

தூத்துக்குடி: சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இரவு முழுவதும் விடிய விடிய வழிபாடு நடத்தினர்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் உள்ளது. பவுர்ணமி தோறும் கொங்கு மண்டல பகுதியை சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பவுர்ணமி தினத்தன்று கோயில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கியிருந்து சமுத்திரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி இந்த ஆண்டும் அவர்கள் திருச்செந்தூர் வந்து கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தங்கியிருந்து சமுத்திரத்துக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கியிருந்து சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழிபாடு நடத்தினர். நடனம்உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளால் திருச்செந்தூர் கடற்கரை விடிய விடிய களை கட்டியிருந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில்சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டனர். இதனால் விடுதிகள், மண்டபங்கள் முழுவதும் நிரம்பியது.
கந்த சஷ்டி விழாவுக்கு இணையாக பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூரில் அலை மோதியது. இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் நேற்று காலை கடலில் புனித நீராடி கோயிலில் வழிபாடு நடத்தினர். இதனால் கடற்கரை, கோயில் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்ததால் ஏராளமான வாகனங்கள் திருச் செந்தூரில் குவிந்தன.
கோயில் வளாகத்தில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடப்பதால் போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாமல் அனைத்து வாகனங்களும் நகர பகுதியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நகரில் முன் எப்போதும் இல்லாத வகையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இட வசதியில்லாமல் தெருக்களின் மூலைமுடுக்குகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று மாலைவரை திருச்செந்தூரில் பக்தர்கள்கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.