தாகும். இந்த எழுத்து எப்படி தோன்றியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த ஓவியத்தில் காணப்படும் குறியீடுகள் போன்று அகழாய்வில் கிடைக்கும் பானை ஓடுகள் மற்றும் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன.
இத்தகைய குறியீடுகளில் இருந்தே தமிழி எழுத்துகள் தோன்றியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. எனவே, இப்பாறை ஓவியக் குறியீடுகள் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால தமிழ் மக்களின் பண்பாட்டுக் கூறுகளை இப்பாறை ஓவியத் தொகுப்பு பதிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.