நம்மில் எத்தனை பேர் க்ரூமிங் (Grooming) என்பது குறித்து அறிந்து வைத்திருக்கிறோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது குழந்தைகள் முகம் தெரியாத ஒருவரின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து பாதிக்கப்படும் அபாயம் க்ரூமரால் நிகழ்த்திக்காட்ட முடியும்.
க்ரூமிங் எனப்படும் பாலியல் குற்றங்களை குழந்தைகளிடம் செயல்படுத்துபவர்கள் அந்நியர்கள் இல்லை. குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே என்பது உறுதியானது.
குழந்தைகளை எளிதில் அணுகி பழகுவதற்கு குழந்தைகளுக்கு க்ரூமர்கள் நெருக்கமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அனைத்து க்ரூமிங் செயல்பாடுகளும், சிறுவர்களுடன் விளையாடுதல், அவர்களுக்கு பரிசு பொருகளை வழங்குதல், குழந்தைகளுக்கு விருப்பமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லுதல் போன்ற பெரியவர்கள் - சிறுவர்களுக்கு இடையே நடக்கும் சாதாரண நடவடிக்கைகளில் இருந்து தான் தொடங்குகின்றன என்று குற்ற விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலாட்டமாக பார்த்தால் மேலே சொன்ன நடவடிக்கைகளில் எந்தத் தவறும் இருப்பதுபோல் தெரியாது.
க்ரூமர் குற்றவாளிகள், குழந்தைகளுடன் பழகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகளின் விருப்பங்கள், பலவீனங்களை முழுமையாக தெரிந்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் குழந்தைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை தங்களின் ஆளுமைக்கு கீழ் க்ரூமர்கள் கொண்டு வருகின்றனர். அதற்கு பிறகு குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த விஷயங்களை அறிமுகம் செய்து, அவர்களிடம் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
விடாப்பிடியான முயற்சியுடன் செயல்படும் பாலியல் குற்றவாளிகள் தங்களின் இலக்கான குழந்தைகளிடம் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தி பின்னர் அவர்களை தங்கள் விருப்பப்படி தூண்டி விடுகின்றனர். அரிதாகவே வன்முறையை பயன்படுத்துகின்றனர்.
க்ரூமிங் செயல்பாடு ஒருவரிடம் அவருக்கு நேர்ந்தவற்றை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு நீண்ட கால பாதிப்புகளை உருவாக்குகிறது. தங்களுக்கு விருப்பமே இல்லாத போதும், குறிப்பிட்ட ஒரு செயலுக்கு இணங்கிப் போகும் தன்மையை பாதிக்கப்பட்டவர்களிடம் அது உருவாக்குகிறது. விசாரணைகளின் போது க்ரூமிங்கினால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு நேர்ந்தது பற்றி புகாரளிப்பது குறித்த குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
க்ரூமிங்கை தடுப்பது எப்படி? - க்ரூமிங் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவர்களின் இலக்குகளை குடும்பம், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். ஒருவர் க்ரூமிங்கால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்தால், முதலில் நாம் செய்ய வேண்டியது பொறுமையாக இருந்து தொடர்ந்து பாதிக்கப்படும் நபருக்கு ஆதரவாக அவருடன் நட்பு பாராட்டுவதுதான். இதனால், அவர் தாம் பாதிப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய அதிக காலம் எடுக்கலாம், இருந்த போதிலும் தொடர்ந்து அவருடன் நட்புடன் இருப்பது அவர் வெளிப்படையாக இருக்க உதவும்.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்