‘உள்ளத்தில் நேர்மை குடிகொண்டிருந்தால், குணத்தில் அழகிருக்கும். குணத்தில் அழகு இருக்கும்போது, குடும்பத்தில் அமைதி இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்போது நாட்டில் ஒழுங்கு இருக்கும். நாட்டில் ஒழுங்கு இருக்கும்போது, உலகில் அமைதி நிலவும்.’
நாடு போற்றும் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம் எழுதிய ‘நேர்மையான வாழ்க்கை’ (The Righteous Life) நூலில் இடம்பெற்ற கருத்துகள் இவை. இதுபோல் தன் எழுத்தின் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கமளித்த படைப்பாளியாகவும் அவர் திகழ்ந்தார்.
தனது இளமைக் காலம் முதல் இந்தியாவின் விண்வெளி, ஏவுகணைத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதுவரை அப்துல் கலாம் அணு அணுவாக விவரித்து எழுதிய ‘அக்னிச்சிறகுகள்’ நூலைப் பலரும் ரசித்து வாசித்திருக்கக்கூடும்.
சிறுவனாக ராமேசுவரத்தில் செய்தித்தாள்களை அவர் விநியோகம் செய்த நாள்கள், பின்னர் சக அறிவியலாளர்களோடு சேர்ந்து சிறிய ரக ராக்கெட்டின் பாகங்களைத் தனது சைக்கிளின் பின்னால் கட்டி, ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்ற சம்பவம் நம் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தவை.
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏவூர்தியான எஸ்எல்வி-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் ஆரம்பக் கட்ட முயற்சியில் கண்ட தோல்விகள், அவற்றை அவர் எதிர்கொண்ட விதம் சிலிர்ப்பூட்டுபவை.
அவற்றைத் தத்ரூபமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய தன்வரலாற்றுக்கு அப்பால் 30க்கும் அதிகமான நூல்களையும் கலாம் படைத்தார்.
அறிவியலாளர் எனும் அடையாளத்துக்கு அடுத்தபடியாக நாட்டின் குடியரசுத் தலைவராகத் தான் சந்தித்த முக்கியத் தலைவர்கள், எடுத்த முடிவுகள், தனது வாழ்வின் அடுத்தக் கட்டப் பயணங்களை ‘திருப்புமுனைகள்’ (Turning Points) நூலில் கூறியுள்ளார்.
இந்தியா எவ்வாறு வல்லரசு நாடாகப் பரிணமிக்க வேண்டும் என்பது குறித்த தனது தொலைநோக்குத் திட்டத்தை, ‘இந்தியா 2020’இல் (India 2020: A Vision for the New Millennium) விரிவாக எழுதினார். ஒருகட்டத்தில் அதுவே ஒட்டு மொத்த தேசத்தின் இலக்காக ஒளிர்ந்தது.
நாட்டின் இளைஞர்களைத் தட்டியெழுப்பும் விதமாக அவர் வடித்த ‘எழுச்சி தீபங்கள்’ (Ignited Minds) நூல் பொன்மொழிகளின் களஞ்சியம்.
கவிதை எழுதுவதிலும் அலாதியான பிரியம் கொண்டிருக்கவே, ‘எனது பயணம்’, ‘ஒளிரும் தீப்பொறிகள்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை இயற்றினார்.
கலாமின் பெரும்பாலான புத்தகங்கள் இளம் தலைமுறையினருக்குத் தூண்டுதலாகவும், நாட்டுப் பற்றை வளர்க்கும் வகையிலும் அமைந்திருக்கும். ‘கனவு காணுங்கள்’ எனும் முழக்கம் அவரது எழுத்துகளின் மையமாக இருந்தது.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.