கோவில்பட்டி அருகே கீழமுடிமண் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண் கிராமத்தில், தமிழக முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடந்தது.
கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண் கிராமத்தில் மக்களை நோக்கி மருத்துவம் திட்டம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு, தமிழக முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
மேலும், பெண் சுகாதாரத் தன்னார்வலர்களுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கினார். சுகாதாரத் துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். முடநீக்கு சிகிச்சைகள், நோய் நீரிழிவு ஆகிய சிகிச்சைகள் செய்யப்பட்டு, வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசுகையில், “தமிழ்நாடு முதல்வரின் சிறப்புத் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்பது தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகளை வீட்டிலேயே கொடுத்து, பரிசோதிக்கும் திட்டமாகும். தமிழ்நாடு முழுவதும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 46 ஆயிரம் பேர், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 19 ஆயிரம் என மொத்தம் 65 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 5,488 பேரும், கருங்குளம் வட்டாரத்தில் 2,798 பேரும் பயன்பெறுவார்கள். மேலும், இதுதவிர முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதியோர்கள் மற்றும் படுத்த படுக்கையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று முடநீக்கு சிகிச்சையாளர்கள் மற்றும் நோய் ஆதரவு செவிலியர்கள் மூலம் சிகிச்சையளித்து குணமடையவும், தமிழ்நாடு அரசால் இந்த மகத்தான மருத்துவ சேவை செய்வதற்கு அதற்கான வாகன வசதியும், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு ஊன்றுகோல் போல் உதவிகரமாக இருக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் துறையினர் சென்று தேவையான பரிசோதனைகளைச் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்குவார்கள்“ என்று அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
விழாவில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், இணை இயக்குநர் நலப்பணிகள் மருத்துவர் முருகவேல், கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழுத் தலைவர் ரமேஸ், துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
