''முழுமையான சமூகநீதி வழங்கப்பட மாநில அரசே சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்'' - அன்புமணி

''முழுமையான சமூகநீதி வழங்கப்பட மாநில அரசே சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்'' - அன்புமணி
Updated on
2 min read

சென்னை: தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் வசதியாக மாநில அரசின் வாயிலாக சாதிவாரி சர்வே நடத்த முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்துடன் அங்கு பட்டியல் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள 101 சாதிகளின் சமுக பின் தங்கிய நிலை, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதற்கான சாதிவாரி சர்வே நேற்று தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பட்டியலின மக்களுக்கு சமூகநீதி வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

பட்டியலின மக்களின் சமூக, பொருளாதார நிலையை அறிவதற்கான இந்தக் கணக்கெடுப்புக்கு மொத்தம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மே 5-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு 60 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 65 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொருமுறையும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் போது, பட்டியலின, பழங்குடியின மக்களின் எண்ணிக்கையும் சாதிவாரியாக கணக்கிடப்படும். அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதும் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி கர்நாடகத்தில் பட்டியலினத்தில் 101 சாதிகள் இருப்பதும், அவர்களின் மக்கள்தொகை 1.30 கோடி என்றும் தெரியவந்திருக்கிறது.

ஆனாலும், பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க இந்தத் தகவல்கள் போதுமானவை அல்ல என்பதால் தான் பட்டியலின மக்களுக்கு மட்டுமான சிறப்பு சாதிவாரி சர்வேயை கர்நாடக அரசு மேற்கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் 2015-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயின் போது ஒவ்வொருவரிடமும் 57 வினாக்கள் எழுப்பப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டன.

57 வினாக்கள் மூலம் பெறப்பட்ட விவரங்களே பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு போதுமானவை அல்ல எனும் போது, மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது வழக்கமான தரவுகளுடன் கூடுதலாக பெறப்படும் சாதி என்ற ஒரே ஒரு விவரம் மட்டும் எப்படி முழுமையான சமூகநீதி வழங்க போதுமானதாக இருக்கும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வினா ஆகும்.

தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் தேசிய அளவில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதற்கு மட்டும் தான் போதுமானதாக இருக்கும். சமூகத்தில் எந்தெந்த சாதிகள் சமூகநிலை, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட கூறுகளில் மிகவும் பின் தங்கியுள்ளன என்பதை அறிய தெலங்கானா, பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி சர்வே கட்டாயம் ஆகும்.

எனவே, தமிழக அரசு இந்த சிக்கலில் உறங்குவது போல நடிப்பதை விடுத்து உண்மை நிலையை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் வசதியாக மாநில அரசின் வாயிலாக சாதிவாரி சர்வே நடத்த முன்வர வேண்டும். மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாகவே இதை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in