துபாய்: துபாயை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் சதீஷ் சன்பால் (40), மனைவிக்காக ஆண்டுதோறும் 3 கிலோ தங்கம் வாங்கி வருகிறார்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்தவர் சதீஷ் சன்பால் (40). எட்டாம் வகுப்பு படிக்கும்போது வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். அவரது அம்மா தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.50,000-ஐ மகனிடம் வழங்கினார். இந்த பணத்தை மூலதனமாக வைத்து சதீஷ் சன்பால் மிக இளம் வயதில் துபாய்க்கு சென்றார்.
முதலில் துபாயில் ஒரு சிறிய மளிகை கடையை தொடங்கினார். அதில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. பின்னர் ரியல் எஸ்டேட், ஓட்டல், நிதி சேவை, ஊடகம் என பல்வேறு துறைகளில் அடுத்தடுத்து கால் பதித்தார். கடந்த 2018-ல் அனக்ஸ் ஹோல்டிங் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இது துபாயின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த தபின்டாவை, சதீஷ் சன்பால் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2024-ம் ஆண்டு இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. துபாயில் 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி கட்டிடத்தில் சதீஷ் சன்பால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.8,000 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
நெட்பிளிக்ஸ் சார்பில் ‘டெஸி பிளிங்' என்ற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் சதீஷ் சன்பால் தனது மனைவியுடன் பங்கேற்று உள்ளார். துபாயில் வாழும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது.
இதில் சதீஷ் சன்பாலின் மனைவி தபின்டா கூறும்போது, “நான் முஸ்லிம், எனது கணவர் இந்து. எங்களின் திருமணத்துக்கு எனது குடும்பத்தினர் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் சதீஷின் திறமையை பார்த்து எனது குடும்பத்தினரின் மனநிலை மாறியது. எனது கணவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். எனக்காக அவர் ஆண்டுதோறும் 3 கிலோ தங்கம் வாங்கி தருகிறார்” என்றார்.
சதீஷ் சன்பால் கூறும்போது,”பணம் என்பது கடவுள் கிடையாது. ஆனால் கடவுளுக்கு இணையாக பணம் மதிக்கப்படுகிறது” என்றார்.
தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு கிலோ தங்கம் விலை ரூ.1.5 கோடியாக உள்ளது. தொழிலதிபர் சதீஷ் சன்பால் தனது மனைவிக்காக ஆண்டுக்கு 3 கிலோ தங்கத்தை வாங்கி கொடுக்கிறார். இதன்படி அவர் ஆண்டுக்கு ரூ.4.5 கோடியை செலவிடுகிறார். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சதீஷ் சன்பாலின் மனைவி தபின்டாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.