நேபாளத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுடன் சேர்ந்து இந்தி பாடல் ஒன்றுக்கு ஆடி இருக்கும் நடன வீடியோ இணைவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தின் சிட்வான் மாவட்டத்தில் உள்ள எவரஸ்ட் அகாதமியில் வேலை பார்ப்பவர் ஆசிரியை சீமா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்களுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அடிக்கடி அவர் இவ்வாறு வீடியோக்கள் பதிவிடுவது வழக்கம்.
தற்போது சீமா பகிர்ந்து இருக்கும் வீடியோவில் அவர், தனது மாணவர்களுடன் ‘தில்ருபா தில்னாஷீன்’ என்கிற இந்திப் பாடலுக்கு நடனமாடி உள்ளார். வீதி ஒன்றில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் நீலம் மற்றும் பச்சை வண்ண சீருடையில், தங்களின் அடையாள அட்டை அணிந்துள்ளனர்.
ஆசிரியை சீமா மிகவும் இயல்பாக பாடலுக்கு ஏற்றபடி நடனமாட, மாணவர்கள் அதை மிகுந்த உற்சாகத்துடன் அடிபிசகாமல் பின்தொடர்கின்றனர். அவர்களின் உற்சாகம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ள, அதுவே இவர்கள் இப்படி ஆடுவது இது முதல் முறையில்லை என்பதை உணர்த்துகிறது.
இந்த நடனம் இணையவாசிகள் பலரின் நேர்மறையான கருத்துகளை கவர்ந்துள்ளது. ஆசிரியை சீமாவின் நடன அசைவுகளுக்காகவும் அவர் மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்யும் விதத்துக்காகவும் பலர் அவரைப் பாராட்டி உள்ளனர்.
வழக்கமான வகுப்பறை பாடங்களுக்கு வெளியே நடைபெறும் செயல்பாடுகளின் மூலம், மாணவர்களை உற்சாகமாக வைத்திருக்கவும், அவர்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கவும் இது மிகச் சிறந்த வழி என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆசிரியை - மாணவர்களின் இந்த நடன வீடியோ, அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரான சித்தாந்த் கவுஷலையும் கவர்ந்துள்ளது. அந்த வீடியோ குறித்து கருத்திட்டுள்ள அவர், தனது பாடலை ரசித்தமைக்காக சீமாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தனது பாடல் வரிகளுக்கு குழந்தைகள் உதடுகள் அசைவதைப் பார்ப்பது அந்த நாளின் மிகச் சிறந்த தருணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.