

லெடிசியா பட்டாக்லியா... சமூக அரசியல் வரலாறு மீது ஆர்வம் கொண்ட எவரும் இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தனது புகைப்படங்கள் மூலம் அவர் பதிவு செய்த காட்சிகள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆம், இத்தாலியின் ரத்தக்கறை படிந்த சாலைகளையும், அங்கு சிசிலியன் மாஃபியாவால் நடந்த கொடூர குற்றச் சம்பவங்களையும் நம் கண்முன் சாட்சியாக நிறுத்தியவர் அவர்!
புகைப்படத் துறையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலங்களில், அதுவும் குற்றச் சம்பவங்களை பதிவுச் செய்யும் பிரிவில் தனி ஒரு பெண்ணாக லெடிசியா களம் கண்டார். அந்த முடிவுதான் தனது வாழ்நாள் முழுமைக்கான அங்கீகாரத்தையும் தரப்போகிறது என லெடிசியா அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், காலம் அந்தப் பரிசை லெடிசியாவுக்கு அளித்தது.
கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தனது 87-வது வயதில் மறைந்தார் லெடிசியா. புகைப்படக் கலைஞராக தனது வாழ்கைக்யைத் தொடங்கி சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி என தனது பயணத்தை முழுமையாக நிறைவு செய்த லெடிசியாவின் வாழ்க்கைப் பயணம் நிச்சயம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. குறிப்பாக மக்கள் நலம் விரும்பும் புகைப்படக் கலைஞர்களுக்கு.
சிசிலியன் மாஃபியாவும்.. லெடிசியாவின் கேமராவும்.. - இத்தாலியின் அழகிய தீவுகள், சாலைகள், இயற்கை, வறுமை என அனைத்தையும் படப்பிடித்து காட்டிக் கொண்டிருந்த லெடிசியாவின்ன் கேமராவுக்கு காலம் வேறொரு பாதையைக் காட்டியது. அது சிசிலியன் மாஃபியா... 1970-களில் இத்தாலியை ரத்தக் களமாக மாற்றிக் கொண்டிருந்த கும்பல் அது. சிசிலியன் மாஃபியாவின் அட்டூழியங்களை புதிதாகப் புகைப்படப் பத்திரிகையாளராக அடியெடுத்து வைத்த லெடிசியா பதிவு செய்யத் தொடங்கினார். பல அற்புதமான புகைப்படங்களை லெடிசியா எடுத்திருந்தாலும், சிசிலின் மாஃபியாவின் வன்முறைகளை காட்சிப்படுத்திய புகைப்படங்கள்தான் அவருக்கு சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்று தந்தது.
இத்தாலியின் சிசிலியன் மாகாணத்தில் உள்ள பலேர்மோவின் நகரின் பிரபல தினசரி செய்தித்தாளான L'Ora-ல் முதன்முதலாக புகைப்பட பத்திரிக்கையாளராக நுழைகிறார் லெடிசியா. 1970 முதல் 1980 வரை சிசிலியன் மாஃபியாவால் நடத்தப்பட்ட படுகொலைகளை தனது 35 மிமீ கொண்ட சிறிய கேமராவால் படப்பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் பலேர்மோ நகரில் இயங்கிய முக்கியப் புள்ளிகளுக்கும், சால்வடோர் ரீனாவுக்கும் (சிசிலியன் மாஃபியா தலைவர்) மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் துப்பாக்கிச் சூடு , கார் குண்டுவெடிப்புகள் போன்றவை பலேர்மோ மற்றும் அதன் அண்டை நகரங்களில் தொடர்ந்தன. நாளடைவில் கொலைகள் அங்கு அன்றாடச் செய்தியாக மாறின.
கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தேசிய நெருக்கடியை சமாளிக்கவும் ஜெனரல் கார்லோ ஆல்பர்டோ டல்லா சிசாவை பலேர்மோ நகரின் ஐனாதிபதியாக்குகிறார்கள் இத்தாலி அரசியல் தலைவர்கள். அதன்பின் நான்கு மாதங்கள் நகரில் அமைதி திரும்புகிறது. இந்த நிலையில்தான் டல்லா சியேசா, அவரது மனைவி இமானுவேலா, பாதுகாவலர் ஆகியோர் செப்டம்பர் 3, 1982 அன்று மாஃபியா கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகின்றனர். டல்லா சீசாவின் மரணம், இத்தாலியின் காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்கள், குடிமக்களை நம்பிக்கையற்றவர்களாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் உணரச் செய்கிறது.
இந்தக் காலக்கட்டங்களில் சிசிலியன் மாஃபியாவால் நடத்தப்பட்ட அனைத்து படுகொலைகளையும் லெடிசியா புகைப்படமாக பதிவுச் செய்தார். நீதிபதிகள், காவலர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சிசிலியன் மாஃபியா படுகொலை செய்தது. ஒவ்வொரு நாளும் ஒரு நகரத்திற்கு சென்று அங்கு நடந்த படுகொலைகளை லெடிசியா புகைப்படம் எடுத்தார். இந்தப் புகைப்படங்களே இத்தாலியை ஆட்டிப்படைத்த சிசிலியன் மாஃபியாவை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்தச் சம்பவங்களை , “நிறைய ரத்தம்... நிறைய ரத்தம்” என்று நேர்காணல் ஒன்றில் லெடிசியா பதிவுச் செய்திருக்கிறார்.
அப்போது சிசிலியன் மாஃபியாவால் கொல்லப்படுவது என்பது இத்தாலியில் சாதாரண ஒன்றாகவே இருந்தது. 1981-ஆம் ஆண்டு முதல் 1983 வரை சுமார் 600 பேர் சிசிலியன் மாஃபியாவால் பொதுவெளியில் கொல்லப்பட்டனர். இதில் சில கொலைகளும், குற்றங்களும் லெடிசியாவின் கண்முன்னே நடந்தன. அப்படியொரு சம்பவத்தைதான் இங்கு நினைவுப்படுத்துகிறோம்...
சிசிலியன் மாகாணத்தின் முன்னாள் ஜனாதிபதியான பியர்சான்டி மேட்டரெல்லாவின் சடலத்தை லெடிசியா எடுத்த புகழ்பெற்ற புகைப்படம் அப்படிப்பட்டதுதான்.
ஜன.6, 1980 அன்று, தனது மகள் மற்றும் சக புகைப்படப் பத்திரிக்கையாளரான ஃபிராங்கோ ஜெச்சினுடன் லெடிசியா காரில் பயணிக்கிறார்.அப்போது கும்பல் ஒன்று ஒரு காரைச் சுற்றி திரண்டிருப்பதை லெடிசியா பார்க்கிறார்.
மாஃபியா கும்பலால் சுடப்பட்ட தனது சகோதரரான பியர்சான்டி மேட்டரெல்லாவுக்கு (அப்போது சிசிலியன் ஜனாதிபதி) உதவ முயலும் செர்ஜியோ மேட்டரெல்லாவை (தற்போது இத்தாலியின் அதிபர்) லெடிசியா எடுத்த புகைப்படம்தான் அது. லெடிசியா எடுத்த இந்தப் புகைப்படம் பின்னாளில் இத்தாலியின் வரலாற்றில் முக்கியப் புகைப்படமாகவே மாறியது.
1980-களில் சிசிலியன் மாஃபியாவின் படுகொலைகள் குறித்த லெடிசியாவின் புகைப்படம் L’Ora செய்திதாளின் முதல் பக்கத்தில் தொடர்ந்து வெளியாகும். அந்தப் புகைப்படங்களை பாலேர்மோ நகரிலிருக்கும் பள்ளிகளில் லெடிசியா காட்சிப்படுத்தினார். அவ்வாறு செய்வதன் மூலம் ”இங்கு மாஃபியா உள்ளது... அது கொல்கிறது” என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், சிசிலியன் மக்கள் மாஃபியாவின் குற்றங்களை அறியாமல் இல்லை, எனினும் அவர்களின் செல்வாக்கு காரணமாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்தனர். மாஃபியா கும்பலுக்கு அடிபணிந்தனர். இந்த நிலையில், லெடிசியாவின் புகைப்படங்கள், மக்களை தொடர்ந்து கண்களை மூடிக் கொண்டிருக்க விடவில்லை. மெல்ல மெல்ல மாற்றம் நடந்தது.
பலேர்மேவின் வசந்த காலம்: 1983-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மாஃபியாவுக்கு ஆதரவு இல்லாத குழுக்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் காவலர்கள், மாஃபியா கும்பலை கைது செய்யத் தொடங்கினர். இதன் காரணமாக மாஃபியா கும்பலை சேர்ந்த 450 பேர் விசாரணைக்குட்டப்படுத்தப்பட்டனர்.
மாஃபியா கும்பலுக்கு எதிராக மக்கள் சாட்சியாளர்களாக மாறினர். இத்தாலியில் 1985 முதல் 1990 வரை கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் புரட்சி நடந்தது. இந்தக் காலக்கட்டத்தைதான் பலேர்மேவின் வசந்த காலம் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றுக்கு எல்லாம் ஒர் உந்து சக்தியாக லெடிசியாவும், அவரது புகைப்படங்களும் இருந்தன. எனினும், மாஃபியாவால் 1992 மற்றும் 1993-இல் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் நீதிபதிகள், காவலர்கள் என பலர் கொல்லப்பட்டனர்.
இத்தாலி அரசின் நீதி, அரசாங்கம், நிதி மற்றும் கலாசாரத்தின் சின்னங்களை குறைவைத்து சிசிலியன் மாஃபியா தாக்கியது. தங்களது குற்றங்களுக்கு எதிராக உள்ள சட்டங்களை வலுவிழக்கச் செய்யும்படி அரசியல்வாதிகளை மிரட்டுவதற்கே இத்தகைய குண்டுவெடிப்புகளை சிசிலியன் மாஃபியா நடத்தியது. இருப்பினும் இறுதியாக மக்களின் போராட்டம் மாஃபியாவை வென்றது.
இத்தாலியில் சிசிலியன் மாஃபியா ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாட்களில் லெடிசியா எடுத்த புகைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பறியது. இதற்காக பல விருதுகளை லெடிசியா வென்றுள்ளார். தனது வாழ்நாள் முழுவது சிறு கேமராவுடனே பயணித்த லெடிசியாவை கவுரவிக்கும் நோக்கில் ’Shooting the Mafia’ என்ற பெயரில் அவரது வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது.
சுமார் 50 வருடங்களாக எந்தவித அச்சமுமின்றி, துணிச்சலுடன் சிசிலியன் மாஃபியாவின் குற்றங்களை கேமராவின் மூலம் பதிவுச் செய்து கொண்டிருந்த லெடிசியாவின் மரணம் இயற்கையான ஒன்றாக அமைந்திருக்கிறது.
லெடிசியாவின் இறப்பை பற்றி இரங்கல் எழுதிய பெரும்பாலனவர்கள் ஆச்சரியத்துடன் ஒரு வரியை குறிப்பிட்டிருந்தனர்... "சிசிலியன் மாஃபியாவின் கைகளால் லெடிசியா கொல்லப்படவில்லை..!”
உறுதுணை: The Conversation
தொடர்புக்கு: indumathyg.@hindutamil.co.in