ஒரு குழந்தையிடம் ஒருவர் பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்துகொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கு அந்தச் செயல் அசவுரியமாக இருக்கலாம். அந்த நபருடன் தனியாக இருக்க விரும்பாமல் போகலாம். ஆனால், தனக்கு நடந்தது பாலியல் துன்புறுத்தல் என்பது அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்குமா? அதை எப்படிச் சொல்வது என்பதும் அதற்குத் தெரியுமா?
ஓர் அனுபவம் தவறானது என்று உணர்வதற்கும், அது பாலியல் துன்புறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதைப் பிறரிடம் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக, இளம் வயதுக் குழந்தைகளுக்கு உடல் சார்ந்த எல்லைகள், தனிப்பட்ட பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றைப் பற்றிய புரிதல் முழுமையாக இருக்காமல் இருக்கலாம்.
ஒரு குழந்தை தனக்கு ஏதோ பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தாலும், அது ஏன் தவறானது என்பதை விளக்குவதற்கான அறிவோ வார்த்தைகளோ அதற்கு இல்லாமல் இருக்கலாம். இதனால், குழந்தையின் உணர்வுக்கும் அந்த அனுபவத்தைப் பற்றிய புரிதலுக்கும் இடையில் இடைவெளி ஏற்படலாம்.
குழந்தைகள் ஏன் உடனடியாகச் சொல்லாமல் இருக்கிறார்கள்?
ஒரு குழந்தைக்கு தனக்கு நிகழ்ந்தது என்னவென்று புரியாமல் இருக்கலாம். அந்தச் செயல் தவறானது என்று உணர்ந்தாலும், அதை விவரிக்கத் தேவையான வார்த்தைகள் தெரியாமல் இருக்கலாம். சில நேரங்களில், தனக்கு நெருக்கமான ஒருவர் இப்படிச் செய்வார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கலாம். என்ன நடந்தது என்று சொன்னால் தன்னை யாரும் நம்ப மாட்டார்களோ என்ற கவலையும் ஏற்படலாம்.
இதனுடன், அந்த நபருடன் குழந்தை கொண்டிருக்கும் உறவும் முக்கியமானதாக இருக்கலாம். அந்த நபர் குடும்ப உறுப்பினராகவோ, குழந்தைக்கு நன்கு அறிமுகமானவராகவோ இருந்தால், அவர் செய்த செயலைத் தவறாக அடையாளம் காண்பதும், அதைப் பற்றிப் பேசுவதும் குழந்தைக்குச் சிக்கலாக இருக்கலாம்.
சிலர் குழந்தையை மிரட்டியிருக்கலாம். சிலர் அன்பு, பரிசு அல்லது நெருக்கத்தைப் பயன்படுத்தி குழந்தையை அமைதியாக இருக்கச் செய்திருக்கலாம். மேலும், பெரியவர்கள் என்ன சொல்வார்கள், குடும்பத்தில் என்ன நடக்கும் என்ற அச்சமும் குழந்தையின் வெளிப்பாட்டைப் பாதிக்கலாம்.
எனவே, குழந்தை உடனடியாகப் பகிரவில்லை என்பதற்குப் பயம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. தனக்கு நடந்ததைப் புரிந்துகொள்ள முடியாமை, அதை விவரிக்கத் தேவையான மொழி இல்லாமை, அந்த அனுபவத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்ற குழப்பம் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம்.
குழந்தையின் வயது, குடும்பச் சூழல், சமூகத்தின் அணுகுமுறை மற்றும் நம்பிக்கையுடன் பேசக்கூடிய ஒருவர் இருக்கிறாரா என்பனவும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பெற்றோர்களும் பெரியவர்களும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
குழந்தைகள் தங்கள் அனுபவத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தாவிட்டாலும், அவர்களின் நடத்தையில் சில மாற்றங்கள் தெரியலாம். சில உதாரணங்கள்:
> முன்பு மகிழ்ச்சியாக இருந்த குழந்தை திடீரென அதிகமாகப் பயப்படுவது, பதற்றமடைவது அல்லது தனிமையை நாடுவது.
> குறிப்பிட்ட ஒருவரைப் பார்க்கவோ, அவருடன் தனியாக இருக்கவோ மறுப்பது.
> தூக்கத்தில் மாற்றங்கள், அடிக்கடி கெட்ட கனவுகள் அல்லது படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகள் புதிதாகத் தோன்றுவது.
> வயதுக்கு ஏற்ற புரிதலைவிட அதிகமான பாலியல் தொடர்பான பேச்சு அல்லது நடத்தையை வெளிப்படுத்துவது.
> பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் இருப்பது, படிப்பில் கவனம் குறைவது அல்லது வழக்கமான செயல்களில் ஆர்வம் குறைவது.
> காரணம் புரியாத கோபம், அழுகை, பதற்றம் அல்லது உடல் நலக் குறைகள் இருப்பதாக அடிக்கடி கூறுவது.
இவை பாலியல் துன்புறுத்தலால் மட்டுமே ஏற்படும் அறிகுறிகள் அல்ல. குடும்பப் பிரச்சினைகள், பள்ளிச் சூழல், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களாலும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படலாம்.
எனவே, ஓர் அறிகுறியை மட்டும் வைத்து குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்று முடிவெடுக்க முடியாது. அதேபோல், வெளிப்படையான மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை என்பதற்காக, துன்புறுத்தல் நிகழவில்லை என்றும் கூற முடியாது.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், குழந்தையை விசாரிப்பதைப் போலக் கேள்விகள் கேட்பதற்குப் பதிலாக, அதன் நலனில் அக்கறை காட்டுவது முக்கியம். குழந்தை ஏதேனும் பகிர்ந்தால், குறுக்கிடாமல் கேட்பதும், குற்றம் சுமத்தாமல் இருப்பதும், தேவையான உதவியைப் பெறுவதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகும் புரிதல் ஏற்படலாம்!
ஒரு குழந்தைக்கு நான்கு வயதாக இருக்கும்போது பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அந்த அனுபவத்தைப் பற்றி அதற்கு 14, 17 அல்லது 18 வயதாகும்போதுதான் மற்றவர்களிடம் பகிரத் தோன்றலாம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அனுபவத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன காரணம்?
வளரும்போது குழந்தையின் உலகைப் புரிந்துகொள்ளும் விதமும், உறவுகளைப் பற்றிய பார்வையும் மாறுகின்றன. பள்ளியில் கிடைக்கும் பாலியல் கல்வி, நம்பகமான ஒருவருடனான உரையாடல் அல்லது பிறரின் அனுபவங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது போன்றவை, கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒன்றைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்ள உதவலாம்.
குழந்தைப் பருவத்தில் பெயரிட முடியாத ஓர் அனுபவத்தை, வளர்ந்த பிறகு பாலியல் துன்புறுத்தல் என்று ஒருவர் அடையாளம் காணக்கூடும்.
குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலை பெரியவர்கள் பின்னர் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுகளும், குழந்தைகள் தங்கள் அனுபவத்தைப் பகிர்வதில் உள்ள தடைகள் குறித்த ஆய்வுகளும் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
இந்தியச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வும், அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் முக்கியமானவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
குழந்தை பகிரும்போது நமது பதில் ஏன் முக்கியம்?
ஒரு குழந்தை தனது அனுபவத்தைப் பகிரும்போது, அது சொல்வதைக் கேட்பது மட்டுமல்லாமல், நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதும் முக்கியம். குறிப்பாக, பல ஆண்டுகளாகத் தனக்குள் வைத்திருந்த அனுபவத்தை 14 அல்லது 18 வயதில் ஒருவர் பகிரும்போது, அந்தப் பகிர்வை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பது அவர் தொடர்ந்து உதவி நாடுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
“ஏன் அப்போதே சொல்லவில்லை?”, “நீ ஏன் அங்கே சென்றாய்?”, “இது உண்மையா?” என்று சந்தேகத்துடனோ குற்றம் சுமத்தும் விதத்திலோ கேட்பது, அந்த நபர் மீண்டும் பேசுவதைத் தடுக்கலாம்.
ஏற்கெனவே பகிர்வதற்குத் தயங்கிய ஒருவர் எதிர்மறையான எதிர்வினையைச் சந்தித்தால், இனி யாரிடமும் இதைப் பற்றிப் பேசக் கூடாது என்று முடிவெடுக்கலாம். இதனால், அவருக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதும் தாமதமாகலாம்.
மாறாக, “நீ இதைப் பகிர்ந்ததற்கு நன்றி”, “உனக்கு நடந்ததற்கு நீ பொறுப்பல்ல”, “நான் உன் பேச்சைக் கவனமாகக் கேட்கிறேன்” என்று ஆதரவாகப் பேசுவது, அந்த நபர் பாதுகாப்பாகவும் மதிக்கப்படுவதாகவும் உணர உதவும். உடனடியாக எல்லா விவரங்களையும் கேட்பதற்குப் பதிலாக, அவர் எந்த அளவுக்குப் பகிர விரும்புகிறாரோ அந்த அளவுக்குப் பேசுவதற்கு இடமளிக்க வேண்டும். பதிலைத் திணிக்கும் கேள்விகளையும், ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் விவரிக்கச் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் ஒருவரின் மனநலம், உறவுகள் மற்றும் தன்னைப் பற்றிய பார்வையைப் பாதிக்கக்கூடும். ஆனால், அது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஒரே விதமாகப் பாதிக்கும் என்று கூற முடியாது. சரியான ஆதரவும் தேவையான மனநல உதவியும் கிடைக்கும்போது, அந்த அனுபவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க முடியும்.
புரிந்துகொள்வது என்பது முடிவெடுப்பது அல்ல
குழந்தையின் அனுபவத்தைப் புரிந்துகொள்வது என்பது அதற்குப் பதிலாக நாம் ஒரு கதையை உருவாக்குவதல்ல. அது பகிரும் தகவல்களை அதன் வயது, வளர்ச்சி நிலை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு கவனமாக அணுகுவதாகும்.
அதே நேரத்தில், குழந்தை சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது என்பது அதன் ஒவ்வொரு நடத்தையையும் பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புபடுத்துவதும் அல்ல.
குழந்தை ஏன் அப்போது பேசவில்லை என்று மட்டும் கேட்பதற்குப் பதிலாக, அதற்குத் தனது அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் விவரிக்கவும் தேவையான அறிவும் மொழியும் இருந்ததா என்பதையும் சிந்திக்க வேண்டும். குழந்தையின் சொற்களைக் கவனமாகக் கேட்டு, அதன் பாதுகாப்பை உறுதிசெய்து, தேவையான ஆதரவை வழங்குவதுதான் பெரியவர்களின் பொறுப்பு.
ஒருவர் தனது அனுபவத்தைப் பகிரும்போது, நாம் அந்த அனுபவத்தை மாற்ற முடியாது. ஆனால், அதை அவர் தனியாகச் சுமக்க வேண்டியதில்லை என்பதை நமது பதிலின் மூலம் உணர்த்த முடியும். சில நேரங்களில், நாம் அளிக்கும் ஆதரவான பதில்தான் அவர் தொடர்ந்து உதவி நாடுவதற்கான முதல் படியாக அமையலாம்.
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com
Edited by ஷாலினி
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.