மும்பை: மும்பையைச் சேர்ந்த திவ்யா தாவ்டே என்ற இளம் பெண், தனது தாத்தா, பாட்டியை சமீபத்தில் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் மூலம் அவர்கள் தங்களது வாழ்நாளில் முதல் முறையாகக் கடலைப் பார்த்துள்ளனர். இதை வீடியோவாக பதிவு செய்த அந்தப் பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது வேகமாக பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது.
பல தசாப்தங்களாக செவி வழியாக மட்டுமே அறிந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான கடலை அவர்கள் நேரில் கண்ட முதல் நொடி வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், திவ்யாவின் தாத்தா, பாட்டி கால்களை கடல் அலைகள் தொட்டுச் செல்லும்போது சிலிர்ப்படைந்து புன்னகையுடன் நிற்கிறார்கள்.
இதுகுறித்து திவ்யா கூறும்போது, "கடலில் அவர்கள் தண்ணீரைத் தொட்டு வணங்கிய காட்சி, தூய்மையான நம்பிக்கை எப்படியிருக்கும் என்பதற்கு சான்றாக இருந்தது" என்றார். இணையதளவாசிகள் இந்த வீடியோவை பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.