

ஜார்ஜியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இந்தி திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அனமரியா ஈவா (anamaria_eva_) என்கிற பெயர் கொண்ட இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் அச்சிறுமி தனது குழந்தைத்தனமான அசைவுகளை வெளிப்படுத்தி பல இந்தி பாடல்களுக்கு மனதைக் கவரும்படி ஆடியிருக்கும் நடன வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் பொதுவாகவே 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை பார்வைகளைப் பெறுகின்றன.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள பாலிவுட் பாடல் வழக்கமான இந்த பார்வைகளை கடந்துள்ளது. ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே’ படத்தின் வரும் ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற பாடலுக்கு நடனமாடி வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ 36 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்த வீடியோவில், அச்சிறுமி நெருப்புக்கு அருகே அமர்ந்து தனது பிஞ்சுக் கரங்களை நீட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் ஒரு வயதானவர் அமர்ந்திருக்கிறார். அது அவரின் தாத்தாவாக இருக்கலாம். பாடல் ஒலிக்கும்போது சிறப்பான தனது பாவனை வெளிப்பாடுகளால் காண்பவரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார்.
இந்த வீடியோ அதிகமான பார்வையாளர்களை மட்டும் பெறவில்லை. இதற்கு 60,000 பேர் கருத்தும் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இந்தப் பாடல் ஷாருக்கான் - கஜோல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவித்திருப்பவர்களில் ஒருவர், ‘இதுதான் உண்மையான உலகம். அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். அந்த அன்பு எல்லைகளற்றது என நான் நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் ‘நீ எங்களை மகிழ்வுடன் வைத்திருக்கும் குழந்தை. தொடர்ந்து வெற்றி பெறுவாயாக’ என வாழ்த்தி உள்ளார்.
மூன்றாவது நபரும், ‘நீங்கள் பல மொழிகளில் பாடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களின் இனிமையான வீடியோக்கள் எனது நாளை மகிழ்ச்சியானதாக ஆக்குகிறது. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்” என வாழ்த்தி உள்ளார்.
பல பயனர்கள் அச்சிறுமிக்கும் அவளது தாத்தாவுக்கும் இருக்கும் அன்பை வெகுவாக பாராட்டி உள்ளனர். ஒரு பயனர், ‘அந்த தாத்தாவைப் பாருங்கள். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார். இன்னுமொரு பயனர், ‘மனதை மயக்கும் பாவனைகள்’ என வியந்துள்ளார்.