புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்டது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பிப்ரவரியில் பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார்.
இதையடுத்து மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டு, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பிறகு இது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிப்ரவரி 12-ம் தேதி முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இருவர் தவிர மற்ற அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மணிப்பூர் பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் யும்நம் கேம்சந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் இவர் மணிப்பூர் முதல்வராக பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக குகி சமூகத்தை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சரான நெம்சா கிப்கென் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.