இந்தியா

“இந்து நாடு குறித்து அச்சம் தேவை இல்லை” - பாபா ராம்தேவ் கருத்தும் காங்கிரஸ் எதிர்வினையும்

மோகன் கணபதி

புதுடெல்லி: ‘இந்து நாடு’ குறித்து அச்சம் தேவையில்லை என யோகா குரு பாபா ராம் தேவ் கூறிய கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், “‘இந்து ராஷ்ட்ரம்’ என்ற கருத்தாக்கத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய கல்வி நிறுவனமான தியோபந்த் ஹரித்வாருக்கு அருகில் உள்ளது. 2009ம் ஆண்டு நான் அங்கு அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் மத்தியில் நான் பேசும்போது, நமது மதங்கள் வேறுபடலாம். ஆனால், நமது முன்னோர்கள் ஒன்றே. ‘இந்து ராஷ்ட்ரம்’ என்ற கருத்தாக்கத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. நம் அனைவரின் முன்னோர்களும் சனாதன இந்துக்களாகவே இருந்தனர். இது நம் கண் முன் உள்ளது. என்று கூறினேன்.

சிலர், ‘இந்து ராஷ்ட்ரம்’ நிறுவப்பட்டால் முஸ்லிம்கள் எங்கே செல்வார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். உங்கள் முன்னோர்களின் மரபுகளைத் தழுவுங்கள். நீங்கள் தாடி வைத்திருக்கலாம் அல்லது மழித்துவிடலாம். நீங்கள் விரும்பும் ஆடையை அணியலாம். ஆனால், உங்கள் முன்னோர்களைப் போன்ற குணநலன்களைக் கொண்டிருங்கள். இந்துஸ்தானில் முஸ்லிம்களுக்கோ அல்லது கிறிஸ்தவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

பாபா ராம்தேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “‘இந்து ராஷ்ட்ரம்’ பற்றி பேசுபவர்களிடம் கேளுங்கள், அவர்கள் மனதில் என்ன இருக்கிறது அல்லது எந்த சூழலில் இதைச் சொல்கிறார்கள் என்று. அனைவரும் சனாதனிகள் என்றால், ஏன் இங்கே இவ்வளவு பிளவுகளை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன? அனைவரையும் சனாதனிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஏன் பிளவுகளை உருவாக்க முயல்கிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான் கூறும்போது, “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று வரையறுக்கும் அரசியலமைப்பின்படியே நாடு இயங்குகிறது. தொடர்ந்து அப்படித்தான் இயங்கும். இது ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆகிவிட்டது என்று உங்களிடம் யார் சொன்னது? நமது நாடு இந்து நாடாக அறிவிக்கப்பட்டுவிட்டதா என்று பிரதமரிடம் நான் கேட்கிறேன்.

ஒரு முஸ்லிம் யாருக்கும் அஞ்சுவதில்லை. நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு, அரசியலமைப்பின் வரம்புக்குள் எங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிகிறதா? அரசியலமைப்பை மதியுங்கள். அரசியலமைப்பின் வரம்புக்குள் பேசுங்கள். இதுபோன்று வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.

ஜமியத் உலமா இ ஹிந்த்தின் தலைவர் மவுலானா சிராஜ் கான் கூறுகையில், “முதலில் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். பாபா ராம்தேவ் யார்? இந்த நாடு அரசியலமைப்பின் படி நிர்வகிக்கப்பட வேண்டுமா எல்லது பாபா ராம்தேவ் கூறுகிறபடியா? இஸ்லாமிய நம்பிக்கையின்படி பூமியின் முதல் மனிதர் நபி ஆதாம் என்று எங்கள் தலைவர் மவுலானா சையத் ஹர்ஷத் மதானி தெளிவாகக் கூறியுள்ளார். அவருக்கு முன் மனிதர்கள் யாரும் இல்லை. அவரே ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இதுபோன்ற விஷயங்களில் பாபா ராம்தேவின் கருத்துக்களை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT