

சென்னை: கரூர் கோயில் நில விவகாரத்தில் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதான கோயில்களின் சொத்து விவகாரத்தில் பல ஆண்டுகளாகப் பதிவுத் தடையில் இருந்த 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான தடை ஆணையை தமிழக அரசு விலக்கிக் கொண்ட நடவடிக்கையானது, தமிழக இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது மிக மிக முக்கியமானது. அதே சமயத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை யாரும் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதும் முக்கியமானதாகும்.
இனாம் என்றால் என்ன?: மன்னர்கள் அல்லது அரசு சேவை, சமயப் பணி, கல்வி, தொண்டு போன்ற காரணங்களுக்காக தனிநபர், கோயில், மடம், அறநிலையம் அல்லது நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அல்லது சலுகையுடன் வழங்கிய நிலம்தான் இனாம் நிலம்.
கோயில்களுக்கு வழங்கப்படுவது தேவதானம், பிராமணர்களுக்கு வழங்கப்படுவது பிரம்மதேயம், மடங்களுக்கு வழங்குவது மட இனாம், கிராம சேவையாளர்களுக்கு வழங்குவது சர்வீஸ் இனாம், தனிநபர்களுக்கு வழங்கப்படுவது தனிநபர் இனாம் என இனாம் 5 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
தற்போது எழுந்துள்ள பலவிதமான கருத்துக்களும், சர்ச்சைகளும், தமிழ்நாடு இனாம் எஸ்டேட்ஸ் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 மற்றும் தமிழ்நாடு சிறு இனாம்கள் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி முறையாக மாற்றம் செய்தல்) சட்டம், 1963 ஆகிய சட்டங்களின் அடிப்படையில் 1963 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பேரில் எழுகிறது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இந்த சட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 1. இனாம் நிலங்களின் பழைய உரிமை அரசு வசமாகும். 2. தகுதியுள்ள உழவர்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்படும். 3. நில வகைப்பாடு மற்றும் உரிமை ஆய்வு செய்யப்படும்.
ஆனால் அப்போதிருந்து இன்று வரை இந்த நிலங்களின் வகைகளைப் பிரிப்பதில், ஆய்வு செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிலவி வந்திருக்கின்றன. கோயிலுக்குச் சொந்தமானது எது, தனி நபர்களுக்குச் சொந்தமானது எது என்பது பற்றி நீண்ட நெடிய குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் அரசு வெகுவேகமாகச் செயல்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசுக்கு கேள்விகள்: இவ்விவகாரத்தில் சில முக்கியக் கேள்விகளுக்கு அரசு தெளிவாக பதில் அளிக்க வேண்டியுள்ளது:
1. கோயில் நிலங்கள் மீதான தடையை நீக்கும் அவசரம் எதனால்? குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு அழைப்பாணை அறிவித்திந்த நிலையில், 9 ஆம் தேதி அன்றே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் துரித கதியில் செயல்பட்டு உடனே அமல்படுத்தும் அளவிற்கு என்ன அவசரநிலை?
2. அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்காக, கோயில் நிலங்கள் அரசியல் முதலீடாக பயன்படுத்தப்பட்டனவா?
3. தமிழக மன்னர்கள், நாயக்க மன்னர்கள் மற்றும் விஜய நகர மன்னர்கள் கோயிலுக்காக கொடுத்த நிலங்கள், கோயில் பணியாளர்கள் பயன்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டன. அப்படியிருக்க, இவை கோயில் நிலங்கள் இல்லையென எவ்வாறு கூற முடியும்?
4. மேலும், கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலின் 507.88 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உத்தரவிட்ட மதுரைக் கிளை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களில் 27 அரசு அதிகாரிகள், 49 தொழிலதிபர்கள், 38 செல்வாக்கு மிக்க நபர்கள் உள்ளனர் என்று கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும், "ஏழை கடவுளுக்கு வாக்குரிமை இல்லை; ஆனால் வலிமைமிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு மதிப்புமிக்க வாக்குகள் உள்ளன" என்று நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ள நிலையில், அரசு இத்தகைய விரைவு நடவடிக்கையை மேற்கொண்டது வியப்பையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.
5. தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் – 1959, உருவாக்கப்பட்டதே கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குத்தான். ஆனால், தற்போதைய அரசின் நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்க்கும் விதமாகவே அமைந்துள்ளன. அரசாய் இருந்தாலும், அடிதட்டு மக்களாய் இருந்தாலும் கோயில் சொத்துக்கு ஆசைப்பட்டால் குலநாசம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு.
எங்களது வேண்டுகோள்கள்:
1. தற்போதைய அரசின் நிலைப்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். 2. இந்த விவகாரத்தில் உள்ள முழு உண்மையையும் கண்டறிய, உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஒரு தனித்தியங்கும் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். 3. கோயில் நிலங்களைப் பாதுகாப்பதுடன், உண்மையான விவசாயிகளின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த அவசரத் தேவையை உணர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.