வாழ்வியல்

அஞ்சலி | லெடிசியா - சிசிலியன் மாஃபியா வீழ்ச்சிக்கு வித்திட்ட பெண் புகைப்படக் கலைஞர்!

இந்து குணசேகர்

1970-களில் இத்தாலியின் ரத்தக்கறை படிந்த சாலைகளையும், அங்கு சிசிலியன் மாஃபியாவால் நடந்த கொடூர குற்றச் சம்பவங்களையும் உலகின் கண்முன் சாட்சியாக நிறுத்தியவர் லெடிசியா பட்டாக்லியா.

துணிச்சல் மிக்க புகைப்படச் செய்தியாளராக அறியப்படும் லெடிசியா தனது 87-வது வயதில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி மறைந்தார். அவரது வாழ்க்கைப் பயணம் அசாத்தியங்கள் நிரம்பியவை.

அழகிய தீவுகள், சாலைகள், இயற்கை, வறுமை என அனைத்தையும் படப்பிடித்து காட்டிக் கொண்டிருந்த லெடிசியாவின்ன் கேமராவுக்கு காலம் வேறொரு பாதையைக் காட்டியது. அதுதான் சிசிலியன் மாஃபியா. 1970-களில் இத்தாலியை ரத்தக்களமாக மாற்றிக் கொண்டிருந்த கும்பல் அது. சிசிலியன் மாஃபியாவின் அட்டூழியங்களை களத்தில் புகைப்படமாக எடுக்கத் தொடங்கினார் லெடிசியா.

இத்தாலியின் சிசிலியன் மாகாணத்தில் உள்ள பலேர்மோவின் நகரின் பிரபல தினசரி செய்தித்தாளான L'Ora-ல் புகைப்படச் செய்தியாளராக பணியாற்றிய அவர் எடுத்த புகைப்படங்கள்தான் சிசிலியன் மாஃபியாவுக்கு முடிவுகட்ட அடித்தளமாக அமைந்தது.

சிசிலியன் மாஃபியாவால் நடத்தப்பட்ட அனைத்து படுகொலைகளையும் லெடிசியா புகைப்படமாக பதிவுச் செய்தார். நீதிபதிகள், காவலர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சிசிலியன் மாஃபியா படுகொலை செய்தது. ஒவ்வொரு நாளும் ஒரு நகரத்திற்கு சென்று அங்கு நடந்த படுகொலைகளை லெடிசியா புகைப்படம் எடுத்தார். இந்தப் புகைப்படங்களே இத்தாலியை ஆட்டிப்படைத்த சிசிலியன் மாஃபியாவை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1981-ஆம் ஆண்டு முதல் 1983 வரை சுமார் 600 பேர் சிசிலியன் மாஃபியாவால் பொதுவெளியில் கொல்லப்பட்டனர். இதில் சில கொலைகளும், குற்றங்களும் லெடிசியாவின் கண்முன்னே நடந்தன. 1983-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மாஃபியாவுக்கு ஆதரவு இல்லாத குழுக்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் காவலர்கள், மாஃபியா கும்பலை கைது செய்யத் தொடங்கினர். இதன் காரணமாக மாஃபியா கும்பலை சேர்ந்த 450 பேர் விசாரணைக்கு உட்டப்படுத்தப்பட்டனர்.

ஆரம்பத்தில் அஞ்சி நடுங்கிய பொதுமக்கள் பின்னர் மாஃபியா கும்பலுக்கு எதிராக சாட்சியாளர்களாக மாறினர். இத்தாலியில் 1985 முதல் 1990 வரை கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் புரட்சி நடந்தது. இந்தக் காலக்கட்டத்தைதான் பலேர்மேவின் வசந்த காலம் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றுக்கு எல்லாம் ஒர் உந்து சக்தியாக லெடிசியாவும், அவரது புகைப்படங்களும் இருந்தன. இத்தாலியில் சிசிலியன் மாஃபியா ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாட்களில் லெடிசியா எடுத்த புகைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பறியது.

சுமார் 50 வருடங்களாக எந்தவித அச்சமுமின்றி, துணிச்சலுடன் சிசிலியன் மாஃபியாவின் குற்றங்களை கேமராவின் மூலம் பதிவுச் செய்து கொண்டிருந்த லெடிசியாவின் மரணம் இயற்கையான ஒன்றாக அமைந்ததைக் கண்டு வியப்பதுதான் அவரது ஆளுமைக்குச் சான்று.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. முழு கட்டுரையை இங்கு வாசிக்கலாம்: இத்தாலியை உலுக்கிய சிசிலியன் மாஃபியாவுடன் மோதிய கெத்துக் கேமராக்காரி லெடிசியா!

தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT