கம்பம்: கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவ பட்டத்துக்காரராக 7வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் பகுதியில் அருள்மிகு நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவம் உள்ளது. இங்கு விக்ரக வழிபாடு எதுவும் கிடையாது. சுமார் 600 நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் பட்டத்துக்காளை ஒன்று தேர்வு செய்யப்பட்டு அதையே தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு சனி, அமாவாசை, தைப்பொங்கல், ரோகிணி நட்சத்திரம் உள்ளிட்ட தினங்களில் இந்த மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். பலரும் வாழைப்பழம், அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை வழங்குவர். இங்கு பூஜை உள்ளிட்ட இதர நிர்வாகங்களுக்கு கோடியப்பகவுடர், பூசாரியப்பனார், பெரியமனைக்காரர், பட்டத்துக்காரர் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பதவிகளில் உள்ளவர்கள் கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்படுகின்றனர்.
தங்களின் தாய்,தந்தை, மகன் உள்ளிட்ட எந்த ரத்த உறவுகள் இறந்தாலும் அந்த துக்கநிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள். இறந்தவர்களின் உடலையும் பார்க்கக் கூடாது. பட்டத்துக்காளை இறந்தால் மட்டுமே அதற்கு இறுதி மரியாதை செலுத்துவார்கள். சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தையும் இவர்களே முன்னின்று நடத்துவர். இந்நிலையில் பட்டத்துக்காரர் பொறுப்பில் இருந்தவர் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதனைத் தொடர்ந்து புதிய பட்டத்துக்காரருக்கான தேர்வு நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவ வளாகத்தில் நடைபெற்றது. இதற்காக வாரிசுதாரர்கள், ஒக்கலிக கவுடர் வகையறாக்களைச் சேர்ந்த பலரும் விரதம் இருந்து தேர்வுக்காக வரிசையாக அமர்ந்திருந்தனர்.
இதில் கோடியப்பகவுடருக்கு மாலை அணிவித்து தீபம் காட்டி அருள் ஏற்றப்பட்டது. உருமியடித்து உச்சநிலைக்கு அருள் ஏறிய நிலையில் அவர் ஆனந்தகுமார் என்பவரது மகன் ஆதவன் (7) மீது மாலை போட்டார். இதையடுத்து சிறுவன் ஆதவன் புதிய பட்டத்துக்காரராக தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், “இந்த சிறுவன் எல்லா குழந்தைகளையும் போல வழக்கம்போல குடும்பத்துடனே இருப்பார். பள்ளிக்குச் செல்வார். ஆனால் எந்த ஒரு இறப்பிலும் பங்கேற்கக் கூடாது. நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவத்தில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்வார்” என்றனர். பட்டத்துக்காரராக தேர்வு செய்யப்பட்ட ஆதவனுக்கு புத்தாடை வழங்கி, மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.