மதுரை: உலக கொசு தினம் ஆண்டுதோறும் ஆக.20-ல் அனுசரிக்கப்டுகிறது. 1897-ம் ஆண்டில்சர் ரொனால்டு ராஸ் என்பவர், கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு மலேரியா நோய் பரவுகிறது என்பதை கண்டுபிடித் ததை நினைவுகூரும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எனவே, இந்த தினத்தில் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற ஆபத்தான நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு முறைகளை மக்களிடம் ஊக்குவிக்கவும், சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொசுக்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் எம்.ராஜேஷ் கூறியதாவது: உலகில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை கொசுக்கள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை. இவை பறவைகள், வெளவால்கள், தவளைகள் போன்ற பல உயிரினங்களுக்கு உணவாகப் பயன் படுவதால், இது சுற்றுச்சூழல் அமைப்புக்கு அவசியமான ஒன்றாகும்.
மேலும், மகரந்தச் சேர்க்கை மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் கொசுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏடிஸ், அனாபிலீஸ், க்யூலெக்ஸ் போன்ற கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ், மலேரியா போன்ற பல நோய்களை பரப்புகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மலேரியாவால் ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கொசுக் களால் மட்டும் ஆண்டுக்கு 7.25 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
கொசுக்களுக்கு பிடித்தவர்கள்
கர்ப்பிணிகள், மது அருந்துவோர், கருமையான ஆடைகளை அணிந்திருப்போர், வியர்வை நாற்றம், உடல் உஷ்ணம் உள்ளவர்கள் போன்றவர்களை கொசுக்கள் கடிக்கின்றன. ஏனென்றால், அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், மூச்சை வெளியிடும்போது வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்டவற்றை சுமார் 30 மீ. தொலைவிலிருந்தே கொசுக்கள் கண்டுபிடிக்கின்றன. குறிப்பாக மற்ற வகை ரத்தம் உள்ளவர்களைக் காட்டிலும் 'ஓ' வகை ரத்தம் உள்ளவர்களை கொசுக்கள் இருமடங்கு அதிகமாகக் கடிக்க விரும்புகின்றன. ஏனென்றால், இதில் புரதச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தப்பிக்கும் வழிமுறைகள்
வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். தேவையற்ற டயர்கள், டப்பாக்களை அகற்ற வேண்டும். சுறுசுறுப்பாகவும், உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டி மருந்துகள், உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை, கொசுவலை என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மொத்தத்தில் தங்கள் பகுதியில் கொசு அதிகம் தங்காத வகையில் பார்த்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
கொசுக்கள் இல்லாத இடம்
கொசுக்கள் இல்லாத ஒரே கண்டம் அண்டார்டிகா. ஒரு பெண் கொசு ஒரே நேரத்தில் 300 முட்டைகள் வரை இடும். ஒரு ஆண் கொசுவின் ஆயுட்காலம் 6 அல்லது 7 நாட்கள். ஆனால், பெண் கொசு 5 மாதங்கள் வாழ்கின்றன. உலகம் முழுவதும் 3,700-க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் உள்ளன. சராசரியாக சுமார் 2.5 கிராம் எடை கொண்ட கொசு தனது உடல் எடையைவிட 5 மில்லியன் லிட்டர் பங்கு ரத்தத்தை உறிஞ்சுகிறது. மணிக்கு சுமார் 1 முதல் 1.5 மைல் வேகத்தில் பறக்கும் இவை, உணவைத் தேடி 40 மைல் தூரம் வரை இடம்பெயரக் கூடியவை.