மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது ரமாபாய் ரன்வீர், மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆனால், அவர் நாடு முழுவதும் செய்தியானதற்குக் காரணம் அவரது வெற்றி அல்ல. 3 கி.மீ போட்டி தூரத்தை வெறுங்காலுடன், ஓட்டப் பந்தயத்துக்கான பிரத்யேக ஆடை அணியாது சேலையில் கடந்ததும், அந்தப் போட்டியில் பரிசுத் தொகை ரூ.3000-ஐ வென்று அதை தனது மகளின் கல்விச் செலவுக்கு செலுத்த நினைத்ததும்தான் ரமாபாய் ரன்விரை கவனப்படுத்தியுள்ளது.
யார் இந்த ரமாபாய் ரன்வீர்?
கோலேஸ்வர் கல்வி வளாகத்தின் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி பீட் மாவட்டத்தில் ‘அமிர்த தவுத்’ என்ற பெயரில் 3 கி.மீ மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.
சத்திரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் இருந்து பாக்யநகர் சவுக் வரையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வயதினரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட 47 வயதான பெண்தான் ரமாபாய் ரன்வீர். கணவரை இழந்த ரமாபாய் சமையலராகப் பணிபுரிந்து வருகிறார். இரண்டு குழந்தைகள் உண்டு. இந்நிலையில், மாரத்தான் பற்றி கேள்விப்பட்ட அவர் அந்தப் போட்டியில் கலந்து கொண்டார்.
ஆரம்பத்தில் சேலையை தூக்கிச் செருகிக் கொண்டு, செருப்புடன் ஓடிய அந்தப் பெண், செருப்பு கால்களில் இருந்து அடிக்கடி நழுவி வேகத்தடை போட்டதால் அதைக் கைகளில் எடுத்துக் கொண்டு ஓடலானார்.
அவருடன் ஓடிய இளம் வயதினர் பலர் டிராக் சூட், நல்ல ஷூக்கள் என்று ஓட, எதையும் பொருட்படுத்தாமல் ஓடிய ரமாபாய் வெற்றியும் பெற்றார். அந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.3,000 தான் என்றபோதும் ரமாபாய்க்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.5,000 பரிசாக வழங்கியுள்ளனர்.
அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்ட ரமாபாய், “நான் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எனக்கு ரூ.3000-க்கு பதில் ரூ.5,000 அளித்தனர். அதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. என் மகள் பூஜாவுக்கு நான் நோட்டு, பேனா வாங்கினேன். மீதமுள்ள பணத்தை ஆர்த்திக்காக செலவு செய்வேன்” என்று ஓர் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார்.
ரமாபாயின் வெற்றிக் கதை இணைய உலகில் வைரலாகியுள்ளது. சமூக வலைதள கவனத்துக்கு வந்ததால் பாராட்டுதல்களும் குவிந்து வருகின்றன.
அதேவேளையில், “இதுபோன்ற ‘வெற்றிக் கதைகள்’ வருத்தமளிக்கின்றன. உண்மையில் இத்தகைய வேதனையான வெற்றியைக் கொண்டாடுவது ஏற்புடையதல்ல. ஒரு பெண் தனது குழந்தையின் கல்விக்காக, வெறும் 3,000 ரூபாய்க்காக இவ்வளவு வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தால் பெண்கள் முன்னேற்றம் என்பது முழுமை பெறவில்லை என்றே அர்த்தம்,” என்றும், “ஒரு தனித்து வாழும் பெண், பெரியளவில் தாய், கணவர் வீட்டு உதவிகள் கிடைக்காமல் தன் குடும்பத்துக்காக தான் மட்டுமே உழைக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியச் சமூகத்தில் இன்னமும் நீடித்துக் கொண்டிருப்பதன் சாட்சி” என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.
கூடவே சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு வளர்ச்சிகள் வந்தாலும் ரமாபாய் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் பொருளாதார நிலை பாதாளத்தில் தான் கிடக்கின்றது என்றும் சமூக ஆர்வலர்கள் அக்கறையை வெளிப்படுத்துகின்றனர்.