நிறைவான பாதுகாப்பு: செல்வமகள் சேமிப்பு திட்டம் எனப்படும் சுகன்யா சம்ருதி யோஜனா - Sukanya Samrudhi Yojana திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்கைக்குத் தேவையான சேமிப்பாக இருக்க வேண்டும், உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்பாக இருக்க வேண்டும், அதற்கு நல்ல வட்டி வருமானம் வேண்டும், அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்பவர்களுக்கே வடிவமைக்கப்பட்டது தான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.
எப்படி தொடங்க வேண்டும்: இதில் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். குறைந்த சேமிப்புத் தொகை, அதிக வட்டி, கணக்கை முடிக்கும்போது 3 மடங்கு தொகை என பல்வேறு பலன்கள் உள்ளதால், ஏராளமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.
ஒரு பெண் குழந்தை 10 வயது வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் இருவரின் பெயரிலும் தனித்தனியாக 2 கணக்குகள் தொடங்கலாம்.
இதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கை வைத்து தொடங்க வேண்டும்.
எவ்வளவு சேமிக்கலாம்: குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்யலாம். 250 ரூபாயில் தொடங்கும் முதலீட்டுத் தொகை 300, 350, 400... என 50 ரூபாய் கூட்டலில் குறைந்தபட்ச தொகையைச் நிர்ணயித்து செலுத்தலாம்.
அதிக வட்டி: இந்த தொகைக்கு தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது. திட்டம் தொடங்கப்பட்டபோது 9.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டியை குறைத்ததால் மற்ற பல திட்டங்களை போலவே இந்த திட்டத்துக்கும் வட்டி குறைக்கப்பட்டது. ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் இத்திட்டத்துக்கான வட்டி, முதலீட்டு கணக்கில் செலுத்தப்படுகிறது.
முதிர்வு காலம்: செல்வ மகள் சேமிப்பு திட்டம் முதலீடு செய்யத் தொடங்கி 21 ஆண்டுகளில் நிறைவடையும். ஆனால் 18 வயது நிறைவடைந்த பெண், தன் திருமணத்தை முன்னிட்டு கணக்கை மூடி பணத்தை எடுத்துக் கொள்ளலாம். 18 வயது நிறைவடைந்த பிறகு மேற்படிப்புக்காக கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 50% வரை பணத்தையும் எடுக்கலாம்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்