ஊட்டி தலைமை தபால் நிலையம்.
ஊட்டி: ஊட்டி தலைமை தபால் நிலையம் இரு நூற்றாண்டு பாரம்பரியமும், நீலகிரி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. நீலகிரி மாவட்டத்தில் தபால் சேவை தொடங்கி 200-வது ஆண்டை எட்டியுள்ளது.
ஊட்டி தலைமை தபால் நிலையத்தின் வரலாறு மாவட்டத்தின் நிர்வாக, சமூக மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சியுடன் முக்கிய அத்தியாயமாக விளங்குகிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு 1826-ம் ஆண்டு மதராஸ் மாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்ரோ வந்தார். அவரது வருகைக்கு பின் முதல் தபால் நிலையம் உருவானது. இந்திய தபால் சட்டம் 1837-ல் அமலுக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் தபால் சேவை தொடங்கப்பட்டது.
தபால் சேவை வருவாய் துறையின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், 1828-ல் ஆட்சியராக இருந்த சல்லிவனுக்கும் புதிய ஆளுநர் எஸ்.ஆர்.லஷிங்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால், ஊட்டியின் நிர்வாகமும், தபால் சேவையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றன. அப்போது, இரண்டு எழுத்தர்கள் மற்றும் 5 பணியாளர்கள் சேவையில் இருந்தனர்.
1837-ம் ஆண்டு கர்னல் தாமஸ் கிங் தபால் அலுவலராக நியமிக்கப்பட்டார். அவரின் கீழ் இரண்டு எழுத்தர்கள் மற்றும் 4 விநியோகப் பணியாளர்கள் பணியாற்றினர்.
பின்னர் 1843-ல் கமாண்டன்ட் அலுவலகம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தபால் துறை மீண்டும் வருவாய் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹாட்ஜஸ் முதல் போஸ்ட் மாஸ்டராக பொறுப்பேற்றார்.
தற்போதைய இடத்தை அடையும் வரை தபால் நிலையம் பல முறை இடம் மாறியது. 1878-ல் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, தபால் மற்றும் தந்தி அலுவலகம் இணைந்த புதிய கட்டிடத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 1883-ம் ஆண்டு டிசம்பரில் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது.
பொதுத் துறை அலுவலகங்களுக்கு அடுத்திருந்த இப்பகுதி பின்னாளில் ‘டெலிகிராப் ஹில்’ என அழைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ராபர்ட் சிஷோம் வடிவமைத்தார். தற்போது இந்த கட்டிடம் இந்தியாவின் பாரம்பரிய தபால் நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட தபால் நிலையங்கள் 1888-ல் கோவை ஆய்வாளர் வட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகு 1951-ல் மாவட்டத்தில் 40 கிளை தபால் நிலையங்கள் செயல்பட்டன. அப்போது, உதகமண்டலத்தின் விநியோக தபால் நிலையமாக இருந்தது.
1962-ம் ஆண்டு நீலகிரி தபால் பிரிவு உருவாக்கப்பட்டது. அதன் தலைமையகம் ஊட்டியில் அமைக்கப்பட்டது. 1994-ல் ஊட்டி தபால் நிலையத்திற்கு, தோடர் இனக் குடிசையின் படத்துடன் கூடிய நிரந்தர நினைவு முத்திரை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
நீலகிரியின் தகவல் தொடர்பு வரலாற்றில் இரு நூற்றாண்டு பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் ஊட்டி தலைமை தபால் நிலையம், இன்றும் மாவட்டத்தின் பண்பாட்டு மற்றும் நிர்வாக அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.