அனைவரது வாழ்க்கையும் மேம்பட வழிகாட்டுகிற கல்விதான் அப்துல் கலாமையும் உயர்த்தியது.
பள்ளியில் இருந்து கல்லூரிக்கும், கல்லூரியில் இருந்து வான் பொறியியல் படிப்புக்கும், வானியல் தொழில்நுட்பத்தில் இருந்து இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்கிற உயர்வுக்கும், நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரில் இருந்து குடியரசுத் தலைவர் என்கிற பதவிக்கும் கலாமை இட்டுச் சென்றது இடையறாத கற்றல்தான்.
அப்துல் கலாம் ராமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் படித்தார். படிப்பில் சராசரி மாணவராக இருந்தபோதும் அறிவுக் கூர்மையோடும் கடின உழைப்பாளியாகவும் இருந்தார். படிப்புக்காக அதிக நேரத்தைச் செலவிடுவார். பள்ளியில் படித்தபோது ஒருநாள், வகுப்பு மாறி நுழைந்துவிட்டதற்காகக் கணித ஆசிரியர் கலாமைத் திட்டினார்.
அதற்காக கலாம் வருந்தவில்லை. ஆசிரியர் திட்டியதை நினைத்து அவமானமோ கோபமோ அடையவில்லை. மாறாக, அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.
அதை நடத்தியும் காட்டினார். குறிப்பாக, கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுத் தன்னைத் திட்டிய ஆசிரியரின் வாயால் பாராட்டைப் பெற்றார்.
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப் படிப்பை 1954இல் கலாம் முடித்தார். 1955இல் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) வான் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
கல்லூரியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த போது கலாமின் ஆய்வில் பெரிதாக எந்த முன்னகர்வும் இல்லை எனக் கல்லூரித் தலைவர் அதிருப்தி அடைந்தார்.
மூன்று நாள்களுக்குள் ஆய்வை முடித்துச் சமர்ப்பிக்காவிட்டால் கலாமின் கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்படும் எனக் கண்டிப்புடன் கூறினார்.
கல்வி உதவித் தொகை இல்லையென்றால் மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாது என்கிற நிலையிலும் கலாம் பதற்றப்படவில்லை.
அவகாசம் வழங்கப்பட்ட மூன்று நாள்களுக்குள் தனது ஆய்வை முடித்துக் கல்லூரித் தலைவரை வியக்கவைத்தார்.
“கல்லூரியில் கலாம் மேற்கொள்ளும் எந்த ஆய்வாக இருந்தாலும் அதை முடிப்பதற்கு எப்போதுமே மிகக் கடுமையான காலக்கெடுவை நிர்ணயிப்பேன்.
அது கலாமுக்கு மன அழுத்தத்தைத் தந்தபோதும், மிகச் சிறப்பாகத் தன் ஆய்வை முடித்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்” என அந்தக் கல்லூரித் தலைவர் கலாம் குறித்து நினைவுகூர்ந்திருக்கிறார்.
கடினமாக உழைப்பதோடு தொடர்ச்சியாகப் படித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையும் எந்தச் சூழலையும் நிதானத்துடன் கையாள வேண்டும் என்பதையும் தன் வாழ்க்கை மூலம் மாணவர்களுக்கு உணர்த்திச் சென்றிருக்கிறார் கலாம்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.