மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1.81 கோடி அளவில் நிதியுதவி அள்ளிக் கொடுத்த மதுரை அப்பள வியாபாரி ராஜேந்திரனை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயது அப்பள வியாபாரி ராஜேந்திரன். இவரது நிறுவனத்தின் பெயர் ‘திருப்பதி விலாஸ்’. இவர் அப்பளம் தவிர, சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரமும் செய்கிறார். விருதுநகரை சொந்த மாவட்டமாக கொண்ட இவர், சிறுவனாக இருந்தபோது ஒரு கடையில் சிறுவனாக பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு கையில் 300 ரூபாயுடன் மதுரை வந்த இவர், தொழில் தொடங்கி இன்று சிறந்த தொழில் முனைவோராக சாதித்துக் காட்டியுள்ளார். வியாபாரத்தில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ஏழை, எளிய குழந்தைகள் படிப்புக்கும், மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டிகொடுப்பதற்கு அள்ளிக் கொடுத்து கொடை வள்ளலாகவும் திறந்து விளங்குகிறார்.
குறிப்பாக, 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் போன்வற்றை ரூ.1.10 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு ரூ.71 லட்சத்து 45 ஆயிரத்தில் மாநகராட்சி கைலாசாபுரம் ஆரம்பப்பள்ளிக்கு 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, கழிப்பறைகள், மாணவர் அமர்ந்து உண்ணும் இடம் போன்றவை கட்டிக் கொடுத்துள்ளார்.
அடுத்ததாக மாநகராட்சி திரு.வி.க.மாநகராட்சி பள்ளிக்கு சமையல் அறை ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால், இவரது மனிதநேயமும் வெளிச்சத்திற்கு வராமல் இருந்தது. இதுகுறித்து முதல் முறையாக தமிழ் இந்து திசை இவரை பற்றி விரிவான செய்தி வந்ததின் அடிப்படையில் தற்போது அவரை ஏராளமானோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தகவல் அறிந்த மதுரையைச் சேர்ந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, அப்பள வியாபாரி ராஜேந்திரனை நேரில் சந்தித்து தனது வாழ்த்தையும், பாராட்டையும் இன்று தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த சாலோமன் பாப்பையா, சமீபத்தில் தான் மதுரையில் படித்த மாநகராட்சி பள்ளிக்கு புதிய வகுப்பறை ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சாலமன் பாப்பையா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மருத்துவமும், கல்வியும் வியாபாரமாகும்போது ஒரு சமூகம் அழிந்துவிடும். ஒரு சமூகம் நன்றாக இருக்க மருத்துவமும், கல்வியும் இலவசமாக இருக்க வேண்டும். கல்வி இலவசமாக இருக்கக் கூடிய இடங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும். அதனை கட்டி வளர்க்க வேண்டும். அதற்காகதான் நானும் மாநகராட்சி பள்ளிக்கு நன்கொடை கொடுத்தேன். ஆனால், ‘இந்து தமிழ் திசை’ செய்தி ஒன்றில் அப்பள வியாபாரி ராஜேந்திரனின் நன்கொடை விவரம் குறித்து வந்த செய்தியைப் பார்த்து திகைத்துப்போய்விட்டேன். அந்தளவுக்கு இவர் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கணும் என்ற அவசியம் இல்லை. அதையும் கொடுத்து இருக்கிறார் என்றால் இவர் ஒரு மகான். இவர்தான் திருவள்ளுவர்.
கோயில்களுக்கு நிறைய வருமானம் வருகிறது. அதை அந்த வருவாயை வைத்து பார்த்துக் கொள்ளலாம். வருமானம் இல்லாத இடம் பள்ளிக்கூடம்தான். அதனால், பணம் இருக்கக் கூடிய பணக்காரர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் அரசு பள்ளிகளுக்கு உதவ முன் வர வேண்டும். அதற்கு மிகப் பெரிய வழிகாட்டிய இருக்கக் கூடியவர் கோடிகளை அள்ளிக் கொடுத்த நமது ராஜேந்திரன் அய்யா. அவரது நிழல் நிற்கக் கூடிய தகுதி எனக்கு இல்லை. இவர் இவ்வளவுக்கு பள்ளிக்கூடம் கூட சென்றதில்லை. மதுரையில் உள்ள பள்ளியிலும் படிக்கவில்லை. அவர் கொடுத்த பணத்தைவிட அவர் உள்ளம் ரொம்ப பெரிதாக உள்ளது'' என்றார்.