வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களைக் காட்சிப்படுத்த விருதுநகரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் தேர்வு செய்யப்பட்ட இடம்.
விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்த தனி அருங்காட்சியகக் கூடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், அருங்காட்சியகம் எப்போது அமைக்கப்படும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்குக் கரையோரத்தில் அமைந்த விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் ஏராளமான வரலாற்று எச்சங்கள் கிடைத்தன.
அங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ல் முதலாம் கட்ட அகழாய்வு தொடங்கியது. கடந்த 2022 செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து, 2-ம் கட்ட அகழாய்வு கடந்த 2023 ஏப்ரலிலும், 3-ம் கட்ட அகழாய்வு கடந்த 2024 ஜூன் 18-லும் தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட்டன. 22 குழிகள் தோண்டப்பட்டு நுண்கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லுவட்டுகள், இரும்பு உருக்குக் கழிவுகள், சங்கு வளையல்கள் என அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 3,254 பழங்காலப் பொருட்கள் முதல்கட்ட அகழாய்விலும், 2-ம் கட்ட அகழாய்வில் 4,660 பொருட்களும், 3-ம் கட்ட அகழாய்வில் 5,100 பழங்காலப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் பண்டைத் தமிழரின் பாரம்பரியமும் வரலாறும் தொன்மையானது என்பதை நிரூபிக்க முடிந்தது. அதோடு இங்கு நுண்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படுகிறது. அகழாய்வு நடத்தப்பட்ட இடத்தில் தற்காலிகக் காட்சிக்கூடமும் அமைக்கப்பட்டது. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், தொல்லிய லாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு வியந்தனர்.
அதுமட்டுமின்றி விருதுநகரில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழாவிலும் 3 ஆண்டுகளாக வெம்பக்கோட்டை அகழாய்வு மாதிரி மற்றும் அங்கு கிடைத்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கீழடியைப்போன்று வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இதையடுத்து விருதுநகரில் கடந்த பிப்.26-ம் தேதி அரசு அருங்காட்சியகத்தை திறந்து வைத்த அப்போதைய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் கூறுகையில், வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களைக் காட்சிப்படுத்த அரசு அருங்காட்சியக வளாகத்திலேயே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்கு வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்கள் காட்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், இந்த அறிவிப் புக்குப் பிறகு இதுதொடர்பாக எந்தப்பணிகளும் மேற்கொள்ளவில்லை. இது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும், இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தின் தொன்மை மட்டுமின்றி பல்வேறு சிறப்புகளையும், இரும்பு கற்காலம் முதல் தமிழர்கள் இப்பகுதியில் கடல் கடந்த வாணிபத்தை மேற்கொண்ட வரலாறும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும் என்று தொல்லியல் ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத் துள்ளனர்.