வாழ்வியல்

நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பாரம்பரிய பகுதிகளை பார்வையிட்ட வெளிநாடுவாழ் தமிழ் மாணவர்கள்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தமிழக அரசின் வேர்களை தேடித் திட்டத்தின் மூலம் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பாரம்பரிய இடங்களை வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளில் குடியேறிய குழந்தைகளுக்கு தமிழகத்தின் பாரம்பரியம் பண்பாடு மரபுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசால் வேர்களை தேடி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆஸ்திரேலியா, பிஜி தீவுகள், கனடா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 58 பேர் கொண்ட முதல் குழு கடந்த 15-ம் தேதி தமிழக வந்தடைந்தது.

இவர்கள் தமிழகத்தில் பாரம்பரிய இடங்களான மகாபலிபுரம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாரம்பரிய சின்னங்களையும், இடங்களையும் பார்வையிட்டு வருகிறார்கள். இவர்கள் தமிழகத்தின் பாரம்பரியம் பண்பாடு உணவு பழக்க வழக்கம், கலாச்சாரம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்ட இம்மாணவ, மாணவியர் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது . தொடர்ந்து கோயில் ஊழியர்கள் அவர்களை அம்பாள் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், கோவில் பிரகாரத்தில் உள்ள கலைநயம் மிக்க சுவாமி நெல்லையப்பர் சந்நிதி, தாமிர சபா மண்டபம் உள்ளிட்டவைகளுக்கு அழைத்துச் சென்று பார்வையிட செய்தனர்.

அங்குள்ளசிலைகள் குறித்தான விளக்கங்களையும் பூஜை முறைகள் குறித்தான விளக்கங்களையும் அளித்தனர். கோயிலில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை தரிசனம் செய்த அவர்கள் கோவிலில் விளக்கேற்றி வழிபாடும் மேற்கொண்டனர். இதையடுத்து திருநெல்வேலி ஷ்ரிபுகத்திலுள்ள வஉசிதம்பரனாரின் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றை கேட்டறிந்தனர்.

இது குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ கூறியதாவது: “தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் அரசின் செலவில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளை வேர்களை தேடி என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்து பல்வேறு பகுதிகளை பார்வையிட ஏற்பாடு செய்துள்ளனர். அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவைகளை கண்டறிந்துள்ளோம்.

நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் இதுபோன்று பெரிய கோயில்களை பார்க்க முடியாது. நாங்கள் இதை பார்த்து பிரம்மிப்படைந்துள்ளோம் உள்ளோம். தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எடுத்துச் சென்று தெரிவிக்க இருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT