உடுமலை அனுசம் நகரில் உள்ள தனியார் கூரியர் கிளையில் விநியோகத்துக்காக குவிந்துள்ள விறகு அடுப்பு பார்சல்கள்.
உடுமலை: சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மின்சார அடுப்புகளின் பயன்பாட்டுச் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால், உடுமலை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் மீண்டும் விறகு அடுப்பு பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர்.
இதனால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் ‘நவீன ரக விறகு அடுப்புகள்’ கூரியர் நிறுவனங்களில் பார்சல்களாக குவிந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
உடனடி மற்றும் தற்காலிக தீர்வாக பலரும் மின்சார அடுப்புகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை பயன்படுத்துவதால் மின் கட்டணம் பல மடங்காக அதிகரிப்பதால், அதற்கு மாற்றுத் தீர்வை தேட தொடங்கி உள்ளனர்.
பழைய காலத்து அடுப்புகளைப் போலன்றி, தற்போது ஆன்லைனில் கிடைக்கும் அடுப்புகள் ‘புகையில்லா’ மற்றும் குறைந்தவிறகில் அதிக வெப்பம் தரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அளவில் சிறிதாகவும், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட இரும்பு மற்றும் ஸ்டீல் அடுப்புகளுக்கு தற்போது மவுசு கூடியுள்ளது.
கடந்த சில வாரங்களாக உடுமலையில் உள்ள முன்னணி கூரியர் அலுவலகங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான விறகு அடுப்புகள் பார்சல்களாக வருகின்றன.
இதுகுறித்து தனியார் கூரியர் நிர்வாகிகள் கூறுகையில், “முன்பெல்லாம் துணிகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பார்சல்களே அதிகமாக வரும்.
ஆனால் இப்போது கனமான இரும்பு அடுப்புகள் அதிக அளவில் வருகின்றன. குறிப்பாக கிராமப்புற முகவரிகளுக்கு இவை அதிகம் டெலிவரி செய்யப்படுகின்றன” என்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது: சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசு கூறினாலும், உண்மையில் பலருக்கும் தேவையான சிலிண்டர் கிடைப்பதில்லை.
காஸ் சிலிண்டருக்கு மாற்றாக மின்சார அடுப்புகளை வாங்கி பயன்படுத்துவதால் மின் கட்டணம் பல மடங்காக அதிகரிக்கிறது.
எனவே பழைய முறைப்படி விறகு அடுப்புக்கு மாறலாம் என்றால் விறகுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, புகையில்லாத அதே சமயம் குறைந்த விறகுகளை கொண்டு எரிக்க உதவும் நவீன இரும்பு அடுப்புகள் உள்ளன.
வீட்டுத் தோட்டங்களில் கிடைக்கும் காய்ந்த குச்சிகள், தேங்காய் மட்டைகளைப் பயன்படுத்தி சமைக்க முடிவதால், இல்லத்தரசிகள் பலரும் இந்த நவீன அடுப்புகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.