படம்: மெட்டா ஏஐ

 
வாழ்வியல்

பச்சிளம் குழந்தைகளை சூரிய வெளிச்சத்தில் காட்டக் கூடாது: மருத்துவ நிபுணர்கள் அலர்ட்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

“பச்சிளம் குழந்தைகளை சூரிய வெளிச்சத்தில் காட்டக் கூடாது” என்று தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழாவில் மருத்துவ நிபுணர்கள் எசு்சரித்துள்ளனர்.

ஆண்டுதோறும் நவ.15 முதல் 21-ம் தேதி வரை ஒரு வாரம் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘ஒவ்வொரு பச்சிளம் குழந்தையையும் தொடும்போது பாதுகாப்பை உறுதி செய்வோம்’ கருத்தை மையப்படுத்தி பச்சிளம் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘டீன்’ அருள் சுந்தரேஷ்குமார் தலைமையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை சார்பில் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து பச்சிளம் குழந்தைகள் துறைத் தலைவர் ஜெ.அசோக்ராஜா கூறியவது: “கர்ப்பக் காலத்தில் மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனைகளை கடைபிடித்தாலே குறைபிரசவங்களை தடுக்க முடியும்.

குறைபிரசவங்களை தடுத்தாலே, குழந்தைகளுக்கு வரும் பெரும்பாலான நோய்களை தவிர்த்துவிடலாம். பிறந்த பச்சிளம் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ‘ஜில்’ என்று குளிர விடக் கூடாது. அடிக்கடி தாய், குழந்தைகளின் கை, கால்களை மென்மையாக தேய்த்து கதகதப்பை உண்டாக்க வேண்டும். கதகதப்பு ஏற்படாவிட்டால் தாய் தன் உடலோடு குழந்தைகளை அணைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படியிருந்தும் குழந்தையின் உடல் ‘ஜில்’ என குளிர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு குளிர் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

குழந்தை ஒரு நாளைக்கு 7 முதல் 8 முறை 10 முதல் 15 நிமிடங்கள் வரை பால் குடித்துவிட்டு, 5 முதல் 6 முறை சிறுநீர் கழிப்பதுடன் நன்றாக தூங்கினால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தால் மட்டுமே குழந்தைகளின் தேவைக்கு ஏற்றாற்போல் பெண்களுக்கு பால் உற்பத்தியாகும். இல்லையென்றால் குறைந்துவிடும். பச்சிளம் குழந்தைகளை வெயிலில் காட்டக்கூடாது.

பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள் படுதல், மஞ்சள் காமாலை வராமல் இருக்க சூரிய ஒளியில் காண்பிப்பார்கள். அவ்வாறு பச்சிளம் குழந்தைகளை சூரிய வெளிச்சத்தில் காட்டக்கூடாது. உடலில் நேரடியாக வெயில் படக்கூடாது. ஜன்னல் வழியாக வரக்கூடிய வெளிச்சம் படலாம். காலை, மாலை நேரங்களில் மட்டும் லேசான வெளிச்சத்தில், வெயிலில் குழந்தைகளை காட்டலாம்.

குறைபிரசவ குழந்தைகளுக்கு பெரும்பாலும் நுரையீரல் வளர்ச்சி குறைவாகி மூச்சுத் திணறல் ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் அழாமல் இருந்தால், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாமல் இருக்கக்கூடும். இது குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் குழந்தைகள் பிறந்தவுடன் அழ வேண்டும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT