படம்: மெட்டா ஏஐ
ஒரு பள்ளியில் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 17–18 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் தனியாக என்னிடம் வந்து பேசினார்.
“என் நண்பர்கள் கெட்ட வார்த்தை பேசுறாங்க. எனக்கு அது பிடிக்காது. நான் பேச மாட்டேன். அதுக்காகவே ‘என்னடா, நீ பொம்பளைப் பிள்ளையா?’ என்று கேட்கிறார்கள். ஆனா, அவங்கள விட்டு விலகி வரவும் முடியல.”
அந்த மாணவர் சொன்னது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அந்தச் சிறிய வாக்கியத்துக்குள் ஒரு பெரிய சமூக எதிர்பார்ப்பு இருந்தது. அது:
“ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.”
அந்த மாணவர் கெட்ட வார்த்தை பேச விரும்பவில்லை. அது அவருடைய இயல்பாக இருக்கவில்லை. ஆனால், அந்த இயல்பை வெளிப்படுத்தியபோது, அது அவரது ஆண்மையோடு ஒப்பிடப்பட்டது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு மாணவி தன்னுடைய தோற்றத்தைப் பற்றி பேசும்போது, “என்னிடம் வேறு திறமைகள் இருந்தாலும், நான் அழகில் (beauty) அந்த அளவுக்கு இல்லை. என்ன செய்தாலும், நான் அட்ராக்ட்டிவ் இல்லை என்ற ஒரு குறை எனக்குள் இருக்கிறது” என்றார்.
அந்த மாணவியின் திறமைகள் அவருக்குத் தெரியும். தன்னால் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதும் தெரியும். ஆனாலும், தன்னை மதிப்பிடும்போது, சமூகத்தின் அழகு, அளவுகோலும் அவருடைய மனதுக்குள் வந்து நின்றுவிட்டது.
இந்த இரண்டு அனுபவங்களும் வேறுபட்டவை. ஆனால், இரண்டுக்கும் பின்னால் ஒரு பொதுவான விஷயம்தான் இருக்கிறது.
சமூகம் அவர்களுக்கு ஓர் அடையாளத்தை மட்டும் கொடுக்கவில்லை. அந்த அடையாளத்துக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வடிவத்தையும் கொடுத்திருக்கிறது.
பிறந்தவுடன் ஒரு குழந்தை ஆண் அல்லது பெண் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. அதோடு அந்தக் குழந்தையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும் மெதுவாக உருவாகத் தொடங்குகின்றன.
ஆண் என்றால் தைரியமாக இருக்க வேண்டும். அழக் கூடாது. மென்மையாக இருக்கக் கூடாது. குறிப்பிட்ட விதத்தில் பேச வேண்டும். குறிப்பிட்ட விதத்தில் நடக்க வேண்டும். பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும். மென்மையாக இருக்க வேண்டும். உடை, தோற்றம், உடல், குரல், நடத்தை எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்புக்குள் இருக்க வேண்டும்.
இவை எல்லாம் நேரடியாக யாரும் நம்மிடம் உட்கார்ந்து சொல்ல வேண்டியதில்லை. ஒரு கேலி, ஒரு பாராட்டு, ஓர் ஒப்பீடு, ஒரு திரைப்படக் காட்சி, ஒரு சமூக ஊடகப் பதிவு, வீட்டில் சொல்லப்படும் ஒரு வாக்கியம், நண்பர்களின் எதிர்வினை முதலானவை போதுமானவை. கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் எதிர்பார்ப்புகள் நம்முடைய உள் குரலாக மாறிவிடுகின்றன. அப்போது ஒரு மாற்றம் நடக்கிறது.
“எனக்கு இது உண்மையில் பிடிக்கிறதா?” என்பதற்குப் பதிலாக, “என்னைப் போன்றவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா?” என்று நாம் நம்மையே அளக்கத் தொடங்குகிறோம்.
அங்கேதான் “நான், நானாக இருப்பது” என்ற விஷயம் சிக்கலாகத் தொடங்குகிறது.
ஓர் ஆண் தன்னுடைய பாலினத்துக்குச் சமூகமே இணைத்திருக்கும் எல்லா பண்புகளையும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பெண்ணும் சமூகத்தின் பெண் என்ற வரையறைக்குள் முழுமையாகப் பொருந்த வேண்டிய அவசியமில்லை.
ஆனால், அவர்கள் தங்களுடைய அடையாளத்துக்குள் இருந்தபடியே தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவு இடம் இருக்கிறது?
அவன் ஆண்தான். ஆனால் அவனால் மென்மையாக இருக்க முடியுமா?
அவள் பெண்தான். ஆனால் சமூகத்தின் Beauty standard-க்குப் பொருந்தாமல் இருக்க முடியுமா?
ஓர் ஆண் அழலாம். ஒரு பெண் தைரியமாக இருக்கலாம். ஓர் ஆணுக்கு சில ‘பெண்களுக்கான’ விஷயங்கள் பிடிக்கலாம். ஒரு பெண்ணுக்கு சில ‘ஆண்களுக்கான’ விஷயங்கள் பிடிக்கலாம்.
இவை அனைத்தும் ஒரு மனிதரின் அடையாளத்தை மறுக்க வேண்டிய காரணங்களாக மாற வேண்டியதில்லை. அதாவது, ‘நமக்கு வழங்கப்பட்ட பாலின அடையாளத்துக்குள் இருந்தபடியே, நம்முடைய சொந்த அடையாளத்தை (identity) வெளிப்படுத்துவதற்கான இடம் இருக்கிறதா?’ என்பதே முதலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி.
அப்படியிருக்கும்போது, ஆண் - பெண் என்ற நமக்குப் பழக்கமான இரண்டு பிரிவுகளுக்குள்ளேயே இவ்வளவு சமூக எதிர்பார்ப்புகளும் குழப்பங்களும் இருக்கும்போது, அந்த எதிர்பார்ப்புகளையே வேறுவிதமாக அனுபவிக்கும் ஒருவரை நாம் சந்திக்கும்போது அது இன்னும் பெரிய பண்பாட்டு அதிர்வு (cultural shock) ஆக இருப்பதில் ஆச்சரியமில்லை.
ஒரு நாள் என்னிடம் இன்னொரு மாணவர் தனியாக வந்து இப்படி பேசினார்:
“நான் ஆணாக உணரவில்லை. நான் திருநங்கை (transgender) என்று நினைக்கிறேன். என் ஏரியாவில் இதே மாதிரி இருக்கிற சில பேர் சந்தோஷமா அவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. வீட்டில் போய் சொல்வதற்கு ரொம்ப பயமாக இருக்கிறது. எனக்கு ஏதாவது பிரச்சினையா?”
அந்தக் கேள்வியில் ஒரு ஐடென்ட்டியை பற்றிய குழப்பம் மட்டும் இல்லை. “நான் இப்படித்தான் இருக்கிறேன் என்றால், என்னைச் சுற்றியுள்ள உலகம் என்னை அப்படியே இருக்க விடுமா?” என்ற பயமும் இருந்தது.
இதுதான் LGBTQ+ அனுபவங்களைப் புரிந்துகொள்ளும்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம்.
நமக்கு அது புதிதாக இருக்கலாம். நமக்குப் புரியாமல் இருக்கலாம். சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். அது பெரியவர்களுக்கு மட்டுமல்ல.
இன்றைய இளம் தலைமுறையினருக்கும், குறிப்பாக ‘யங் அடல்ட்வுட்’டில் இருப்பவர்களுக்கும், இவை எல்லாம் ஏற்கெனவே தெளிவாகப் புரிந்துவிட்டது என்று நாம் நினைத்துவிட முடியாது. அவர்களுக்கும் கேள்விகள் இருக்கலாம். குழப்பங்கள் இருக்கலாம். தங்களுடைய நண்பர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.
ஏனென்றால், நாம் அனுபவிக்காத ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது எளிதல்ல.
ஆனால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள, அதை நாமே அனுபவித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்த உலகத்தில் நாம் அனுபவிக்காத எண்ணற்ற விஷயங்களைப் பற்றி, “இது அவர்களுக்கு இப்படித்தான் இருக்கலாம்” என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலை நமக்கு இருக்கிறது.
அதே மனநிலை இங்கும் தேவைப்படுகிறது.
எல்லாவற்றையும் உடனடியாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் நம்மிடம் சரியான பதில் இருக்க வேண்டியதில்லை.
“எனக்குப் புரியவில்லை. ஆனால், இது அவர்களுடைய அனுபவமாக இருக்கலாம். அவர்கள் தங்களுக்குப் பொருத்தமான விதத்தில் வாழட்டும். ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல், வன்முறை அரங்கேற்றாமல், மற்றவரின் பாதுகாப்பையும் உரிமையையும் மதித்து வாழ முடியும்” என்ற அடிப்படை மனநிலையே சில நேரங்களில் போதுமான தொடக்கமாக இருக்கலாம்.
ஏனென்றால், ஒருவர் நம்மைப் போல இல்லை என்பதற்காக அவருடைய வாழ்க்கையை நம்முடைய அளவுகோலில் அளக்க வேண்டிய அவசியமில்லை.
இது பெரியவர்களுடைய விஷயம் மட்டுமல்ல.
“ஆண் என்றால் இப்படித்தான்”, “பெண் என்றால் இப்படித்தான்”, “இது பையன்களுக்கானது”, “இது பொண்ணுங்களுக்கானது”, “இப்படி இருந்தால் தான் அழகு”, “இப்படி இருந்தால் தான் தைரியம்” - இப்படியான எண்ணங்கள் பெரியவர்களாக ஆன பிறகு திடீரென்று உருவாகவில்லை. அவை குழந்தைப் பருவத்திலேயே நம்மைச் சுற்றி உருவாகத் தொடங்குகின்றன.
உளவியலில் இதை Gender-role socialisation என்று சொல்கிறோம். அதாவது, ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து வளரும்போது, அது ஆண் அல்லது பெண் என்பதன் அடிப்படையில், “எப்படி நடக்க வேண்டும், எதை விரும்ப வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன உணர்வுகளை வெளிப்படுத்தலாம்” என்பது போன்ற சமூக எதிர்பார்ப்புகளைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் செயல்முறை.
இந்தக் கற்றல் எப்போதும் நேரடியான அறிவுறுத்தலாக இருக்க வேண்டியதில்லை. ஒரு பையன் அழும்போது “ஆம்பளப் பிள்ளை அழக்கூடாது” என்று சொல்லப்படுவதும், ஒரு பெண் தன்னுடைய தோற்றத்துக்காக அதிகமாகப் பாராட்டப்படுவதும், “இது பையன்களுக்கான விளையாட்டு”, “இது பொண்ணுங்களுக்கான வேலை” என்று பிரிப்பதும், குழந்தைக்கு பாலினம் சார்ந்த எதிர்பார்ப்புகளை மெதுவாகக் கற்றுக்கொடுக்கின்றன.
குடும்பம், பள்ளி, நண்பர்கள், ஊடகம், திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் முதலானவை அனைத்தும் இந்தக் கற்றலில் பங்கு வகிக்கலாம். ஒரு குழந்தை தன்னைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் புரிந்துகொள்ளத் தொடங்கும் போதே, பாலினம் சார்ந்த பல சமூகச் செய்திகள் அதன் உலகத்துக்குள் வந்து சேர்கின்றன.
அதனால் LGBTQ+ பற்றிய புரிதலையும் வெறும் பெரியவர்களின் உறவுகள் அல்லது அடல்ட் விஷயங்களாக மட்டும் பார்த்துவிட முடியாது. அதன் அடிப்படையில் இன்னும் எளிமையான ஒரு கேள்வி இருக்கிறது. அது:
ஒரு குழந்தை தன்னைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறது?
“நான் பையன். அதனால் நான் இப்படித்தான் இருக்க வேண்டும்.”, “நான் பெண். அதனால் நான் இப்படித்தான் இருக்க வேண்டும்.” என்று கற்றுக்கொள்வதா? அல்லது “நான் பையன் என்றாலும், எனக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது.”, “நான் பெண் என்றாலும், எனக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது.”, “என்னுடைய ஐடென்ட்டியை நான் மெதுவாகப் புரிந்துகொள்ளலாம்” என்று கற்றுக்கொள்வதா?
இங்கேதான் ‘பிலாங்கிங்’ (Belonging) என்ற உணர்வு முக்கியமாகிறது.
அதாவது, நான் யார்தான்? மற்றும் எங்குதான் செல்வது?
நிறைய இடங்களில் ஒருவருடைய அடையாளத்தைச் சுற்றியிருக்கக்கூடிய அந்த ஆழமான போராட்டத்தை நாம் பார்திருப்போம். ஆனால், அதை வெகுவாக கடந்திருப்போம்.
சமூகம் ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், ஒருவரால் அந்த வடிவத்துக்குள் தன்னைப் பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில், “பெண்ணாக இருக்க வேண்டும்” என்ற இடத்திலும், சமூகமே உருவாக்கிய பெண் என்ற வடிவத்துக்குள் தன்னால் முழுமையாக இருக்க முடியவில்லை.
அப்போது பிரச்சினை “நான் ஆணா, பெண்ணா?” என்ற கேள்வியில் மட்டும் இல்லை.
“நான் யாராக இருந்தாலும், நான் விரும்பும் விதத்தில் என்னை வெளிப்படுத்துவதற்கு இந்த உலகத்தில் எனக்கு இடம் இருக்கிறதா?” என்பதில்தான் இருக்கிறது.
அதே Belonging-ஐ இன்னொரு வகையிலும் நாம் அனுபவிக்கிறோம்.
சில நேரங்களில் நம் வாழ்க்கையில் ஒருவர் வருகிறார். அவர் நம்முடைய வாழ்க்கையில் எந்த உறவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அது காதலாக இருக்கலாம். நட்பாக இருக்கலாம். அல்லது பெயரிட முடியாத ஓர் ஆழமான உணர்வு பந்தம் (emotional connection) ஆக இருக்கலாம்.
ஆனால், அந்த மனிதருடன் இருக்கும்போது... “நான் என்னை விளக்கிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை.”, “நான் இப்படியே இருக்கலாம்.”, “என்னைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் இருக்கிறார்” என்ற ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. அந்த மனிதரை இழப்பது அப்போது ஒரு காதல் அல்லது நட்பு உறவை இழப்பது மட்டுமல்ல.
“என்னைப் புரிந்துகொண்ட ஒருவர் இருக்கிறார்” என்ற அனுபவத்தையும், “நான் இங்கே சேர்ந்திருக்கிறேன்” என்ற உணர்வையும் இழப்பதாக இருக்கலாம். அதுதான் belonging.
நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் belonging-ஐ தேடுகிறோம். குடும்பத்தில், நண்பர்களிடம், ஓர் உறவில், ஒரு சமூகத்தில், ஓர் இடத்தில் என. “இங்கே நான் என்னைப் போல இருக்கலாம்” என்ற உணர்வு நமக்கு தேவைப்படுகிறது.
ஆனால், ஒருவர் தன்னுடைய ஐடென்ட்டியை வெளிப்படுத்துவதற்கே பயப்பட வேண்டிய சூழல் இருந்தால், அந்த belonging எப்படி உருவாகும்?
அதனால்தான் LGBTQ+ பற்றிப் பேசுவது, “அவர்களை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?” என்ற கேள்வியோடு மட்டும் முடிந்துவிட வேண்டியதில்லை.
நாம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அல்லது நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலின அடையாளத்துக்குள், நம்முடைய சொந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவு இடம் இருக்கிறது?
இதிலிருந்து தொடங்கினால், LGBTQ+ அனுபவமும் நமக்கு முற்றிலும் அந்நியமான ஒன்றாகத் தோன்றாமல் இருக்கலாம். ஏனென்றால், நம்மில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில், “நான் இப்படித்தான் இருக்க வேண்டுமா?” என்று கேட்டிருக்கிறோம்.
வித்தியாசம் என்னவென்றால், சிலருக்கு அந்தக் கேள்வி ஒரு சிறிய சமூக எதிர்பார்ப்பாக இருக்கலாம். சிலருக்கு அது அவர்களின் முழு identity-யையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு ஆழமானதாக இருக்கலாம். அதனால், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், கேட்கலாம். உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் நிராகரிக்காமல் இருக்கலாம். நமக்குப் பழக்கமில்லாததாக இருக்கலாம். ஆனால், அதை வன்முறையாக மாற்ற வேண்டியதில்லை.
இறுதியில், நாம் ஒவ்வொருவரிடமும் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்:
“நான் யார் என்பதை சமூகம் எனக்காக முடிவு செய்துவிட்டதா? அல்லது அந்த அடையாளத்துக்குள் இருந்தபடியே, நான் யார் என்பதை நான் கண்டுபிடிக்க எனக்கு இடம் இருக்கிறதா?”
அந்த இடம் கிடைக்கும்போதுதான், “நான், நானாக இருக்கிறேன்” என்பது ஒரு வார்த்தையாக இல்லாமல், ஒரு வாழ்க்கை அனுபவமாக மாறுகிறது.
‘நான்’ நானாக இருக்க இடம் இருக்கிறதா?
இது LGBTQ+ மக்களுக்கான கேள்வி மட்டும் அல்ல... நம் எல்லோருக்குமான கேள்வி!
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com
Edited by ஷாலினி