கண்ணூர்: கேரளாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், தனது திருமண நிகழ்ச்சியின்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கேட்டரிங் ஊழியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருமணக் கொண்டாட்டத்தையே சிறிது நேரம் நிறுத்தி வைத்தார்.
கேரள மாநிலம், கண்ணூரில் பெண் மருத்துவர் ஷிரின் சுபைர், டாக்டர் ரிசாஸ் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கேட்டரிங் குழுவைச் சேர்ந்த 2 பெண்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களில் ஒருவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாகவும், மற்றொருவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்தவர்கள் ஷிரின் ஒரு மருத்துவர் என்பதை அறிந்து அவரை உதவிக்கு அழைத்தனர். உடனடியாக இருவரையும் பரிசோதித்த ஷிரின், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். மணக்கோளத்தில் இருந்த மருத்துவர் தனது திருமணச் சடங்குகளை சிறிது நேரம் நிறுத்தி வைத்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கேட்டரிங் ஊழியர்கள் இருவருக்கு உதவினார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கருணை மற்றும் மருத்துவத் தொழிலுக்கான அர்ப்பணிப்புக்கு இது சிறந்த உதாரணம் என்று பலரும் பாராட்டியுள்ளனர். ‘முதலில் மருத்துவர்; அதன் பிறகுதான் மணப்பெண்’ என்ற வாசகம், அவரது முடிவைப் பாராட்டும் வகையில் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.