திருவண்ணாமலை: முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் களுக்கான மறுவாழ்வு மையத்தின் ஒப்பந்தக் காலத்தை புதுப்பித்து வழங்குமாறு திருவண்ணாமலை ‘சோல்ஃப்ரீ இன்ஸ்பயர் சென்டர்' நிறுவனர் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன்-விஜயலஷ்மி மகள் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். அமெரிக்காவில் படித்த இவர், கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 18-வது வயதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவியாக நியமிக்கப்பட்ட ப்ரீத்திக்கு, 19-வது வயதில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கழுத்துக்கு கீழே உள்ள உறுப்புகள் செயலிழந்தன.
பின்னர், அவரது தந்தை ஸ்ரீனிவாசன், குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஸ்ரீனிவாசன் உயிரிழந்தார். ப்ரீத்தியின் தாயாருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தன்னைப் பார்த்துக்கொள்ளக் கூட ஆள் இல்லாத நிலையை உணர்ந்த ப்ரீத்தி, தன்னைப்போல முதுகுத் தண்டுவடப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக ‘சோல்ஃப்ரீ இன்ஸ்பயர் சென்டர்' என்ற தொண்டு மையத்தை தொடங்கினார். இதுபோன்ற மருத்துவ மறுவாழ்வு மையம் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் உள்ளது. இந்தமையத்தின் தலைவராக சந்திரசேகரன் செயல்பட்டு வருகிறார்.
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் களுக்கு மருத்துவ உபகரணங்கள், வீல் சேர்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வரும் ப்ரீத்தி, ஓராண்டுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 17 பொருட்கள் அடங்கிய, ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ‘கிப்ட் பேக்'-ஐ ஆண்டுதோறும் இலவசமாக வழங்கி வருகிறார். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவர் உட்பட ஏறத்தாழ 3,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.
2019-ல் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவண்ணாமலையில் மறுவாழ்வு மையம் தொடங்க தமிழக அரசிடம் ப்ரீத்தி அனுமதி கோரினார். இதையடுத்து, திருவண்ணாமலையில் செயல்பாட்டில் இல்லாத பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அனுமதிவழங்கியது. அந்த இடத்தை தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.2 கோடியில் புதுப்பித்து, மேலும் ரூ.3 கோடியில் மருத்துவ உபகரணங்களை நிறுவினர்.
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் களுக்கான `சோல்ஃப்ரீ இன்ஸ்பயர் சென்டர்' மறுவாழ்வு மையத்தை 2021 டிச. 3-ம் தேதி காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு 50 படுக்கை வசதிகள் உள்ளன. இலவச சிகிச்சை, உணவு மட்டுமின்றி, சுய தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மருத்துவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றுகின்றனர்.
தற்போது 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்று, வீடு திரும்பிஉள்ளனர். தற்போது 3 ஆண்டுகளைக் கடந்துள்ள இந்த மையத்தை தொடர்ந்து நடத்துவதற்காக விண்ணப்பித்தும், இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.
‘சோல்ஃப்ரீ இன்ஸ்பயர் சென்டர்’ மறுவாழ்வு மையத்தில், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள். | படங்கள்: வி.எம்.மணிநாதன்
இதுகுறித்து அவர் கூறிய தாவது: இந்த மையம் நடத்துவதற்கான அனுமதி ஆணையை அரசு விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். கடந்த 3-ம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை புதுப்பித்தல் அனுமதியைத் தரவில்லை. கடந்த ஆண்டு இம்மையத்தைப் பார்வையிட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர், இதுபோன்ற மையங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கலாம் என்றார். புதுப்பித்தல் அனுமதிக்காக பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்துவிட்டோம். எனினும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அமைச்சர்களிடம் முறை யிட்டுள்ளோம்.
பழைய அரசு மருத்துவமனை வளாகத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய பல்நோக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம் கட்டப்பட உள்ளதால், இந்த இடத்தை காலி செய்யுமாறும்,புதிய கட்டிடம் கட்டிய பிறகு அதில் ஒருபிரிவு ஒதுக்கீடு செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எங்களை உடனடியாக காலி செய்யுமாறு கூறினால், மையத்தில் சிகிச்சை பெறுவோரை எங்கு அழைத்துச் செல்வது? தனி இடம் ஒதுக்கீடு செய்து அனுமதி கொடுங்கள் அல்லது இடத்தை குத்தகைக்கு கொடுங்கள், நாங்கள் கட்டிடம் கட்டிக் கொள்கிறோம் என்றும் கேட்டுள்ளோம்.
சென்னையில் நடந்த மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பேசிய முதல்வர், 'மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவை கருணை அல்ல, அவர்களது உரிமை என்பதை உணர்ந்து, அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். எனவே, மறுவாழ்வு மையத்துக்கான புதுப்பித்தல் அனுமதியை விரைவில் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் கூறினார்.