வாழ்வியல்

தத்துவங்களாகும் ஆணின் தனிநபர் உரையாடல்கள்

என்.ஆனந்த் வெங்கடேஷ்

பிரபஞ்ச ஞானத்தின் குரல் எப்போதும் ஏன் ஆண்களுடையதாகவே இருக்கிறது? ஜிம்மில் இரும்புத் தட்டுகளின் சத்தத்துக்கு நடுவே, என் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருக்கும்போது, என் காதுகளில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ, கண்ணதாசனோ, வாலியோ, மருதகாசியோ எழுதிய ஏதோ ஒரு தத்துவப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

​வாழ்க்​கை​யின் நிலை​யாமை, ஆசைகளின் மாயம், விதி​யின் சக்கரம், மனித அகந்​தை​யின் வீண் பெருமை என எல்லாவற்றையும் ஓர் ஆண் பாடக​னின் கம்​பீர​மான, உலகை உணர்ந்த குரல் பாடிக் கொண்​டிருந்​தது. அது எனக்​கான ஒரு புதிய வெறியை, அந்த வலியைக் கடந்து ஓடு​வதற்​கான ஒரு வைராக்​கி​யத்​தைத் தந்​தது. ஆனால், அடுத்த பாடல் மாறு​வதற்​குள் வரும் அந்தச் சில நொடிகள் மவுனத்​தில், ஒரு சில்​லிட்ட, கூர்​மை​யான உண்மை என் மண்​டை​யில் சுத்​தி​ய​லால் அடிப்​பது போல் இறங்கியது.

எங்கே அந்​தப் பெண்​கள்? பெண்​களால் எழுதப்​பட்ட, பிரபஞ்ச ரகசியங்​களைப் பேசும் பிரம்​மாண்​ட​மான தத்​து​வப் பாடல்​கள் எங்கே இருக்​கின்​றன? நம் பொதுக் கலாச்​சா​ரத்​தில்​ - குறிப்​பாகத் தமிழ் சினி​மா​வில்​ - வாழ்க்கை ஞானத்​தைப் போதிக்​கும் தளம் ஏன் முற்​றி​லும், ஆதிக்​கத்​தோடு ஆண்​களின் கூடார​மாகவே வடிவ​மைக்​கப்​பட்​டிருக்​கிறது?

இந்​தக் கேள்​வியை எதிர்​கொண்ட அடுத்த நொடியே, ரோஷ​னாரா பேகம் அல்​லது தாமரை எழு​திய ஏதோ ஒரு தனித்​து​வ​மான வரியையோ, அல்​லது மூவா​யிரம் ஆண்​டு​கள் பின்​னோக்​கிச் சென்று வேத காலத்து கார்​கியை​யும் மைத்​ரே​யியை​யும் கைகாட்டி, “பார்த்​தீர்​களா, பெண்​களும் தத்​து​வம் பேசி​யிருக்​கிறார்​கள்!” என்று கூச்​சலிடு​வார்​கள்.

இதை அதன் உண்​மை​யான பெய​ரால் அழைப்​போம்: இது அறி​வு​சார்ந்த கோழைத்​தனம் மற்​றும் வரலாற்​றின் பின்​னால் ஒளிந்​து​கொள்​ளும் ஏமாற்று வேலை. நாம் இங்கே விதி​விலக்​கு​களைப் பற்​றிப் பேச​வில்​லை. ஓர் ஆதிக்க அமைப்​பு, தன் முகமூடியைத் தக்​க​வைத்​துக்கொள்​வதற்​காக அனு​ம​தித்த ஓரிரு துளி​களைப் பற்றி நாம்பேச​வில்​லை. நாம் பேசுவது ஒட்​டுமொத்​த​மாக ஒரு பாலினத்​தின் குரல் திட்​ட​மிட்​டுத் துடைத்​தெறியப் பட்​டிருப்​ப​தைப்பற்​றி.

உண்மை என்​னவென்​றால், வாழ்க்​கையின் அர்த்தத்தை சமூகம் புரிந்​து​கொள்​வதற்கான ஊடகம், முற்​றிலும் ஆண்​களுக்​கான ஒரு பிரத்​யேக சங்​க​மாகவே வடிவ​மைக்​கப்​பட்​டிருக்​கிறது. வரலாற்று ரீதி​யாக, உலகம் முழு​வதும், இந்த ‘இருத்​தலியல் தவிப்​பை’ (Existential Crisis) அனுபவிக்​கும் ஆடம்​பரம் ஆண்​களுக்கு மட்​டுமே வழங்​கப்​பட்​டிருக்​கிறது.

ஓர் ஆற்​றங்​கரை​யில் அமர்ந்​து, நட்​சத்​திரங்​களைப் பார்த்​து, ‘இந்தப் பிரபஞ்​சமே அர்த்​தமற்​றது’ என்று தத்​து​வம் பேசுவதற்கு ஓர் அடிப்​படைத் தகுதி தேவை: அது, அவசி​யமற்ற இலவச நேர​மும், குடும்ப உணர்​வு​சார் உழைப்​பிலிருந்து (Emotional Labor) கிடைக்​கும் விடு​தலை​யும் ஆகும்.

ஆணா​திக்கச் சமூக அமைப்​பில், ஓர் ஆணின் விரக்தி என்​பது ஒரு தத்​துவ நிகழ்​வாகக் கொண்​டாடப்​படு​கிறது. அவன் உலகத்​தின் மீது ஏமாற்​றமடை​யும்​போது, அவன் ஒரு ‘சிந்தனை மேதை’ அல்​லது ‘பற்​றற்ற ஞானி’ என்று அழைக்​கப்​படு​கிறான். அவனிடம் ஒரு மைக்​கும் பேனா​வும் கொடுக்​கப்​பட்​டு, இந்த உலகத்​தின் மாயைகளைப் பற்​றிப் பாடு​வதற்கு அவனுக்கு மேடை அமைத்​துக் கொடுக்​கப்​படு​கிறது.

பெண்​கள் இயல்​பாகவே தத்​து​வப் பாடல்​களை எழுதத் தகு​தி​யற்​றவர்​களா அல்​லது அவர்​களின் அன்​றாட வாழ்க்​கையே அத்​தனை கொடூர​மான, அப்​பட்​ட​மான தத்​து​வங்​களால் நிறைந்து கிடப்​ப​தால், அதை ஒரு நாலரை நிமிடப் பாடலாக மொழிபெயர்க்க வேண்​டிய அவசி​யம் அவர்​களுக்கு இல்​லாமல் போய்​விட்​ட​தா?

இதற்​கான விடை, சமூகத்​தின் மவுன​மாக்​கல், பெண்​களின் மரபணுவுக்​குள் இருக்​கும் ஆழமான வாழ்​வியல் உண்மை ஆகிய இரண்​டின் கலவை​யாகும். உலகளா​விய போக்​கும் இதையே​தான் பிர​திபலிக்​கிறது. மேற்​கத்​திய நாடு​களின் காதல் கவிதைகள் முதல் கிழக்​கின் கஜல்​கள் வரை, பொது​வெளி​யில் பேசப்​பட்ட தத்​து​வங்​கள் யாவும் ஆண்​களின் தனி நபர் உரை​யாடல்​களாகவே இருந்​துள்​ளன.

சினி​மாத்​துறை​யின் இரும்​புக் கதவு​களை உடைத்​துக் கொண்டு பெண் பாடலாசிரியர்​கள் உள்ளே வந்​த​போதும், அவர்​கள் ஒரு குறிப்​பிட்ட வட்​டத்​துக்​குள்​ளேயே முடக்​கப்​பட்​டனர். இந்த பிரபஞ்​சத்​தின் இயக்​கத்தை ஒரு பெண் அக்​கு​வேறு ஆணிவேறாகப் பிரித்​துப் பார்ப்​பதை இந்​தத் துறை விரும்​புவ​தில்​லை, நம்​புவது​மில்​லை.

இருப்​பினும், இதற்​குப் பின்​னால் ஓர் உன்​னத​மான உண்மை இருக்​கிறது. பெண்​கள் தத்​து​வத்தை எழுத வேண்​டிய​தில்​லை, ஏனென்​றால் அவர்​களே தத்​து​வ​மாகத்​தான் வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்​கள். ஆண்​கள் சகிப்​புத்​தன்​மை​யை​யும் தியாகத்​தை​யும் பற்​றிப் பக்​கம்​ பக்​க​மாகக் கவிதைகள் எழுதும்​போது, பெண்​கள் அவற்றைத் தங்​கள் அன்​றாட வாழ்​வில் சத்​தமில்​லாமல் சகித்து வாழ்​கிறார்​கள். ஆண்​கள் படைப்​பை​யும் அழி​வை​யும் தூர நின்று வியந்து பார்க்​கும்​போது, ஒரு பெண் தன் உடலையே சிதைத்​து, குரு​தியை உதிர்த்​து, ஒரு புதிய உயிரைப் படைக்​கும் பிரசவ தத்​து​வத்தை நேரடி​யாக அனுபவிக்​கிறாள்.

ஆண்​கள் எல்​லா​வற்​றை​யும் துறப்​ப​தைப் பற்​றிப் பாடும்​போது, பெண்​கள் தனக்​கென்று எந்​தவொரு உடைமை​யும் இல்​லாத—தங்​கள் பெயரோ, அடை​யாளமோ கூடத் தங்​களு​டைய​தாக இல்​லாத—ஒரு பற்​றற்ற உலகில்​தான் பிறந்​தது முதல் வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்​கள்.

எவர் ஒரு​வர் ஒடுக்​கு​முறையை​யும், தன் அகந்​தையை அழித்து ஒரு குடும்​பத்​தைக் காப்​ப​தை​யும், மனித இயல்​பின் கோர முகங்​களை​யும் விளிம்பு நிலை​யில் இருந்து தின​மும் பார்க்​கிறாரோ, அவருக்கு ‘வாழ்க்கை ஒரு நீர்க்​குமிழி’ என்று பாட்​டெழுத வேண்​டிய அவசி​யமில்​லை. அது ஏற்கெனவே அவர்​களின் எலும்​பு​களுக்​குள் ஊறி​யிருக்​கிறது.

வடிவ​மைப்பு மாற்​றம் தேவை:

நாம் பெண்​களை அறி​வார்ந்த சிந்​தனைத் தளத்​திலிருந்து முற்​றி​லு​மாக விலக்​கி, அவர்​களை வெறும் உணர்ச்​சிகளுக்​கானவர்​களாகவும், வீட்டு உபயோகப் பொருட்​களாக​வும் மட்​டுமே சுருக்​கி​விட்​டோம். தத்​து​வப் பாடல்​களை எழுது​வ​திலிருந்​தும் பாடுவதிலிருந்​தும் பெண்​களைத் தடுப்​ப​தன் மூலம், மனிதகுலத்​தின் பாதி ஞானத்தை நாமே நமக்கு மறுத்​துக் கொண்​டிருக்​கிறோம்.

இனிமேலும் வரலாற்​றின் பக்​கங்​களைக்​ காட்​டி தப்​பிக்​க முயல வேண்​டாம்​. இந்​த வடிவ​மைப்​பு மாற்​றப்​பட வேண்டிய நேரம்​ இது!

- என்.ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி | தொடர்புக்கு: anaushram44@gmail.com

SCROLL FOR NEXT