‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் எந்த தேக்கமும் இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் எந்த தேக்கமும் இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
2 min read

மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு அதிக வட்டி பெறும் நோக்கத்தில் இந்திய காப்பீட்டு கழகத்தின் புதிய குழு ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘தமிழகத்தில் 01.04.2003-க்கு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதுநாள் வரை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

மத்திய அரசு 2013-ல் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. தமிழகம் இதனை பின்பற்றவில்லை.

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுநர் குழு, அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இனால் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர். எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நிதித்துறை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் 1.4.2003-க்கு பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி 6.8.2003-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைப்படி பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) விதிகளில் திருத்தம் செய்து 27.5.2004ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையிலேயே பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் விதிமுறைகள், கட்டுப்பாட்டுகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (டிசிபிஎஸ்) நிதிகளை மேலாண்மை செய்வது மற்றும் முதலீட்டை மேம்படுத்த மாநில அரசு கூடுதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் திரட்டப்பட்ட தொகைக்கு 6.25 சதவீதம் முதல் 6.46 சதவீதம் வரை வட்டி பெறப்படுகிறது. அதே நேரத்தில் மாநில அரசு கருவூல ரசீதுகளுக்கு பொருந்தக்கூடிய விகிதங்களில் வட்டி வழங்குகிறது. வருங்கால வைப்பு நிதி விகிதம் கருவூல ரசீதுகளின் வருவாயை விட அதிகமாக இருப்பதால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில் இடைவெளி உள்ளது. இதை ஈடுகட்ட பங்களிப்பு ஓய்வூதிய நிதியை இந்திய காப்பீட்டு கழகத்தில் பணப்பலனுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

தேக்க நிலை இருப்பதாக மனுதாரரின் குற்றச்சாட்டு உண்மையல்ல. இந்தத் திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் உள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணம் கேட்டு மொத்தம் 54,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. இதில் 51,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் எந்த தேக்கமும் இல்லை என்பதை காட்டுகிறது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அரசின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை டிசம்பர் 4-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் எந்த தேக்கமும் இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சட்டவிரோத குவாரி நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in