வாழ்வியல்

மூட்டு வலியை கட்டுக்குள் வைக்கும் உடல் எடை!  - சில முக்கியக் குறிப்புகள்

செய்திப்பிரிவு

மூட்டழற்சி (ஆஸ்டியோ - ஆர்த்ரைட்டிஸ்) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய். 2020 கணக்குப்படி, உலகம் முழுவதும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஏறக் குறைய 65 கோடிப் பேர் மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழங்கால் மூட்டின் ஜவ்வு, சுற்றியுள்ள அமைப்புகளில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டழற்சி உண்டாகும்.

யாரை அதிகம் பாதிக்கும்? - முதியவர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட மாதவிலக்கு நிற்கும் நிலையில் உள்ள பெண்கள்.

அறிகுறிகள்: மூட்டழற்சி படிப்படியாக ஆரம்பித்து வருடக்கணக்கில் தொடரக்கூடும். ஒவ்வொருவருக்கும் வலி, சிரமங்களின் அளவு மாறுபடும்.

> நீட்டி மடக்குவது போன்ற மூட்டு அசைவுகள் குறைய ஆரம்பிக்கும்

> நடக்கும்போது, படி ஏறி/இறங்கும்போது வலி உண்டாகும்

> காலை எழுந்தவுடன், 30 நிமிடங்கள் வரை மூட்டு இறுகிப்போயிருக்கும்

> மூட்டுக்குள் உராய்கிற சத்தம் கேட்கும்

> மூட்டில் வீக்கம் ஏற்படக்கூடும்

பயிற்சிகள்

மூட்டுப் பயிற்சிகளோடு, நடைப்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது போன்ற முழு உடலுக்கான மிதமான பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இவற்றில், உங்களுக்கு வசதியாக உள்ள ஏதேனும் ஒன்றை, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள், படிப்படியாக அரை மணி நேரம் வரை செய்யலாம். வாரத்திற்கு மொத்தம் இரண்டரைமணி நேரம்.

நடைப்பயிற்சி, யோகா செய்ய முடியாத பட்சத்தில், துணி மடிப்பது, ஒட்டடை அடிப்பது போன்ற மிதமான வீட்டு வேலைகளை முயன்றுபாருங்கள். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காராமல், 15-30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடந்து சின்ன சின்ன வேலைகளைச் செய்தபடி இருக்கலாம்.

பயம் வேண்டாம்

பயிற்சிகளைச் செய்வதால் மூட்டழற்சி மோசமடையும் என்கிற பயம் வேண்டாம். வலியுடன் பயிற்சிகள் செய்வது ஆரம்பத்தில் கஷ்டமாகத் தெரிந்தாலும், சில நாள்களிலேயே எளிதாகச் செய்ய முடிவதைக் காண்பீர்கள். பயிற்சிக்குப் பிறகு வலி அதிகமானால், வலி குறையும்வரை பயிற்சிகளை/ நடப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். பின் படிப்படியாகத் தொடர்ந்து செய்ய ஆரம்பியுங்கள்.

எடையைக் குறைப்பது

அதிக உடல் எடை, முழங்கால் மூட்டிற்குள் அழுத்தத்தை ஏற்படுத்தி, மூட்டழற்சி ஏற்படுவதற்குக் காரணமாகும். அல்லது இருக்கிற வலியை அதிகப்படுத்தி, உடலியக்கத்தைக் குறைக்கும். எனவே, உடல் எடையைக் குறைப்பது மூட்டழற்சியை தடுக்கவும், கட்டுக்குள் வைக்கவும் உதவும்.

அன்றாட வேலைகளால், மூட்டுக்குள் அழுத்தம் ஏற்பட்டு வலி அதிகமாவதைத் தடுக்க சில எளிய வழிகள்:

> மாடிப்படி ஏறும்போது, பக்கவாட்டுப் பிடியைப் பிடித்துக்கொண்டு ஏறலாம்; பாதிக்கப்படாத, குறைவாக வலியுள்ள காலை முதலில் வைத்து ஏறலாம்.

> அதிக நேரம் நிற்பது, மண்டியிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

> ஓடுவது, ஜாகிங், டென்னிஸ் போன்ற தீவிர பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT