வலது: ஆஸ்துமா சிகிச்சை நிபுணர் டாக்டர் கமல் 
வாழ்வியல்

ஆஸ்துமாவின் தாக்கத்தை கண்டறிவது எப்படி? | மே 6 - இன்று உலக ஆஸ்துமா தினம்

எம்.கே.விஜயகோபால்

"குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா தாக்கம் சில நேரங்களில் விபரீதமாக முடியலாம். அதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் ஆஸ்துமா தாக்கம் பற்றிய புரிதல் மற்றும் முதலுதவி சிகிச்சை எப்படி பெறுவது என்பதை அறிந்து இருப்பது நல்லது" என்று திருச்சியை சேர்ந்த ஆஸ்துமா சிகிச்சை நிபுணர் டாக்டர் கமல் கூறினார்.

இதுகுறித்து திருச்சியை சேர்ந்த ஆஸ்துமா சிகிச்சை நிபுணர் டாக்டர் கமல் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாக, "ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன்முயற்சி" (Global Initiative for Asthma-Gina) என்ற அமைப்பு அறிவித்தது. சுமார் 150 நாடுகளில் கடந்த 25 ஆண்டுகளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆஸ்துமா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தாக்க கூடிய வியாதி. உலகம் முழுவதும் சுமார் 26 கோடி பேர் ஆஸ்துமா நோயாளிகளாக உள்ளனர். அதில் ஆண்டுதோறும் சுமார் 4.5 லட்சம் நோயாளிகளின் இறப்புக்கு காரணமாக ஆஸ்துமா நோய் அமைகிறது.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு, வெகுவாக மாறிவரும் வாழ்வியல் மாற்றங்கள், அலர்ஜி, ஒவ்வாமை, பரம்பரை வியாதிகள், அதிக மனஅழுத்தம், செல்லப்பிராணிளை உட்புறமாக, வெளிப்புறமாக வைத்து இருப்பது போன்றவை ஆஸ்துமா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. நடப்பாண்டில் ஆஸ்துமா நோயாளிகள் தினம், 'தினசரி சரியான உணவுப் பழக்கம், முறையான உடற்பயிற்சி, சரிவர மருந்துகளை உட்கொள்வது, வாய் மூலம் இன்ஹேலர் மருந்து உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் ஆஸ்துமா நோயாளிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்' என்பதை கருப்பொருளாக கொண்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா தாக்கம் சில நேரங்களில் விபரீதமாக முடியலாம். அதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் ஆஸ்துமா தாக்கம் பற்றிய புரிதல் மற்றும் முதலுதவி சிகிச்சை எப்படி பெறுவது என்பதை அறிந்து இருப்பது நல்லது.

ஆஸ்துமா நோயாளிகள் இருமல், மூச்சுத்திணறல், இருமலுடன் கூடிய வாந்தி, தீவிர அடுக்கு தும்மல், நெஞ்சில் இருக்கமாக உணர்தல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். நுரையீரல் செயல்திறன் ஆய்வு, Feno ஆய்வு என்ற பகுதியளவு வெளியேற்றப்பட்ட நைட்ரிக் ஆக்சைடு" (Fractional Exhaled Nitric Oxide) ஆய்வு, அலர்ஜி சோதனை போன்றவை ஆஸ்துமா தாக்கத்தை கண்டறிய உதவும்.

ஃப்ளு, நிமோனியா தடுப்பூசிகள் ஆஸ்துமா நோயாளிகள் எடுத்துக்கொள்வது நல்லது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். அவர்களின் பரிந்துரையின்படியே மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். தானாக மருந்தகங்களுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கி உட்கொள்வது ஆஸ்துமா நோயாளிகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT