வாழ்வியல்

மொகஞ்சதாரோவில் கிடைத்த பசுபதி முத்திரையில் இருப்பது ஆதிசிவன்தான்: சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் திட்டவட்டம்

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: ‘மொகஞ்சதாரோவில் கிடைத்த பசுபதி முத்திரையில் இருப்பது ஆதி சிவன்தான்’ என்று சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிந்து சமவெளியில் கிடைத்த பசுபதி முத்திரையில் இருப்பது சிவன் இல்லை என்றும், அவை ‘புரோட்டோ எலாமைட்’ என்ற தென்மேற்கு ஈரானில் இருந்த நாகரிகத்தின் அடிப்படையாகக் கொண்ட முத்திரையாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர் ஆட்ரே டுருஷகே தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த சிந்து சமவெளி ஆராய்ச்சியாளர் தி.லெ.சுபாஷ் சந்திரபோஸ் கூறியிருப்பதாவது: பசுபதி முத்திரை என்பது, சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு எனப்படும் மொகஞ்சதாரோவில் வெளிக்கொணரப்பெற்ற ‘எம்-304ஏ’ என்ற அடையாள எண்ணுடைய முத்திரையாகும். இந்த முத்திரையை தொல்பொருள் ஆய்வாளர் சர் ஜான் மார்ஷல் ‘பசுபதி முத்திரை’ என அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்த முத்திரையின் மேல் பகுதியில் எழுத்துகளும், தீக்குச்சி வடிவ மனிதக் கோட்டுருவமும், நடுவே மிருகக் கொம்புகளையும், ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் கால்வட்ட வடிவமும் கொண்ட மகுடத்தைச் சூடியபடி, போகம், கோரம், யோகம் ஆகிய முகங்களுடன் மூலபந்த யோகாசனத்தில் அமர்ந்துள்ள ஒரு மனித உருவமும் உள்ளன. அந்த மனித உருவத்தை சுற்றி காண்டாமிருகம், எருமை, யானை, புலி, தீக்குச்சி வடிவ மனிதக் கோட்டுருவங்களும் பொறிக்கப்பெற்றுள்ளன.

அந்த 3 முகங்களைப்பற்றி சிவஞானசித்தியார் சுபக்கம், முதல்வன் கொண்ட திருமேனிகளில் சில திருமேனி போகவடிவமும், சில திருமேனி கோரவடிவமும், சில திருமேனி யோக வடிவமுமாகக் கொண்டது. அவை முறையே உயிர்களுக்குப் போகம் புரிதல் பொருட்டும், வினையினை வீட்டுற்பொருட்டும், யோக முத்தி உதவுதற் பொருட்டுமாம் என விவரிக்கிறது.

இந்த முத்திரையின் மேல் பகுதியில் உள்ள எழுத்துகள், தீக்குச்சி வடிவ மனிதக் கோட்டுருவம் ஆகியவற்றை மிருதுவான காகிதத்தில் அச்சிட்டு இடமிருந்து வலமாக ‘பசு இட்ட பதியான்’ எனப்படித்து பசு என்னும் உயிர்களைப் படைத்த பதி என்பது தன்மை ஒருமைப்பெயர் என்பதும், உயிர்களை படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழில் பகவன் சிவன் எனும் ஆதிசிவன் என்பதும் தமிழகராதியின் துணையுடன் பொருளறிய முடிகிறது.

பசு பாசம் பதி என்பது சைவசித்தாந்தத்தின் கோட்பாடு, பாசம் என்னும் பற்று நீங்க பசுவாகிய உயிர் பதியாகிய சிவமாகும். அதாவது பசுபதியாகும் என்பது சைவசித்தாந்த தத்துவம் உரைக்கும் உண்மையாகும். காண்டாமிருகம், எருமை, யானை, புலி, தீக்குச்சி வடிவ மனித கோட்டுருவம் ஆகியவை அனைத்தும் பண்டைய இந்தியத் திருநாட்டின் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வட கிழக்கு, தெற்கு ஆகிய 5 திசைகளில் வாழ்ந்த 5 பெருங்குடி மக்களின் அடையாள குறியீடுகளாகும்.

தற்போதைய கர்நாடக மாநிலத்தின் பெயர் பழங்காலத்தில் எருமை நாடு என்பதும், ஒரிசா, வங்காளம் ஆகிய மாநிலங்களின் அடையாளச் சின்னம் புலி என்பதும், உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களின் அடையாளச் சின்னம் யானை என்பதும் அதற்கான தகுந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கண்டவற்றின் வாயிலாக ‘எம்-304ஏ’ என்ற அடையாள எண்ணுடைய முத்திரையில் உள்ள மனித உருவம் ஆதி சிவனே. இந்த முத்திரையில் உள்ள எழுத்துகளும் குறியீடும் செந்தமிழ் மொழியைச் சேர்ந்தவையாகும். சிந்து சமவெளி நாகரிகத்தின் குறியீடுகளை அடையாளப்படுத்தி, எழுத்துகளைக் கூட்டிப் படித்து, தமிழகராதியின் துணையுடன் இதன் பொருளறிய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT